பாரிஸில் நடைபெறவுள்ள ஜி-ஏழு உச்சி மாநாட்டிற்கு இந்தியாவிற்கு அழைப்பு.

( முன்னாள் இந்திய தூதரக அதிகாரி,  தூதர் அஷோக் சஜான்ஹர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – சத்யா அசோகன்)

தெற்கு ஃப்ரான்ஸிலுள்ள பியாரிட்ஸ் நகரில் ஆகஸ்ட் மாதம் 24-லிருந்து 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 45 ஆவது ஜி ஏழு உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோதி கலந்து கொள்கிறார்.  ஆஸ்திரேலியா, சிலி மற்றும் தென் ஆப்ரிக்காவுடன் இந்தியாவையும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.  ஜி ஏழு அமைப்பானது, தனது உச்சி மாநாடுகளின்போது, தற்போது உலகத்தை அழுத்தி கொண்டிருக்கும் சவால்களை எதிர்கொள்வது குறித்து வெளிப்படையான விவாதங்கள் நிகழ்த்துவதற்கு உலகின் முக்கியத் தலைவர்களை அழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்பிடத்தக்க பொருளாதாரம் மற்றும் அரசியல் சக்தியாக இந்தியா உலக அரங்கில் மேலும் மேலும் உயர்ந்து வருவதையும், இந்தியாவுக்கும், ஃப்ரான்சுக்கும் இடையேயான செயல் தந்திர கூட்டாளித்துவம் வலுப்பட்டு விரிவடைந்து வருவதையும், பிரதமர் திரு மோதிக்கும் ஃப்ரான்ஸ் அதிபர் திரு மேக்ரோனுக்கும் இடையேயான தனிப்பட்ட புரிதலையும் நட்பையும் வெளிப்படுத்துவதையும் இந்த அழைப்பு எடுத்துக்காட்டுகிறது. .

அழைப்பு விடுக்கையில் அதிபர் மேக்ரோன் அவர்கள், உலகமயமாக்கலை ஊக்குவிப்பதிலும், சுற்றுச் சூழலைக் காப்பாற்றுவதிலும் இந்தியா ஆற்றி வரும் முக்கியப் பங்கு பற்றி குறிப்பிட்டுள்ளார்.  2015 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற சி.ஓ.பி மாநாட்டின் போது, அப்போதைய  ஃப்ரான்ஸ் அதிபர் ஃப்ராங்காய்ஸ் ஹாலண்டுடன் இணைந்து திரு மோதி அவர்கள் சர்வதேச சூரிய கூட்டணியைத் துவங்கி வைத்தார்.  பின்னர்,  ஜூன் 2017-இல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார  மன்ற மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர், அங்கிருந்து நேராக பாரிசுக்கு சென்று, தேர்தலில் வெற்றி பெற்றிருந்த மேக்ரோன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.  பாரிஸ் ஒப்பந்ததிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில நாட்களுக்குப் பின் நடந்த நிகழ்வாகும் இது.  பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் அளித்த உறுதிமொழிகளைத் தொடர்ந்து பின்பற்றுவோம்,  நிறைவேற்றுவோம் என்று பிரதமர் மோதி, அதிபர் மேக்ரோன் ஆகிய இருவரும் இணைந்து அறிவித்தனர்.  2018 இல் ஃப்ரான்ஸ் அதிபர் மேக்ரோன் இந்தியாவிற்கு வருகை தந்த போது,  இந்த முயற்சிக்கு உத்வேகம் அளிப்பதற்காக சர்வதேச சூரிய கூட்டணியின் முதல் மாநாடு நடத்தப்பட்டது.

உலகமயமாக்கல்,  பருவநிலை மாற்றம் மற்றும் அதற்கான நீதி போன்ற விஷயங்களில் மட்டுமல்லாமல்,  பயங்கரவாதம் குறித்தும் பிரதமர் திரு மோதியும், அதிபர் திரு மேக்ரோனும் ஒரே நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றனர்.  இரு நாடுகளுமே பயங்கரவாதத்தை  முற்றிலும் சகிப்பதில்லை என்ற கொள்கையையும், பயங்கரவாதத்தை முறியடிக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளை எடுப்பது என்ற முடிவையும் கொண்டிருக்கின்றன.  மாலத்தீவு நாடாளுமன்றத்தில் இந்த மாதம் 8 ஆம் தேதி உரையாற்றிய இந்திய பிரதமர், பயங்கரவாதம் குறித்து சர்வதேச மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று கூறியதை ஃப்ரான்ஸ் ஆதரித்துள்ளது.

ஜி ஏழு குழுவில் உள்ள ஏழு நாடுகளும் உலகின் மிகப்பெரும், வளர்ந்த பொருளாதாரங்களாகும்;  உலகின் மொத்த செல்வத்தில் 58 சதவிகிதத்தையும், பெயரளவிலான மதிப்பின் அடிப்படையில், உலகின் மொத்த உள் உற்பத்தியில் 46 சதவிகிதத்திற்கும் அதிகமாகவும், வாங்கும் திறன் அடிப்படையில், மொத்த உள் உற்பத்தியில் 32 சதவிகிதத்தையும் கொண்ட நாடுகளாகும் இவை.  இந்த ஜி ஏழில்,  கானடா, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அடக்கம்.

ஜி ஏழு உச்சி மாநாடுகளில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரதிநிதித்துவம் தரப்படுகிறது.  1975 ஆம் ஆண்டு இந்தக் குழுவானது ஜி ஆறு என்று ஃப்ரான்ஸால் உருவாக்கப்பட்டது; அடுத்த வருடம் இக்குழுவில் கனடாவும் இணைக்கப்பட்டு ஜி ஏழு என்று மாறியது.  1997ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஜி எட்டாக இருந்தது. பின்னர் 2014-ல் கிரிமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதால் இக்குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டதினால், ஜி ஏழாகவே தொடர்கிறது.

ஜி ஏழு அமைப்பானது ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, உலகப் பொருளாதாரம் மற்றும் நிதி வளர்ச்சி, மேம்பாடுகள் போன்றவை குறித்து விவாதிப்பது, உலக வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஒழுங்குபடுத்த நடவடிக்கைகள், முடிவுகள் எடுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது.   ஜி ஏழு அமைப்பானது, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் எரி ஆற்றல் கொள்கைகளை ஒருங்கிணைப்பதில் முக்கியமான அமைப்பாக இருந்து வருகிறது.  ஆனால் ஜி 20 அமைப்பானது  அரசாங்கங்கள் மற்றும் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்திய வங்கி ஆளுனர்களுக்கான  சர்வதேச அமைப்பாக 1999 ஆம் ஆண்டு  நிறுவப்பட்டபின்னர், ஜி ஏழு அமைப்பின் முக்கியத்துவம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.  2007/8 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நிதி சிக்கல்கள், பிரச்னைகளுக்குப் பின்னர், ஜி இருபது அமைப்பானது நாட்டின் அதிபர்/அரசின் தலைவர் நிலையில் மேம்படுத்தப்பட்டது.  ஆரம்பகாலங்களில் ஜி இருபது, ஆண்டுக்கு இருமுறை மாநாடுகள் நடத்தியது. தற்போது ஆண்டுக்கு ஒரு முறை கூடுகிறது.  இந்தியா தொடர்ந்து பங்கேற்று வருவதுடன்,  கருத்துப் பரிமாற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  இந்த மாதம் 28-29 ஆம் தேதிகளில் ஜப்பானில் ஒசாகாவில் நடக்க உள்ள ஜி இருபது உச்சி மாநாட்டில் பிரதமர் திரு மோதி கலந்து கொள்கிறார்.

ஜி ஏழு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், இந்தியப் பிரதமர் ஃப்ரான்ஸ் நாட்டில் இரு தரப்புப் பயணம் மேற்கொள்வார்.

இந்தியாவின் மேற்குப்புற எல்லைகளிலிருந்து உள் நுழையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவின் நலங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நியாயமான சமச்சீரான பல்தரப்பு வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கும், ஜி ஏழில் பிரதமர் பங்கேற்பது  பெரிதும் உதவும்.

 

Pin It