பிரதமரின் வெற்றிகரமான வளைகுடா நாடுகள் பயணம்.

(ஆல் இந்திய ரேடியோ செய்தி ஆய்வாளர் பதம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன்)

பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் பதவி ஏற்றது முதல், மத்திய கிழக்கு நாடுகளுடனான இந்தியாவின் உறவில் பெருமளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் செயல் உத்தி அளவில் நெருக்கம் அதிகரித்துள்ளது. பிரதமர் மோதி அவர்கள், பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதன் மூலம், இந்தியாவின் தொடர்பு, உலகின்  இந்த மிக முக்கியமான பிராந்தியத்தில் வலிமை பெற்றுள்ளது. பாலஸ்தீனத்திற்கு வெற்றிகரமாகப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, மோதி அவர்கள், அபுதாபி, மற்றும் துபாய்க்கும் பயணம் மேற்கொண்டார். துபாயில் நடைபெற்ற ஆறாவது உலக அரசாங்க உச்சிமாநாட்டில், பிரதமர், கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். அங்கு அவர் தொழில்நுட்பம் மற்றும் முன்னேற்றம் பற்றி முக்கிய உரை ஆற்றினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரும், அபுதாபி அரசருமான ஷேக் கலீஃபா பின் ஸயேத் அல் நஹ்யான் மற்றும் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஸயேத் அல் நஹ்யான் ஆகியோரை பிரதமர் திரு நரேந்திர மோதி சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். ஐக்கிய அரபு அமீரகத்தின் சிற்றரசர் முகமது பின் ரஷீத் அல் மக்தௌம் அவர்களையும் பிரதமர் திரு நரேந்திர மோதி சந்தித்தார்.

இருநாடுகளுக்கும் இடையே, பிரதிநிதிகள் குழு அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஐக்கிய அரபு அமீரகத்துடன், எரியாற்றல் குறித்த முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை இந்தியா மேற்கொண்டுள்ளது. ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமையில் ஐஓசி பிபிஆர்எல் ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குமிடையே மனித ஆற்றல் துறையிலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 33 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் அந்நாட்டில் பணிபுரிகின்றனர். இரயில்வே துறையில், சாத்தியமான ஆய்வுகளுக்காக, இந்திய இரயில்வேத் துறை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவத்துத் துறைக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

வளைகுடா நாடுகளுடனான உறவின் முன்னுரிமை, மற்றும் விரிவடைந்த அண்டைக் கடல் நாடு என்ற அடிப்படையில், தமது இப்பயணத்தை நோக்குவதாக, பிரதமர் கூறினார். இந்தியா, அமீரகத்துடன் பல்நோக்குக் கூட்டணியைக் கொண்டுள்ளது  என்று இந்திய வெளியுறவுத் துறை, தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தக் கூட்டணிக்கு உறுதுணையாக மேலும் புதிய தூண்களை நாம் சேர்த்துள்ளோம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா, பொருளாதாரத் தூணையும் இதில் சேர்த்துள்ளது. அதுவே இந்த அரசின் முக்கிய நோக்கம் ஆகும். அமீரகத்தில் இந்து கோவில் கட்டுவதற்காக இடம் அளித்ததற்கு, அபுதாபி நாட்டின் அரசுக்கும், மன்னருக்கும் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் நன்றி தெரிவித்தார்.

பயணத்தின் இறுதிக்கட்டமாக, சுல்தான் கபூஸ் பின் ஸயேத் அவர்களின் அழைப்பின் பேரில் மஸ்கட்டுக்கும் பிரதமர் பயணம் மேற்கொண்டார். இரு தலைவர்களும்  இருதரப்பு, பிராந்திய மற்றும் உலக விவகாரங்களில், பொதுவான நலன்கள் குறித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். சுமுகமான மற்றும் நட்புச் சூழலில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அரேபியா கடல் பகுதியில் இந்தியாவும் ஓமனும் கடல் வழி அண்டை நாடுகளாக, ஆழ்ந்த, நெருக்கமான வரலாற்று உறவுகளை அனுபவித்து வருகின்றன என்பதை உறுதிப்படுத்தின. இருநாடுகளுக்குமிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு உறவுகள், கடல் வணிகம், கலாச்சாரப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் மூலம் செயலுத்திக் கூட்டுறவாக விரிவடைந்து, பரஸ்பர நம்பிக்கை மற்றும் அபிமானத்தை அதிகரித்துள்ளது என இருநாடுகளும் கூறியுள்ளன.

இருபக்க உறவுகளில், குறிப்பாக வலுவான பாதுகாப்பு, மற்றும் பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப்பில் தற்போதுள்ள நிலை, திருப்திகரமாக உள்ளது என்பதை இருதரப்பினரும் வெளிப்படுத்தினர். விண்வெளி, இணைய பாதுகாப்பு, எரியாற்றல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற துறைகளிலும், ஒத்துழைப்பை விரிவு படுத்த ஒப்புக்கொண்டுள்ளன. இந்தப் பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களை இருதரப்பும் வரவேற்றுள்ளனர்.

மேற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் நிலவும் பாதுகாப்புச் சூழல் உள்ளிட்ட, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இந்தியாவும், ஓமனும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன.

அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக உள்ளது என்று இருநாடுகளும் ஒப்புக்கொண்டு, இந்த அச்சுறுத்தலை பிராந்திய மற்றும் உலக அளவில் இணைந்து எதிர்கொள்வதைத் தொடர்ந்து செயல்படுத்த முடிவெடுத்துள்ளன. பயங்கரவாதம் எந்த வகையிலும், எந்த மூலையில் யார் மூலமாக நடை பெற்றாலும் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
ஏற்கனவே வலுவாக உள்ள இருபக்க உறவுகளில், பிரதமர் அவர்களின் வளைகுடா நாடுகள் பயணம் மேலும் புதிய உற்சாகத்தைச் சேர்த்துள்ளது.

 

Pin It