பிரதமர் திரு நரேந்திர மோதி, வாராணாசி மக்களவைத் தொகுதியில் இன்று மனுதாக்கல்.

பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான  திரு நரேந்திர மோதி, வாராணாசி மக்களவைத் தொகுதியில் இன்று மனுதாக்கல் செய்தார். இந்தத் தொகுதியில் இரண்டாவது  முறையாக  அவர் போட்டியிடுகிறார். இங்கு ஏழாவது  மற்றும் இறுதிக் கட்டமாக, அடுத்த  மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற  தேர்தலில், வாரணாசி  தொகுதியில், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்  திரு அரவிந்த் கேஜ்ரிவாலைவிட, மூன்று லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று, திரு  நரேந்திர  மோதி வெற்றி  பெற்றார். தற்போது திரு நரேந்திர மோதியை  எதிர்த்து காங்கிரஸ் சார்பில் திரு அஜய் ராய், சமாஜ்வாதி  கட்சி  சார்பில் ஷாலினி யாதவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். முன்னதாக, கட்சித் தொண்டர்களிடையே  உரையாற்றிய  பிரதமர், மத்தியில் தற்போதுள்ள  அரசுக்கு ஆதரவான அலை  வீசுவதாகக் குறிப்பிட்டார். கட்சித் தொண்டர்கள் தான் உண்மையான  வேட்பாளர்கள் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஐந்து  ஆண்டுகளில் நல்ல  நிர்வாகத்திற்காக, நேர்மையுடன் தாம் பணி புரிந்து வந்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். தொண்டர்களின் சந்திப்புக்குப்பின், காலபைரவர் ஆலயத்துக்குச் சென்று  வழிபாடு  செய்தார். பின்னர், கட்சி  அலுவலகத்துக்கு  அவர் வந்தபோது, ஏராளமான  தொண்டர்கள் வழிநெடுக  வாழ்த்துத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிகட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர் திரு  அமித் ஷா, கட்சியின் மூத்த  தலைவர்கள் திரு ராஜ்நாத்சிங்,  திரு  நிதின் கட்கரி, உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி   ஆதித்யநாத், அகாலிதள் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், ஐக்கிய ஜனதாதள்  தலைவர் திரு  நிதிஷ் குமார், சிவசேனா  தலைவர் திரு  உத்தவ் தாக்கரே,  லோக் ஜனசக்தி  தலைவர் திருராம் விலாஸ் பாஸ்வான், அஇஅதிமுக  ஒருங்கிணைப்பாளர் திரு ஓ பன்னீர்செல்வம், அக்கட்சியின் மூத்த  தலைவர் திரு தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

 

Pin It