பிரதமர் திரு நரேந்திர மோதி, ஜப்பான் பிரதமர் திரு.ஷிஸோ அபே அவர்களை அகமதாபாத்தில் வரவேற்கிறார்.

பிரதமர் திரு நரேந்திர மோதி, ஜப்பான் பிரதமர் திரு.ஷிஸோ அபே அவர்களை அகமதாபாத்தில் நாளை வரவேற்கிறார். வருடாந்திர இந்திய, ஜப்பான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் பிரதமர் திரு.ஷிஸோ அபே இந்தியா வருகிறார்.

காந்தி நகரிலுள்ள மகாத்மா மந்திரில், 12 ஆவது இந்திய, ஜப்பான் உச்சி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோதி, ஜப்பான் பிரதமர் திரு.ஷிஸோ அபே ஆகியோரிடையே நடைபெறும் நான்காவது உச்சிமாநாட்டு சந்திப்பாக இது விளங்குகிறது. சிறப்பு செயலுத்தி மற்றும் உலகக் கூட்டாளித்துவத்தின் கீழ், இந்தியாவுக்கும், ஜப்பானுக்குமிடையே, பல்நோக்குக் கூட்டுறவில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பரிசீலனை செய்யவுள்ளனர். கூட்டம் முடிவுற்ற பின்னர், இரு நாட்டுத் தலைவர்களும் பத்திரிக்கையாளர்களுக்கு அறிக்கையளிப்பர். இந்திய, ஜப்பான் தொழில் சந்திப்பிற்கும் அதே தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

அகமதாபாத்துக்கும், மும்பைக்குமிடையே அதிவிரைவு ரயில் திட்டம் துவங்க இருப்பதையொட்டி, வியாழனன்று, இரு தலைவர்களும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த அதிவிரைவு ரயில் திட்டத்தின் மூலம், அகமதாபாத்துக்கும், மும்பைக்குமிடையேயான பயண நேரம் கணிசமாகக் குறையும். அதிவிரைவு ரயில் தொழில்நுட்பத்தில் ஜப்பான் உலகிலேயே முன்னணியில் உள்ளது. அங்குள்ள ஷின்கான்சென் புல்லட் ரயில், உலகிலேயே அதி வேகமானது.

சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு இரு தலைவர்களும் வருகை புரிவர். பின்னர், அகமதாபாத்திலுள்ள 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சையித் நி ஜாலி என்ற மசூதிக்கும் செல்லவுள்ளனர். மகாத்மா மந்திரில், மகாத்மா காந்திக்கென, பிரத்யேகமாக நிறுவப்பட்டுள்ள தண்டி குடிர் என்ற அருங்காட்சியகத்திற்கும் அவர்கள் விஜயம் செய்வர்.

Pin It