பிஷ்கேக்கில் எஸ் சி ஓ உச்சிமாநாடு.

 

(சீன விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ரூபா நாராயண் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி).

பிரதமர் திரு நரேந்திர மோதி இரண்டாம் முறையாகப் பதவியேற்றபின், தமது வெளியுறவுக் கொள்கைகள் குறித்த தொடர்புகளின் பெரும் விரிவாக்கத்தின் அடையாளமாக, கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கேக்கில் நடைபெற்ற எஸ் சி ஓ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். அம்மாநாட்டில் பேசுகையில், பயங்கரவாதத்துக்கு ஊக்கமும், ஆதரவும், நிதியுதவியும் வழங்கும் நாடுகளைத் தனிமைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். தன்னிச்சையாகவும், வர்த்தகத் தற்காப்பு முறையிலும் செயல்படுவது எந்த நாட்டிற்கும் பயனளிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். சுகாதாரம், எரியாற்றல், வழக்கத்துக்கு மாறான எரியாற்றல் வளம், இலக்கியம், பண்பாடு, பயங்கரவாதமற்ற சமுதாயத்தை உருவாக்குதல், மனிதநேயம் போன்றவற்றில் ஒத்துழைப்பு வழங்குவதே எஸ் சி ஓ வின் குறிக்கோள் என்று அவர் கூறினார். இப்பிராந்தியத்தில் இணைப்புக்களை வலுப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், அதற்காக இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை விவரித்தார். ஆஃப்கான் அரசின் தலைமையில், ஆஃப்கான் அரசின் கட்டுப்பாட்டில், ஆஃப்கான் அரசுக்கே உரித்தான வகையில், அந்நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

எஸ் சி ஓ உச்சிமாநாடு, உலகின், குறிப்பாக இப்பிராந்தியத்தின் விவகாரங்களைப் பொறுத்தவரை, செயலுத்தி ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் தலைவர்களுக்கு இடையேயான இருதரப்பு சந்திப்பு, ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது எனலாம். இதன் பின்னணியில், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடனும், ரஷ்ய அதிபர் புடின் அவர்களுடனும் மேற்கொண்ட இருதரப்பு சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும், ரஷ்ய அதிபர் புடின் அவர்களும், ஏற்கனவே, தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக மோதி அவர்கள், சீன, ரஷ்யத் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மோதி அவர்கள் இந்தியாவின் பிரதமாரான பின்னர், சீன அதிபர் அவரை குறைந்தது 12 முறை சந்தித்துள்ளார். பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த இந்தியா எடுத்த முயற்சிகள் குறித்து சீன அதிபரிடம் விளக்கிய பிரதமர் திரு மோதி, ஒவ்வொருமுறையும் அதனை பாகிஸ்தான் முறியடித்தது என்று குறிப்பிட்டார். பயங்கரவாதமற்ற சூழலை பாகிஸ்தான் உருவாக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

எஸ் சி ஓ அமைப்பு குறித்த இந்தியாவின் அணுகுமுறை மிகவும் நேர்மறையாக உள்ளது. கலாச்சாரம் குறித்து இந்தியா மீண்டும் வலிமையாக வலியுறுத்தியது இதனைப் பிரதிபலிப்பதாக உள்ளது. மத்திய ஆசியாவிலுள்ள பெரும்பாலான நாடுகளுடன், இந்தியா பொதுவான பல அம்சங்களைப் பகிர்ந்து கொள்வதால், அவற்றுடன் நெருங்கிப் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளது. எஸ் சி ஓ உறுப்புநாடுகளில், திரைப்பட விழாக்கள் மூலம், இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்படும். உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்தியத் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மொத்தத்தில்,  எஸ் சி ஓ அமைப்பின் செயல்பாடுகளில் பங்களிக்கவும், உறுப்புநாடுகளுடன் இணைந்து செயலாற்றவும் இந்தியா தயாராக உள்ளது என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

போதைப் பொருட்களுக்கு எதிரான செயலுத்தி மற்றும் செயல்திட்டம், சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறைகளில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்த முக்கிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன.

மொத்தத்தில், 14 முடிவுகள் குறிந்த ஒப்பந்தங்கள் உறுப்புநாடுகளின் தலைவர்களால் கையெழுத்திடப்பட்டன. இவற்றுக்கிடையே, எஸ் சி ஓ மற்றும் ஐ.நா. சிறப்பு மன்றங்களுக்கிடையிலான சில ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது.

பயங்கரவாதம் குறித்த எஸ் சி ஓ கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான கடுமையான சொற்கள் அடங்கிய கறாரான அறிக்கைக்கு உறுப்புநாடுகள் அங்கீகாரம் அளித்தன.

அடுத்த எஸ் சி ஓ உச்சிமாநாட்டை ரஷ்யா முன்னின்று நடத்தவுள்ளது. அதனையொட்டி, 90 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று ரஷ்யா ஏற்கனவே அறிவித்துள்ளது. பிஷ்கேக்கில் ரஷ்ய அதிபர் புடின் அவர்கள் ஆற்றிய உரையில், இணையதளக் குற்றங்கள், கணினி மயமாக்கல் ஆகியவற்றுக்கும், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 75 ஆண்டுகள் நிறைவுற்றதைக் கொண்டாடுவதற்கும் ரஷ்யா முக்கியத்துவம் அளிக்கும் என்று குறிப்பிட்டார். பயங்கரவாதம் இல்லாத அமைதியான, நன்கு முன்னேறிய உலகம் அமைவதற்கு இந்தியா உறுதிப்பாட்டுடன் உள்ளது. இதுவே எஸ் சி ஓ அமைப்பின் முக்கியத் தூணாகவும் விளங்குகிறது.        .

 

 

                                        

 

Pin It