புதிய இந்தியாவுக்கு புதிய ஊடகங்கள் அதிக வலு சேர்க்கும் – பிரதமர் திரு நரேந்திர மோதி.

நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த, ஊடக நிறுவனங்கள் தங்கள் பொறுப்புக்களை இயன்ற வகையில் நிறைவேற்றி வருவதாக, பிரதமர் திரு நரேந்திர மோதி கூறியுள்ளார். புதுதில்லியில், ஜாக்ரன் ஊடக மாநாட்டில் பங்கு பெற்றுப் பேசிய பிரதமர், ஊடகங்கள், ’பெண் குழந்தைகளைக் காப்போம், கல்வியளிப்போம்’, ’தூய்மை இந்தியா திட்டம்’ போன்றவை மக்கள் பேரியக்கமாக உருமாற, பேருதவி செய்துள்ளன என்று குறிப்பிட்டார். டிஜிட்டல் புரட்சி ஊடகங்களை மேலும் விரிவடையச் செய்துள்ளது என்றும், வருங்காலத்தில் சமுதாயத்துக்கு ஊடகங்கள் ஆற்றும் பங்களிப்பு  மேலும் முக்கியத்துவம் பெறும் எனவும் அவர் கூறினார்.

புதிய இந்தியாவுக்கு புதிய ஊடகங்கள் அதிக வலு சேர்க்கும் எனத் தாம் நம்புவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். ’குறைந்த அளவில் அரசின் பங்களிப்பு, அதிக அளவில் நிர்வாகம்’ என்பதும், ’அனைவருடனும், அனைவருக்காகவும்’ என்பதும் புதிய இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடுகளாக விளங்கும் என்று அவர் கூறினார். பொது மக்களின் பங்களிப்புடன் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, பொது மக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றவும் புதிய இந்தியா வழிவகுக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த எண்ணத்துடன் அரசு கடந்த நான்காண்டுகளாகச் செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்களும் பொறுப்பேற்று, நாட்டுக்கு வலு சேர்த்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Pin It