புதிய செய்திகள் 26 மார்ச் 2020

1) காபூலில் குருத்வாராவில் நடந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்.

நேற்று, புதனன்று, காபூலில் குருத்வாராவில் நடந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறியுள்ளது. மேலும், ஆஃப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட இந்து, சீக்கிய சமுதாயத்தினரின் குடும்பங்களுக்கு அனைத்து வகையிலும் உதவ இந்தியா தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளது.

“கோவிட் 19 தொற்றுநோய் உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் இந்த சோதனையான காலகட்டத்திலும், சிறுபான்மை இனத்தவரின் தொழுகை இடங்களில் இத்தகைய கோழைத்தனமான தாக்குதலை நடத்தியதன் மூலம், பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்குத் துணை புரிபவர்கள் ஆகியோரது மிருகத்தனமான மனநிலை வெளிப்பட்டுள்ளது.

ஆஃப்கான் மக்களையும் நாட்டையும் பாதுகாக்க, தைரியமிக்க பாதுகாப்புப் படைகள் துணிவுடனும் வீரத்துடனும் தாக்குதலை எதிர்கொண்டதைப் பாராட்டுகிறோம்.

ஆஃப்கான் நாட்டில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்ட அரசும், பாதுகாப்புப் படைகளும், மக்களும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்.”

என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

2) இந்திய வெளியுறவு அமைச்சகம், கோவிட் 19 கட்டுப்பாட்டு மையம் அமைத்துள்ளது.

24 மணி நேரமும் செயல்படும் கோவிட் 19 கட்டுப்பாட்டு உதவி மையத்தை  இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே அமைத்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள்:

+91-11-23012113, +91-11-23014104 and +91-11-23017905, Fax number – +91-11-23018158  மின்னஞ்சல் : covid19@mea.gov.in.

மேலும் தகவலுக்கு – https://www.mea.gov.in/press-releases.htm?dtl/32591/MEA_Covid19_Control_Center

3) இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான ரயில்வேத்துறை புரிந்துணர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல்.

பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம், இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில், இந்திய ரயில்வே அமைச்சகத்துக்கும், டிபி இஞ்சினீயரிங் & கன்சல்டிங் என்ற ஜெர்மன் நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட தொழில்நுட்பக் கூட்டுறவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விவாதித்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், சரக்கு, பயணிகள் ரயில் செயல்பாடுகள், கட்டமைப்பு நிர்மாணம் மற்றும் மேலாண்மை, நவீன, போட்டியிடத் தக்க, திறமையான ரயில்வே அமைப்பு, தகவல் தொழில்நுட்பம், விற்பனை மற்றும் நிர்வாகம், எதிர்பார்த்துப் பராமரித்தல், தனியார் ரயில் செயல்பாடு மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்புக்கு வழி வகுக்கப்படும்.

4) ஊரடங்கைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்க பிரதமர் மோதி அவர்கள் அழைப்பு; கோவிட் – 19க்கான தகவல் உதவி மையம் அமைப்பு.

கோவிட்-19 வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்க, சமூக தூர விலகல் முறையைப் பின்பற்றுவது ஒன்றே வழியாகும் என்றும், அந்த வைரஸ் எவரை வேண்டுமானாலும் பாதிக்கும் என்றும் பிரதமர் மோதி அவர்கள் மீண்டும் எடுத்துரைத்துள்ளார்.

வாரனாசி மக்களுடன் வீடியோ காணொளி மூலம் கலந்துரையாடிய பிரதமர், சிலர் இந்நோய் குறித்து நன்கு அறிந்திருந்தும், சமூக தூர விலகலுக்கான எச்சரிக்கையைப் பின்பற்ற முன்வராதது துரதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டார். மகாபாரதப் போர் முடிவுக்கு வர 18 நாட்கள் ஆயின என்றும், கொரோனா நோய்க்கு எதிரான போர் 21 நாட்கள் நடைபெறும் என்றும் இறுதியில் வெற்றியடைவதே குறிக்கோள் என்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் நோய்க்கு எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறிய பிரதமர், மக்கள் தாங்களாகவே தீர்மானித்து எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல், மருத்துவருடன் தொலைபேசியில் கலந்தாலோசித்து அவரது அறிவுரைப்படியே மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்தத் தொற்றுநோய்ப் பரவல் குறித்து எந்த வதந்தியையும் மக்கள் நம்ப வேண்டாம் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். இது குறித்த அதிகாரபூர்வ தகவலை வெளியிட, வாட்ஸப்புடன் இணைந்து உதவி மேடையை அரசு உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதற்கான எண் : 9013151515

மருத்துவர்களும், செவிலியர்களும் கடவுளின் மறு அவதாரம் என்று கூறிய பிரதமர், தங்கள் உயிர்களைப் பணயம் வைத்துப் பணிபுரியும் அவர்களை மக்கள் மிகவும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். காபூல் குருத்வாராவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலை பிரதமர் தெரிவித்துக் கொண்டார்.

5) மேலும் 277 இந்தியர்களை ஈரானிலிருந்து மீட்டது ஏர் இந்தியா.

ஈரானிலிருந்து மீட்கப்பட்ட மேலும் 277 இந்தியர்கள் ஜோத்பூர் விமான நிலையத்தை வந்தடைந்தனர். ஜோத்பூர் ராணுவ மையத்தில் நிறுவப்பட்ட உடல்நல முகாமுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் யாத்திரீகர்கள் ஆவர்.

விமான நிலைடயத்தைப் பயணிகள் அடைந்தவுடன் அங்கு அவர்களுக்கு முதற்கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று, ராணுவ தகவல் தொடர்பு அதிகாரி கர்னல் சோம்பித் கோஷ் அவர்கள் தெரிவித்தார்.

பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ராஜஸ்தான் மாநில மருத்துவ அதிகாரிகள் மற்றும் சிவில் நிர்வாகத்துடன் இணைந்து ராணுவம் வழங்கி வருகிறது.

6) காணொளி வாயிலான ஜி-20 வர்ச்சுவல் உச்சிமாநாட்டில் இன்று பிரதமர் மோதி அவர்கள் பங்கேற்பு.

உலகம் முழுவதும் பரவி, பல உயிர்களைப் பலி வாங்கி, மக்களின் அன்றாட வாழ்க்கையையும், தொழிலையும் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் தாக்குதலை ஒருங்கிணைந்து சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட அவசரகால ஜி-20 வர்ச்சுவல் உச்சிமாநாட்டில் இன்று பிரதமர் மோதி அவர்கள் பங்கேற்கவுள்ளார். இந்த உச்சிமாநாட்டிற்கு சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் அவர்கள் தலைமையேற்கிறார்.

கோவிட் 19 நோயை எதிர்க்க ஜி-20 அமைப்பு, உலகளவில் முக்கியப் பங்காற்றும் என்றும், இதில் பயனுள்ள வகையில் விவாதங்கள் நடைபெறும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மோதி அவர்கள் தமது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, புதனன்று, ரஷ்ய அதிபர் புடின் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர், இருநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். ரஷ்யாவில் கொரோனா நோய்க்குப் பலியானவர்கள் குறித்துத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் நலமடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

7) கொரோனா வைரஸ் நோயினால், சீனாவை விட அதிகமாக, 3434 பேர் ஸ்பெயினில் உயிரிழப்பு.

கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் சீனாவை ஸ்பெயின் நேற்று தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில், 738 உயிரிழப்புகளைச் சந்தித்த ஸ்பெயினில், மொத்தம் இதுவரை, 3,434 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் இதுவரை 46,610 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் 11 ஆவது நாளாக ஊரடங்கு தொடர்கிறது.

8) முகம் மற்றும் தலைக் கவசங்களை பங்களாதேஷுக்கு வழங்கியது இந்தியா.

பங்களாதேஷுக்கான இந்தியாவின் ஹை கமிஷனர் ரிவா கங்கூலி தாஸ் அவர்கள், புதனன்று, 30,000 முகக் கவசங்கள், 15,000 தலைக்கவசங்கள் ஆகியவற்றை பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஏ கே அப்துல் மோமென் அவர்களிடம் வழங்கினார். பங்களாதேஷில் கொரோனா நோய் பரவுவதைத் தடுக்க ஏதுவாக இந்த உதவி வழங்கப்படுவதாக, செய்தியாளர்களுக்கு விடுத்த அறிக்கையில் ஹை கமிஷன் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சார்க் நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோதி அவர்கள், மார்ச் 15 ஆம் தேதியன்று காணொளி வாயிலாக நடத்திய மாநாட்டைத் தொடர்ந்து, இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயை எதிர்த்துப் போராட, அவசரகால நிதி நிறுவ அழைப்பு விடுத்த பிரதமர் இந்தியாவின் தரப்பில் முன்னோடியாக, 1 கோடி டாலர் நிதி அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்நிதியின் கீழ், தற்போது பங்களாதேஷுக்குக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

Pin It