புதுதில்லியில் அமைச்சர்கள் அளவிலான உலக வர்த்தக அமைப்புக் கூட்டம்.

(மூத்த பத்திரிக்கையாளர் ஜி. ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

புதுதில்லியில் நடந்த அமைச்சர்கள் அளவிலான உலக வர்த்தக அமைப்புக் கூட்டத்தில், பெரும்பாலும் ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்காக அளிக்கப்படும் எஸ் & டிடி எனப்படும் சிறப்பு மற்றும் வேறுபட்ட அணுகுமுறைக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த அணுகுமுறையின் மூலம், உலக வர்த்தக ஒப்பந்தங்களில்  வழங்கப்படும் சலுகைகளையும், தளர்வுகளையும் வளர்ந்து வரும் நாடுகள் பயன்படுத்திக் கொண்டு உலக வர்த்தக அமைப்பின் கீழ் பல்நிலை வர்த்தக முறைக்கு வலுவூட்ட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 22 நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, வர்த்தக பேரங்களில் நிலவும் தேக்க நிலையை அகற்ற ஆலோசனை மேற்கொண்டனர். பலநாடுகளுடன் வர்த்தகப் போரில் ஈட்டுபட்டுவரும் அமெரிக்கா, தனக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, உலக வர்த்தக அமைப்பின் சச்சரவு தீர்ப்பாணையத்திற்கான உறுப்பினர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதை அனைத்துப் பிரதிநிதிகளும் கண்டித்தனர். இந்தத் தீர்ப்பாணையத்திற்கான உறுப்பினர்களை விரைவில் நியமிப்பது குறித்தும், தீர்ப்பாணைய செயல்முறைகள் குறித்தும் உறுப்பினர்கள் விவாதித்தனர்.

உலகின் பெரும் வர்த்தக நாடுகள், தங்களுக்குள் வர்த்தகத் தற்காப்பு முறைகளைக் கையாளும் போக்கைக் கொண்டிருப்பதால், இறுக்கமான சூழல் நிலவிவரும் பின்னணியில் இக்கூட்டம் நடைபெறுகிறது என்பதை, இந்திய வர்த்தக அமைச்சர் தெளிவாக எடுத்துக் கூறினார். வளர்ந்து வரும் நாடுகளில் வாழும் 730 கோடி மக்களுக்கு வளர்ச்சியின் பயன்கள் சென்றடைவதைத் தடுக்கும் விதமாக செயல்படுதல் கூடாது என்று இக்கூட்டத்தின் துவக்கத்தில் அவர் கூறினார். உலக வர்த்தக அமைப்பானது, நாடுகளின் வளர்ச்சிக்கு நிதியுதவிகள் மூலமாக இல்லாமல், வர்த்தகத்தின் மூலமாக வழிகாட்டும் அமைப்பு என்பதை அவர் வலியுறுத்தினார்.

இந்திய வர்த்தக அமைச்சரின் கருத்தைப் பிரதிபலித்த உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குனர் ராபர்ட்டோ அஸிவீடோ அவர்கள், உலக வர்த்தக அமைப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்தங்கள் பற்றிய விவாதங்கள் குறித்து கோடிட்டுக் காட்டினார். அனைத்து உறுப்பினர்களும்  தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உலக வர்த்தக அமைப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். தவிர, உலக வர்த்தக அமைப்பின் மூன்று முக்கியத் தூண்களான மேற்பார்வை, சச்சரவுத் தீர்வு மற்றும் பேரங்கள் ஆகியவற்றில், உறுப்பினர்கள் மேற்கொண்ட விவாதங்களை அவர் எடுத்துரைத்தார்.

பல்நிலை வர்த்தக விதிகளைப் பின்பற்ற, எஸ் & டிடி கால அவகாசம் வழங்குகிறது. இந்நிலையில், எஸ் & டிடியில் புதுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இவ்விஷயத்தில் தேக்க நிலையைத் தவிர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அஸிவீடோ அவர்கள் கூறினார்.

வர்த்தகத்தை ஊக்குவிக்கும் ஒப்பந்த முறைகளைப் பின்பற்றுவதுதான் சிறந்த வழி என்றும் அவர் குறிப்பிட்டார். இதில், நாடுகள் தங்களுக்கான வரையறைகளைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளும். எனினும், இந்தியா, சீனா உள்பட, 17 நாடுகள், எஸ் & டிடி வழிமுறைகள், வளர்ந்து வரும் நாடுகளின் உரிமை என்றும், தற்கால, எதிர்கால உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தங்களில் அவை வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின. கஸகஸ்தான், துருக்கி, அர்ஜெண்டினா, பிரேஸில் மற்றும் கௌதமலா ஆகிய நாடுகள், கூட்டறிக்கையில் கையெழுத்திடவில்லை. எஸ் & டிடி யைப் பொறுத்தவரை, இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது என்றும், அது உலக வர்த்தக அமைப்பின் வழிமுறைகளின் முக்கிய அங்கம் என்றும், உலகநாடுகள் மேலும் வகைப்படுத்தப்படுவதில் இந்தியா நம்பிக்கை கொள்ளவில்லை என்றும் உலக வர்த்தக அமைப்பிற்கான நிரந்தர இந்தியப் பிரதிநிதி ஜே.எஸ்.தீபக் அவர்கள் குறிப்பிட்டார். ஐந்து நாடுகள் தவிர்த்து, பங்கேற்ற 17 நாடுகள் எஸ் & டிடி வழிமுறைகளுக்கு வலுவூட்ட அழைப்பு விடுத்துள்ளதன் மூலம், இக்கூட்டத்தில் இதற்கு சாதகமான நிலை எட்டப்பட்டுள்ளது எனலாம்.

இக்கூட்டத்தின் கூட்டறிக்கையில், உலக வர்த்தக அமைப்பின் கீழுள்ள, இந்தியாவைத் தவிர்த்து, 75 நாடுகள் தங்களுக்குள் எலெக்ட்ரானிக் பொருட்களில் பல்நிலை வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்டது குறிப்பிடப்படவில்லை. எனினும், பல்நிலை வர்த்தக முறை தக்க வைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூட்டறிக்கை குறிப்பிட்டுள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற இக்கூட்டம், சர்வதேச வர்த்தகத்தில் உலக வர்த்தக அமைப்பின் பங்கை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான துடிப்பினை நல்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

Pin It