புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் துறையில் இந்தியா தலைமை.

(பத்திரிக்கையாளர் யோகேஷ்சூட் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் துறையின் அமைச்சகம், மூன்று நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்தது. அவை, முதலாவது சர்வதேச சூரியக் கூட்டமைப்புக் கூட்டம், இரண்டாவது இந்தியப் பெருங்கடல் நாடுகளின் எரியாற்றல் துறை அமைச்சர்கள் கூட்டம் மற்றும் இரண்டாவது உலக புதுப்பிக்கத்தக்க எரியாற்றல்துறை முதலீட்டாளர் கூட்டம் மற்றும் கண்காட்சி ஆகியவையாகும். இந்த மூன்று நிகழ்வுகளையும் பிரதமர் திரு நரேந்திர மோதி துவக்கி வைத்தார். புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் பயன்பாட்டை உலக அளவில் ஊக்குவிக்கவும், எரியாற்றல் துறையில் இந்தியாவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களை ஈர்க்கவும் இந்த மூன்று நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

இரண்டாவது உலக புதுப்பிக்கத்தக்க எரியாற்றல்துறை முதலீட்டாளர் மாநாட்டில் 77 நாடுகளைச் சேர்ந்த 20.000 பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களுள் 40 அமைச்சர்கள் அடங்குவர். இந்த மாநாட்டில், ஐ.நா.பிரதிநிதிகள், பல்நிலை வளர்ச்சி வங்கிகளின் தலைவர்கள், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆர் ஈ இன்வெஸ்ட் 2018 மாநாட்டில், 9 நாட்டுப் பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இத்துறையின் முன்னணி நாடுகளான ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஃபின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்த 9 நாட்டுப் பிரிவுகளை ஏற்பாடு செய்தன.

உலக சூரிய மின்சக்தித் துறையில் சர்வதேச சூரியக் கூட்டமைப்பு, ஐஎஸ்ஏ, ஆற்றும் முக்கியப் பங்கினை பிரதமர் மோதி அவர்கள் எடுத்துரைக்கையில், பருவநிலை நீதியை நிலைநாட்ட ஐஎஸ்ஏ ஒரு சிறந்த மேடை என்றும், எதிர்காலத் தலைமுறைக்கு நாம் அளிக்கும் கொடை இதுவென்றும், எதிர்காலத்தில், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு, ஓபெக் அமைப்புக்கு இது மாற்றாக விளங்கக் கூடும் என்றும் குறிப்பிட்டார். தற்போதுள்ள கச்சா எண்ணெய்க்கு மாற்றாக, சூரியசக்தி விளங்கும். ஐ.நா. தலைமைச் செயலர் இக்கூட்டத்தில் பங்கு பெற்றது, ஐ.நா. வில் ஐஎஸ்ஏ பெறும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றும் விதமாக, அமைந்தது. இந்தியப் பெருங்கடல் நாடுகளின் எரியாற்றல் குறித்த சவால்கள் ஒத்து இருப்பதால், அவற்றை எதிர்கொள்ள, புதுப்பிக்கத்தக்க எரியாற்றலில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கூறினார். 2030 ஆம் ஆண்டுக்குள், எண்ணெய் அல்லாத துறைகள் வாயிலாக, தனது எரிசக்தித் தேவையில் 40 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி இலக்கான 175 கிகாவாட் அளவை இந்தியா வெற்றிகரமாகத் தாண்டிவிடும். மாநாட்டைத் துவக்கியபோது, பிரதமர் அறிவித்த முக்கியக் கோட்பாடு, ஒரு உலகம், ஒரு சூரியன், ஒரு மின்கட்டம் என்பதாகும்.

ஐ.நா. தலைமைச் செயலர் அண்டோனியோ குட்டரெஸ் அவர்கள், மனித வாழ்வுக்கே பெரும் அச்சுறுத்தலாக பருவநிலை மாற்றம் விளங்குகிறது என்று குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க எரியாற்றலில் நாம் பெரும் புரட்சியைக் கண்ணுறுவதாகவும், இருப்பினும் இலக்குகளை சந்திக்கத் தேவையான அர்ப்பணிப்பில் குறைபாடு உள்ளதாகவும், அதற்குத் தீவிர செயல்பாடுகள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் துறை இணையமைச்சர் ராஜ்குமார் சிங் அவர்கள், ஒரு உலகம், ஒரு சூரியன், ஒரு மின்கட்டம் என்ற சவாலை நம்முன் பிரதமர் மோதி அவர்கள் வைத்துள்ளதாகவும், அதனை நாம் எட்ட முடியும், எட்டுவோம் என்றும் கூறினார். புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் குறித்த தில்லி பிரகடனத்தை 21 நாடுகள் அங்கீகரித்துள்ளன. அதன்படி, இந்தியப் பெருங்கடல் நாடுகள் தங்கள் புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய, பொதுவான புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் கொள்கையை மேற்கொண்டு,     கூட்டாக செயல்பட்டு, அப்பகுதிக்கான திறன் வளர்ப்பை இத்துறையில் ஊக்குவிக்க வேண்டும்.

இந்தியாவின் 2022 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கைப் பூர்த்தி செய்ய, 7600 கோடி டாலர் முதலீடு தேவைப்படுகிறது. பொதுத் துறை இந்த அளவிலான முதலீட்டை ஈடு செய்ய முடியாது. எனவே, புதுமையான வழிகளில் தனியார் மூலதனம் தேவைப்படுகிறது. உலக அளவில், செயலுத்தி ரீதியிலான கூட்டாளித்துவத்தின் மூலம்,, தூய்மையான எரிசக்தித் தர நிர்ணயம், நிதி வழங்குதலில் பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் கூட்டு முயற்சி ஏற்பாடுகள் ஆகியவை அவசியமாகிறது. 2015-2018 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால கட்டத்தில், புதுப்பிக்கத்தக்க எரியாற்றலில் 81 சதவிகித வளர்ச்சி கண்டு, இந்தியா உலகுக்கு முன்னோடியாக விளங்குகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள், எண்ணெய் அல்லாத துறைகள் வாயிலாக, தனது எரிசக்தித் தேவையில் 40 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்யவும், 2022 ஆம் ஆண்டுக்குள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி இலக்கான 175 கிகாவாட் அளவை எட்டவும் இந்தியா நிர்ணயித்துள்ள இலக்குகள் பெரிதாகத் தோன்றினாலும் அவற்றை எட்டுவது சாதியமானதே. புதுப்பிக்கத்தக்க எரியாற்றலில் இந்தியா ஒரு மாபெரும் சந்தையாக விளங்குவதால், உலகம் முழுவதிலிருந்தும் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து பெரும் வளர்ச்சி காண இயலும்.

 

 

 

Pin It