பொருளாதார சரிவிற்கிடையே, ஊழலுக்கு எதிரான பாகிஸ்தானின் போராட்டம்.

 (ஆல் இண்டியா ரேடியோ செயலுத்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

பாகிஸ்தானின் தேசிய பொறுப்பேற்புப் பணியகமான என்.ஏ.பி, பாகிஸ்தான் முன்னாள் அதிபர்  ஆசிஃப் அலி ஸர்தாரியை, போலியான வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ள குற்றத்திற்காக கைது செய்துள்ளது. பி.பி.பி. எனப்படும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், பிலாவலின் தந்தையுமான திரு.ஸர்தாரி, பாகிஸ்தான் சட்டசபையில் உறுப்பினராகவும் உள்ளார். ஸர்தாரி மற்றும் அவரது சகோதரி ஃபர்யால் தால்புரின் முன் ஜாமீனிற்கு இஸ்லாமாபாத் உயர் நீதி மன்றம் மறுப்பு தெரிவித்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு ஏஜன்சியான எஃப்.ஐ.ஏ, தனக்குக் கிடைத்த ஒரு தகவலின் அடிப்படையில், சம்மிட் வங்கி, சிந்த் வங்கி மற்றும் யு.பி.எல் இல்,29 போலிக் கணக்குகள் மூலம் நடத்தப்பட்ட போலி பணப் பரிமாற்றங்கள் மற்றும் போலி கணக்குகள் தொடர்பான விசாரணையைத் துவக்கியது.

துவக்கத்தில், திரு. ஸர்தாரி மற்றும் அவரது சகோதரி உட்பட ஏழு நபர்கள், இந்தப் போலி கணக்குகளை, சந்தேகத்திற்கு இடமளிக்கும் பணப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தியது தெரிய வந்தது. லஞ்சமாக வந்த தொகையை ஒழுங்கான பண முறைக்குக் கொண்டு வரும் ஒரு கருவியாக இந்தப் போலி கணக்குகள் பயன்படுத்தப்பட்டன.

பின்னர், பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின், எஃப்.ஐ.ஏ விசாரணையில் ஏற்பட்ட தாமதம் குறித்து, ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த விஷயத்தைப் பற்றி விசாரிக்க, உச்ச நீதிமன்றம், ஜே.ஐ.டி எனப்படும் ஒரு கூட்டு விசாரனைக் குழுவையும் அமைத்தது.

தனது விசாரணையில், ஜே.ஐ.டி, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 33 போலிக் கணக்குகளைப் பற்றி கண்டறிந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சுமார் 170 பேர், நாட்டை விட்டு வெளியே செல்லத் தடை செய்யப்பட்டார்கள்.

ஒரு போலி நிறுவனத்தைச் சார்ந்த போலிக் கணக்கில் 440 கோடி பாகிஸ்தான் ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும், அதில், 3 கோடி ரூபாய், இரண்டு முறை ஸர்தாரி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் என்.ஏ.பி-யும் எஃப்.ஐ.ஏ-வும் கூறியுள்ளன.

எஃப்.ஐ.ஏ இந்த வழக்கை கராச்சியில் வங்கிகளின் நீதிமன்றத்தில் பதிவு செய்திருந்தது. இந்த நீதிமன்றம், முன்னாள் பாகிஸ்தான் அதிபருக்குக் கைது வாரண்டையும் வெளியிட்டது. அதே சமயம், 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில், அவர் முன்ஜாமின் வாங்கியிருந்தார். பின்னர், இந்த வழக்கை திசை திருப்ப முயற்சிப்பதாக, விசாரணை செய்தவர்கள் பாகிஸ்தான் மக்கள் கட்சி மீது குற்றம் சாட்டவே, இந்த வழக்கு, கராச்சியின் பொறுப்பேற்புப் பணியக அலுவலகத்திலிருந்து இஸ்லாமாபாதின் நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது.

விசாரணையின் போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர், திரு.ஸர்தாரி மற்றும் திருமதி தால்புருக்கு எதிராக அரசாங்க சாட்சியாக மாறினர்.

இந்த வழக்கில் ஸர்தாரியின் பல நெருங்கிய நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பி.பி.பி தலைவரான ஸர்தாரியும் அவரது சகோதரியும் இடைக்கால ஜாமினில் வெளியிலிருந்தார்கள். பலமுறை நீட்டிக்கப்பட்ட இந்த ஜாமின், திங்களன்று நிராகரிக்கப்பட்டது.

பாகிஸ்தான் பலத்த அரசியல் நெருக்கடியில் இருப்பதால், இம்ரான் கான் அரசு, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகளிலிருந்து, மக்களின் கவனத்தை ஊழலின் பக்கம் திருப்ப எண்ணுகிறது. ஆகையால், திரு.ஸர்தாரியின் கைதைத் தொடர்ந்து, ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரையும் பிடித்து சிறையிடுவேன் என பாகிஸ்தான் பிரதமர் சூளுரைத்துள்ளார். பாகிஸ்தான் பட்ஜெட்டைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், ‘ரியாசத்-ஏ-மதீனா’ என்ற கூற்றிற்கேற்ப, ஊழலற்ற நாட்டை தான் உருவாக்கப்போவதாக திரு. கான் கூறினார்.

கடந்த 25 ஆண்டுகளில், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவை அதிகமாக நாட்டில் கட்டப்படவில்லை எனவும் திரு.கான் கூறினார். தன்னுடைய புதிய பாகிஸ்தான், ஒரு நவீனமான, அதே சமயம், ஒரு உதாரண இஸ்லாமிய நாடாக இருக்கும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.

திரு.கானின் வார்த்தைகள் துணிச்சல் மிக்கவையாக உள்ளன. ஆனால், அவர், தனது நாடு, பெரும் சரிவைக் கொண்டிருக்கும் ஒரு பொருளாதாரத்தை எதிர்கொண்டிருக்கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியம் அளித்துள்ள உதவியில், நிபந்தனைகள் அதிகமாகவும் உதவித் தொகை குறைவாகவுமே உள்ளது. 600 கோடி டாலர் நிதி உதவியானது பல ஆண்டுகளில் பிரித்து அளிக்கப்படும். பாகிஸ்தான் பட்ஜெட்டில், அந்நாடு இந்த நிதியாண்டில், 2.4 சதவிகிதம் என்ற விகிதத்தில் வளரும்   என குறிப்பிடப்பட்டுள்ளது. பணவீக்கம் 11 அல்லது 13 சதவிகிதமாக இருக்கும். ஐ.எம்.எஃப்- இன் நிபந்தனைகளுக்கேற்ப, வரிகள் மற்றும் எரியாற்றல் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் கணக்கிடப்பட்ட செலவினம் பாகிஸ்தான் ரூபாயில் 7 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே சமயம், அந்நாட்டின் மொத்த வருமானம் பாகிஸ்தான் ரூபாயில் 3.5 லட்சம் கோடியே இருக்கும். தேவையான மீதித் தொகை எங்கிருந்து வரும் என்ற கேள்விக்கு பாகிஸ்தான் நிதி அமைச்சர் ஹம்மாத் அஸாரிடம் பதில் இல்லை. வேலை வாய்ப்பு உருவாக்கத்தைப் பற்றி எந்த குறிப்பும் காட்டப்படவில்லை.

பந்து வரும் போது திசை திருப்பி விடுதல் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ரன்களை ஈட்டித் தரும். இதை நன்றாக அறிந்திருக்கும் திரு.இம்ரான் கான், அரங்கத்திற்கு ஏற்றபடி ஆடிக்கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

 

 

 

                                                                                    

 

Pin It