பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, உள்கட்டமைப்பு முதலீட்டில் உத்வேகம் காட்டும் இந்தியா.

(மூத்த பொருளாதார பத்திரிக்கையாளர் ஜி.ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.)

பொருளாதார மந்த நிலையை வெற்றி கொள்ளவும், தனது தொழில் துறை ஆதரவுக் கொள்கை மற்றும் திட்டங்களைத் தொடரும் நோக்கிலும், புதனன்று மத்திய அரசு ஒரு மாபெரும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நூறு லட்சம் கோடி  ரூபாய்க்கு நாட்டின் உள் கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வதே அந்தத் திட்டம். இந்த அளவுக்கு மிகப்பெரிய முதலீடானது,  தரமான   உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கப் பெறுவதற்கு குறிப்பிடத்தக்க அளவில் உதவும் என்றும்,  விமானப் போக்குவரத்து, கப்பல் துறை, நெடுஞ்சாலை, ரயில்வே, துறைமுகங்கள், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய உள் கட்டமைப்பு சார்ந்த துறைகளில் முதலீடுகள் புத்தாக்கம் பெறும் என்றும், அவை உள்நாட்டுப் பொருளாதாரத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் திறன்மிக்கதாக்கும் என்றும் மத்திய ரயில்வே மற்றும் வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் கூறியுள்ளார்.

இடைக்கால முதலீட்டில், மிக அதிகமான அளவில், அதாவது, 5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 12 ஆண்டு காலத் திட்டம் ஒன்றை இந்திய ரயில்வே தீட்டியுள்ளதாக, மாபெரும் கட்டமைப்பான ரயில்வே துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ள கோயல் அவர்கள் தெரிவித்தார். இந்தப் பெரிய அளவிலான முதலீட்டை அரசு மட்டும் தனித்துச் செய்ய முடியாது என்று உணர்ந்து,  இதில் தனியார் முதலீடுகளையும் அவர் நாடியுள்ளார். அதற்கான சலுகைகளும் தனியார் துறைக்கு வழங்கப்படும். பொதுத் துறை- தனியார் துறை கூட்டு மாதிரி அடிப்படையில், அரசு முனைந்து செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2024-25 க்குள், இந்தியப் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலர் அளவை எட்ட வேண்டும் என்ற தனது இலக்கை அடைய, கடந்த ஐந்தாண்டுகளில்,  முதலீட்டுச் சூழலை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு, பொருளாதாரத்தில் பல பெரிய தொடர் சீர்திருத்தங்களைச் செய்து வந்துள்ளது. பயனாளிகளின் தேவைகளுக்கேற்ப, நிதித்துறை அமைப்பை செப்பனிடும் நோக்கில், 2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திவால் சட்டம் இவற்றுள் முக்கியமான ஒன்று. பல வகை வரிகள் என்ற முறையை மாற்றியமைத்து, வணிகம் செய்வதை எளிதாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவைகள் வரித் திட்டம், மிகப்பெரிய, துணிச்சலான திட்டமாகும். உலகத்தரம் வாய்ந்த சரக்கு மற்றும் சேவைகளை உருவாக்கும் உள்நாட்டுத் திறன்களை வலுப்படுத்துவதில், மிகப் பெரிய மைல்கல் திட்டமாக, ’இந்தியாவில் தயாரிப்போம்’ என்னும்  மேக் இன் இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டது.

கார்ப்பரேட் வரி விகிதத்தை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைத்து அரசு எடுத்த அண்மை நடவடிக்கை, முதலீட்டை அதிகரிக்க எடுக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். குறிப்பாக, புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி, உலகிலேயே மிகக் குறைந்த அளவான 15% என்று குறைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, 2019-ல் ரெபோ விகிதத்தை 135 புள்ளிகள் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்தது. வங்கிகள், தாங்கள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை, உலகளவிலான வட்டி விகிதங்களுக்கு இணையாக நிர்ணயிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், வன்கிகளிடமிருந்து பெரும் அளவில் கடன் பெறும் முதலீட்டாளர்களுக்கான வட்டி, கட்டுக்குள் வைக்கப்படும்.

புதன் கிழமையன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், பொருளாதாரம் குறித்த விவாதம் ஒன்றுக்குப் பதிலளிக்கையில்,  குறைந்த பட்ச மாற்று வரி(MAT) மற்றும் ஈவுத்தொகை விநியோக வரி ஆகியவை பிற்போக்கானவை என்று அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். இது வரும் ஆண்டு  பட்ஜெட்டில் இந்திய தொழில் நிறுவனங்களின் இவ்வரிகள் குறித்த இரட்டைக் கோரிக்கைகள் பிரதிபலிக்கப்படலாம் என்ற நம்பிக்கையை ஊட்டியுள்ளது. அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படவுள்ள அனைத்து நடவடிக்கைகளும், உள்நாட்டுத் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள சாதகமான கொள்கை நிலைப்பாட்டை விளக்குகின்றன.  இதனால், தரம், விலை ஆகியவற்றில் போட்டித் திறனை வளர்த்துக் கொள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஊக்கம் கிடைக்கும். இதனால், உள் நாட்டுச் சந்தையில் மட்டுமல்லாமல் சர்வதேச சந்தையிலும் உள்நாட்டு நிறுவனங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகிறது.

பொருளாதாரக் கணிப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, உள்கட்டமைப்பு முதலீட்டிற்கும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் நெருங்கிய, வலுவான தொடர்பு உள்ளது என்பதை மத்திய அரசு உறுதியாக நம்புகிறது என்பது தெளிவாகிறது. இதற்கு உதாரணமாக, சாலை, ரயில், விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் செய்யப்படும் உள்கட்டமைப்பு முதலீடுகளால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் தாக்கங்களுக்கான குறியீடு, 0.90 என்ற அளவில் உள்ளது என்பதைக் குறிப்பிடலாம். எனவே, நாட்டின் பொருளாதார இலக்குகளை எட்டுவதற்கு, மிகப்பெரும் அளவிலான உள்கட்டமைப்பு முதலீடு மிகவும் அவசியம் என்பது கண்கூடு. இதில், மத்திய அரசு, தன்னிடமுள்ள அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி, மிகவும் உறுதிப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Pin It