போராட்டத்தை நோக்கிச் செல்கிறதா பாரசீக வளைகுடா?

(மேற்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர். மொஹம்மத் முதசிர் நாசர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) 

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக நடந்துகொண்டிருக்கும் வாக்குவாதம், பாரசீக வளைகுடா பகுதியில் இறுக்கத்தை அதிகபடுத்தியுள்ளன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பிரச்சனை, நீண்ட காலமாக சிக்கல் நிறைந்ததாக விளங்குகிறது. 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஏற்படுத்தப்பட்ட ஜெ.சி.பி.ஓ.ஏ எனப்படும் விரிவான கூட்டு நடவடிக்கைத் திட்டம் என்கிற ஈரான் அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா தன்னிச்சையாக விலகிக்கொண்டதை அடுத்து, சமீபத்திய இறுக்கங்கள் அதிகரித்தன. அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள போதிலும், அணு ஆயுதங்களையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் உபயோகித்து, பிராந்திய ஸ்திரத்தன்மையைக் கெடுப்பதாக, அப்போது அதிபர் டிரம்ப் ஈரானை குற்றம் சாட்டினார். அதன் பிறகு, டிரன்ப் நிர்வாகம், அணு ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்த ஈரானுக்கு அதிகப்படியான இறுக்கம் கொடுக்கம் நோக்கத்தில், ஈரான் மீது ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தது. எனினும், இதற்கு ஒப்புக்கொள்ள ஈரான் மறுத்தது. அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகி ஒரு ஆண்டு நிறைவு பெற்ற நாளன்று, அதாவது, இவ்வாண்டு மே மாதம் 8 ஆம் தேதியன்று, ஈரான், அமெரிக்கத் தடைகளால் இறுக்கத்தில் இருக்கும் தனது பொருளாதாரத்தை சரி செய்ய, அடுத்த 60 நாட்களுக்குள் உதவுமாறு, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மற்றும் சீனாவைக் கேட்டுக்கொண்டது. உதவி கிடைக்கவில்லையெனில், ஈரான் அணு ஒப்பந்தத்திலிருந்து வலுக்கட்டாயமாக விலகிக் கொள்ள வேண்டி வரும் என்றும் அந்நாடு கூறியுள்ளது.

இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் வாக்குவாதத்தில் தற்போது சர்வதேச சமூகத்தின் கவனம் திரும்பியுள்ளது. பாரசீக வளைகுடாவில் நிலை நிறுத்த, தான் ‘யு.எஸ்.எஸ் ஆர்லிங்டன்’ என்ற ஒரு போர்க்கப்பலையும் ‘பாட்ரியாட்’ பாட்டரியையும் மத்திய கமாண்டிற்கு அனுப்பப்போவதாக அமெரிக்கா கூறியுள்ளது.  இதற்கு பதிலளிக்கும் வகையில், போர் என்று வந்தால், பாரசீக வளைகுடாவில் இருக்கும் அமெரிக்கக் கப்பல்கள்தான் தங்களது இலக்காக இருக்கும் என ஈரான் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜாரியாவின் கடற்கரையோரத்தில் சௌதி எண்ணெய் கப்பல்கள் சேதப்படுத்தப்பட்ட நிகழ்வு, அரபு வளைகுடா நாடுகளிக்கிடையில் கவலையை அதிகரித்துள்ளது. இந்த நாடுகளை அமெரிக்கா ஈரான் இடையிலான பிரச்சனையில் இழுக்க, சில சக்திகளால் இந்த நாச வேலை வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. டிரோன் தாக்குதல்கள் மூலம், சௌதி அரேபியாவில் இரண்டு எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் தாக்கப்பட்டன என்ற செய்தி, வளைகுடா நாடுகளின் உணர்வுகளை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்தப் பின்னணியில், இந்தப் பிராந்தியத்தில், சௌதி மற்றும் அமீரகம் பாதிக்காமல் இருக்க, ஈரானுக்கு எதிரான குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுப்பதன் தேவை குறித்து, சௌதியிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சௌதி வெளியுறவுத் துறை அமைச்சர் அதில் அல்-ஜுபேர், சௌதி அரேபியா போரை விரும்பவில்லை என்றும், அதேசமயம், ஈரானின் அனைத்து ஆத்திரமூட்டும் செய்கைகளுக்கும், சௌதி அரேபியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் கூறியுள்ளார். ஈரானால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தின் வெளிப்பாடாக, வரவிருக்கும் இஸ்லாமிய உச்சிமாநாட்டின் போது, அதனுடன் சேர்த்து, அரபு மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான ஒரு அவசரக் கூட்டத்திற்கும் மன்னர் சல்மான் ஏற்பாடு செய்துள்ளார். தற்போதுள்ள சூழலைப் பற்றி கலந்து பேசி ஒரு கூட்டு முடிவுக்கு வருவது இந்த சந்திப்பின் நோக்கமாக இருக்கும்.

சவூதி அரேபியா மற்றும் ஈரானுக்கு இடையில் அதிகரித்து வரும் வாக்குவாதத்தை வைத்துப் பார்த்தால், ஒரு சிறிய அளவிலான மோதலோ அல்லது முழு அளவிலான போரோ கூட ஒரு சாத்தியக்கூறாகவே தோன்றுகிறது. இது இந்தப் பிராந்தியத்திற்கே கேடு விளைவிக்கும் என்பதோடு, உலகம் முழுவதும், குறிப்பாக, ஆசிய பொருளாதாரத்தை இது வெகுவாக பாதிக்கும். ஆசிய நாடுகள், தங்களது எரியாற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தப் பிராந்தியத்தின் எண்ணெய் இறக்குமதிகளையே நம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சௌதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மீது நடந்துள்ள டிரோன் தாக்குதல்களை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது. பயங்கரவாதம் மற்றும் வன்முறையை, அவற்றின் அனைத்து வடிவங்கள் மற்றும் வகைகளிலும் எதிர்த்துப் போராடுவதற்கான தனது உறுதியையும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியது. பாரசீக வளைகுடாவின் சூழலைப் பொறுத்தவரை, இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இந்தப் பிராந்தியத்தில், எதிரெதிரே இருக்கும் நாடுகள் சுமுகமான முறையில் தங்களது வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், போர் இதற்கான முடிவாக இருக்கக்கூடாது என்றும் இந்தியா அப்பகுதி நாடுகளிடம் கூறி வருகிறது. இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு வலுவான பிணைப்பு இருப்பதோடு, அனைத்து வளைகுடா நாடுகளுடனும் இந்தியாவிற்கு நல்ல இருதரப்பு உறவுகள் நிலவி வருகின்றன. எரியாற்றல் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு இந்தப் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், வளைகுடா கூட்டு நாடுகளில், சுமார் 85 லட்சம் இந்தியர்கள் வாழ்கிறார்கள். இங்கு நிலைமை மோசமடைந்தால் அது இந்தியாவையும் இந்தியர்களையும் வெகுவாகப் பாதிக்கும்.

இந்தச் சூழலில், நாடுகளுக்கு இடையில் இருக்கும் வாக்குவாதம் போராக மாறாமல் இருக்க, அரசியல் ரீதியான ஒரு முயற்சியை எடுக்க சர்வதேச சமூகம் முனைப்பு காட்ட வேண்டும். பாரசீக வளைகுடாவில் போர் என்ற சூழல் ஏற்பட்டால், அது, விரிவடைந்து, பிராந்திய அல்லது உலகளாவிய போராட்டமாகும் சாத்தியக்கூறுகளும் உள்ளன என்பது கசப்பான உண்மையாகும்.

Pin It