மக்களவைத் தேர்தலில்  வரும் 29 ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தொகுதிகளில் இறுதிக்கட்ட பிரச்சாரம்  தீவிரம்.

மக்களவைத் தேர்தலில்  வரும் 29 ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தொகுதிகளில் இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பாஜக மூத்த தலைவரும், பிரதமருமான திரு நரேந்திர மோதி, நேற்று மாலை வாரணாசியில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியில் கலந்து கொண்டார். அவர் இன்று அந்தத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

முன்னதாக, திரு நரேந்திர மோதி உத்தரப் பிரதேசத்தில் பண்டா நகரிலும், பீஹாரில் உள்ள தர்பங்கா நகரிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், எதிர்க்கட்சிகள் சாதி அடிப்படையிலும், பிராந்திய அடிப்படையிலும் அரசியல் செய்வதாகக் குற்றம்  சாட்டினார். பாஜக தலைவர் திரு அமித் ஷா, தமது கட்சி வாக்கு வங்கி அரசியலை ஒருபோதும் நம்பியதில்லை என்று தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அவ்ரய்யா பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட திரு அமித் ஷா, மோதி அரசுக்கு நாட்டின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம் என்றும், அந்த அடிப்படையில் பாகிஸ்தானுக்கு சரியாக பதிலடி கொடுத்திருக்கிறது என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் திரு ராகுல் காந்தி நேற்று பேசுகையில், சிறந்த பொருளாதார நிபுணர்களைக் கொண்டு ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் அளிக்கும் நியாய் திட்டத்தைக் கொண்டு  வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவற்றால் ஏழை மக்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். சமாஜ்வாதி , பகுஜன் சமாஜ்  மற்றும் ராஷ்டிரிய லோக்தளம் கூட்டணித் தலைவர்கள் நேற்று பிரச்சாரம் மேற்கொள்ளும்போது, பாஜக அரசால் ஏழை மக்கள், இளைஞர்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்..

கன்னௌஜ் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் செல்வி மாயாவதி பேசுகையில், வேலை  வாய்ப்பற்ற இளைஞர்களையும், விவசாயிகளையும் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது டாக்டர் அம்பேத்காருக்கு பாரத ரத்னா விருது அளிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவர் திரு அஜித் சிங் பேசுகையில், மத்திய அரசில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதை நிரப்ப பாஜக அரசு முயற்சி செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

 

 

Pin It