மக்களவையின் முன்னாள் தலைவர் திரு சோம்நாத்  சாட்டர்ஜி, கொல்கொத்தாவில் இன்று மாரடைப்பால் காலமானார்.

மக்களவையின் முன்னாள் தலைவர் திரு சோம்நாத்  சாட்டர்ஜி, கொல்கொத்தாவில் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 89. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. சிறுநீரக பாதிப்பு காரணமாக அவருக்கு டயாலிஸிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி, இன்று காலை அவர் காலமானார்.

திரு சோம்நாத் சாட்டர்ஜி, பத்துமுறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  2004ஆம் ஆண்டு முதல், 2009  ஆம்  ஆண்டுவரை அவர் மக்களவைத் தலைவராகப் பதவி வகித்தார். அன்னாரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு நரேந்திர மோதி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில், பழுத்த உறுப்பினராக, அவர் தனது சிறப்பான பங்களிப்பு செய்தார் என, குடியரசுத் தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோதி, தனது டுவிட்டர் செய்தியில், நாடாளுமன்றத்தின் ஜனநாயக மாண்புகளுக்குப் பெருமளவில் சிறப்பு சேர்த்த அவர், ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்காக வலுவான குரல் கொடுத்தவர் என்று புகழ்ந்துரைத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், சோம்நாத் சாட்டர்ஜிக்கு இரங்கல் தெரிவிக்கும்போது, கட்சிப் பாகுபாடின்றி அனைவராலும் போற்றப்பட்டவர் அவர் என்று கூறியுள்ளார்.

Pin It