மக்களவை இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு பிரச்சாரம்  தீவிரம்.

மக்களவை இரண்டாம் கட்ட தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் அடங்கிய 97 மக்களவைத் தொகுதிகளுக்கான இரண்டாம்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் வியாழனன்று நடைபெற உள்ளது.

தமிழகத்தின் 39 தொகுதிகள், கர்நாடாகாவில் 14 தொகுதிகள், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 8 தொகுதிகள், அசாம், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 5 தொகுதிகள், சத்திஷ்கர் மற்றும் மேற்குவங்கத்தில் தலா மூன்று தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தொகுதிகள், மணிப்பூர், திரிபுரா மற்றும் புதுச்சேரியில் தலா ஒரு தொகுதி வீதம் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிகளில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

பிரதமர் திரு நரேந்திர மோத், பாஜக தலைவர் திரு அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் திரு ராகுல்காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் செல்வி மாயாவதி உள்ளிட்டோர், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு நரேந்திர  மோதி, மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார். கட்சி பாகுபாடின்றி, அனைத்து மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Pin It