மணிப்பூரில் ஐந்து மாத பொருளாதார முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது.

மணிப்பூரில் ஐக்கிய நாகா கவுன்சில், இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த ஐந்து மாதங்களாக நடத்தி வந்த பொருளாதார முற்றுகை, நேற்றிரவுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது.  மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பிஜேபி அரசு, மத்திய அரசு மற்றும் ஐக்கிய நாகா கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்று நடத்திய வெற்றிகரமான முத்தரப்புப் பேச்சுக்களைத் தொடர்ந்து முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய நாகா கவுன்சிலின் தலைவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்க மாநில அரசு தற்சமயம் ஒப்புக் கொண்டுள்ளது.  மேலும் பொருளாதார முற்றுகை தொடர்பாக, அதன் மாணவர் தலைவர்கள் உட்பட நாகா தலைவர்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படும்.  இன்னும் ஒரு மாதத்திற்குள் மீண்டும் முத்தரப்புப் பேச்சுக்களை நடத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.  இந்நடவடிக்கையைப் பாராட்டியுள்ள அம்மாநில ஆளுநர் திருமதி நஜ்மா ஹெப்துல்லா, பொருளாதார முற்றுகை நீக்கப்பட்டிருப்பது வடகிழக்கு மாநிலத்தின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் ஒரு புதிய சகாப்தத்தைக் கொண்டு வரும் என்று கூறியுள்ளார்.  இதற்கிடையில், இந்நடவடிக்கை ஒரு தொடக்கமே என்றும் பிரதமர் மோதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாநில அரசு முயற்சிக்கும் என்றும் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் கூறியுள்ளார்.

Pin It