மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே நேற்று புதுதில்லியில் மாரடைப்பால் காலமானார்.

 

மத்திய சுற்றுச்  சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே நேற்று புதுதில்லியில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60. அண்மை காலமாக உடல்நலம் பாதி[க்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதை அடுத்து தில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி  காலை ஒன்பதே முக்கால் மணி அளவில் காலமானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று தவே-யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் புதுதில்லியில் சப்தர்ஜங் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. குடியரசு துணைத்தலைவர் திரு ஹமீது அன்சாரி, பிரதமர் திரு நரேந்திரமோதி ஆகியோர் அனில்மாதவ் தவே-யின் இல்லத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  பிஜேபி மூத்த தலைவர் திரு எல் கே அத்வானி மற்றும் மத்திய அமைச்சர்களும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தவே-யின் உடல் நேற்றிரவு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பந்த்ராபான் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று அவரது உடல் நர்மதை ஆற்றங்கரையில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தவே  மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து கடந்த 2009-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். தவே-யின் மறைவையொட்டி தேசிய கொடிகள் இரண்டு நாட்களுக்கு  அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  மத்திய அமைச்சரவையும் பிரதமர் திரு நரேந்திரமோதி தலைமையில் கூடி தவே மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தது. அனில்தவே வகித்து வந்த சுற்றுச் சூழல் வனத்துறை, அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ் வர்தனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

Pin It