மனதின் குரல், 5ஆவது பகுதி

      27.10.19, CA, 11.30 AM, manadhin kural

ஒலிபரப்பு நாள் : 27.10.19

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  இன்று தீபாவளி புனிதமான நன்னாள்.  உங்கள் அனைவருக்கும் தீபாவளிப் பண்டிகை பலப்பல நல்வாழ்த்துக்கள்.  நம்முடைய நாட்டில் ஒரு வழக்கு உண்டு-

शुभम् करोति कल्याणं आरोग्यं धनसम्पदाम |

शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोस्तुते |

சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனசம்பதாம்.

சத்ருபுத்திவிநாசாய தீபஜோதிர்நமோஸ்துதே.

என்ன ஒரு அருமையான செய்தி பார்த்தீர்களா?  இந்த சுலோகத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால், ஒளியானது வாழ்க்கையில் சுகம், உடல்நலம் மற்றும் நிறைவு ஆகியவற்றைக் கொண்டு வந்து சேர்க்கிறது, இது எதிர்மறையான சிந்தனைகளை அழித்து, நல்ல சிந்தனைகளுக்கு வழிகாட்டுகிறது.  இப்படிப்பட்ட இறையருள்மிக்க ஜோதிக்கு என்னுடைய வணக்கங்கள்.  இந்த தீபாவளியை மனதில் தாங்கும் வகையில், ஒளியை மேலும் பரவச் செய்வோம், ஆக்கப்பூர்வமான எண்ணங்களைப் பரப்புவோம். விரோத மனப்பான்மை ஒழிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதைவிட சிறப்பான எண்ணம் வேறு என்னவாக இருக்க முடியும், கூறுங்கள்!!  இன்றைய காலகட்டத்தில் உலகின் பல நாடுகளில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.  குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இதில் ஏதோ இந்திய சமுதாயத்தினர் மட்டுமே பங்கெடுத்துக் கொள்கிறார்கள் என்பதல்ல; இப்போது பலநாட்டு அரசுகளும், அங்கிருக்கும் குடிமக்களும், சமூக இயக்கங்களும் கூட, தீபாவளியை முழுமையான குதூகலம், உற்சாகம் ஆகியவற்றோடு கொண்டாடுகிறார்கள்.  ஒருவகையில் அங்கே பாரத நாட்டையே ஏற்படுத்தி விடுகிறார்கள் என்றுகூடச் சொல்லலாம்.

நண்பர்களே, உலகத்தில் பண்டிகைச் சுற்றுலா எனும் போதே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது.  நம்முடைய நாடே கூட பண்டிகைகளின் நாடு தானே!!  இதில் பண்டிகைச் சுற்றுலாவுக்கு ஏராளமான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.  நம்முடைய முயற்சிகள் எப்படி இருக்க வேண்டுமென்றால், ஹோலி, தீபாவளி, ஓணம், பொங்கல், பிஹு என எந்தப் பண்டிகையாக இருந்தாலும் சரி, அவற்றை நாம் பறைசாற்ற வேண்டும்; அதுமட்டுமல்லாமல் இந்தப் பண்டிகைகளின் குதூகலத்தில் மற்ற மாநிலத்தவரை, மற்ற தேசத்தவரையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.  நம்முடைய நாட்டிலே ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு பகுதியிலும், பல்வேறு வகையான கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன; இவற்றில் மற்ற நாடுகளைச் சார்ந்தவர்கள் அதிக நாட்டம் கொள்கிறார்கள்.  ஆகையால் பாரதத்தில் பண்டிகைக்காலச் சுற்றுலாவை விரிவுபடுத்துவதில், அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்குபணி மிக முக்கியமானது.

எனதருமை நாட்டுமக்களே, நாம் இந்த தீபாவளியன்று வித்தியாசமான சிலவற்றைச் செய்வோம் என்று கடந்த மனதின் குரலில் நாம் முடிவு செய்திருந்தோம், இல்லையா!  நாமனைவரும் இந்த தீபாவளியன்று இந்தியாவின் பெண்கள் சக்தியையும் அதன் சாதனைகளையும் கொண்டாடுவோம், அதாவது இந்தியத் நாட்டின் திருமகளுக்கு மரியாதை செய்வோம் என்று கூட கூறியிருந்தேன், அல்லவா?  சில நாட்களிலேயே சமூக ஊடகத்திலே எண்ணிலடங்கா உத்வேகம் அளிக்கும் கதைகள் வந்து குவியத் தொடங்கி விட்டன.  வரங்கல்லைச் சேர்ந்த கோடிபாக ரமேஷ் அவர்கள் நமோஆப் எனும் செயலியில், தன்னுடைய தாயார் தான் தனது சக்தி என்று குறிப்பிட்டிருக்கிறார்.  1990ஆம் ஆண்டிலே, என்னுடைய தகப்பனார் காலமான வேளையிலே என்னுடைய தாயார் ஐந்து பிள்ளைகளை பராமரிக்கும் பொற்ப்பை ஏற்றுக் கொண்டார்.  இன்று நாங்கள் ஐந்து சகோதரர்களுமே நல்ல வேலைகளில் அமர்ந்திருக்கிறோம்.  என்னுடைய தாயார் தான் என்னைப் பொறுத்த மட்டில் இறைவன்.  எனக்கு அவர் தான் எல்லாமே, ஆகையால் என்னைப் பொறுத்த வரைக்கும் அவர் தான் பாரதநாட்டுத் திருமகள் என்று பதிவு செய்திருக்கிறார்.

ரமேஷ் அவர்களே, உங்கள் தாயாருக்கும் என் வணக்கங்கள்.  அடுத்ததாக, ட்விட்டரில் மிகவும் ஈடுபாட்டோடு இருக்கும் கீதிகா ஸ்வாமி அவர்கள் தன்னைப் பொறுத்த மட்டில் மேஜர் குஷ்பூ கன்வர் தான் பாரத நாட்டின் திருமகள் என்று கூறியிருக்கிறார்.  இவர் ஒரு பேருந்து நடத்துனரின் மகள், இவர் அஸாம் ரைபிள்ஸ் இராணுவப் பிரிவின் ஒரு பெண்கள் அணிக்குத் தலைமை தாங்கினார்.  கவிதா திவாடீ அவர்களைப் பொறுத்த மட்டில், பாரதநாட்டின் திருமகள் என்றால் அவரது மகள் தான், அவர் தான் இவருக்கு சக்தியை அளிக்கிறார்.  தனது மகள் அருமையாக ஓவியம் வரைகிறார் என்பதில் தாய்க்கு மிகவும் பெருமை.  மேலும் அவர் CLAT என்ற சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாராம்.  இதே போல மேகா ஜெயின் அவர்கள் என்ன எழுதியிருக்கிறார் என்றால், 92 வயது நிரம்பிய ஒரு மூதாட்டி, பல ஆண்டுகளாக க்வாலியர் இரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவசமாக குடிநீர் வழங்கிக் கொண்டிருக்கிறாராம்; பாரத நாட்டின் இந்தத் திருமகளின் பணிவு மற்றும் கருணையால் பெருமளவில் உத்வேகம் அடைந்திருப்பதாக மேகா அவர்கள் தெரிவிக்கிறார்.  இப்படி ஏகப்பட்ட தகவல்களை மக்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.   நீங்கள் கண்டிப்பாகப் படித்துப் பாருங்கள், உத்வேகம் அடையுங்கள், அதில் இடம் பெற்றிருப்பவர்களைப் போலவே நீங்களும் உங்கள் அக்கம்பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒன்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள், நான் இந்த சந்தர்ப்பத்தில் பாரதநாட்டு இந்த அனைத்துத் திருமகள்களுக்கும் மரியாதை கலந்த என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, 17ஆவது நூற்றாண்டின் பிரபலமான கவிஞர் சஞ்சீ ஹொன்னம்மா அவர்கள், கன்னட மொழியில் ஒரு கவிதையை இயற்றியிருந்தார்.  இப்போது நாம் பாரதநாட்டுத் திருமகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோமே, அதே பாவம், அதே உணர்வு, அதே சொற்கள்….. இதற்கான அடித்தளம் 17ஆம் நூற்றாண்டிலேயே அவர் அமைத்து விட்டதாகவே நமக்குத் தெரிகிறது.  என்ன அருமையான சொற்கள், என்ன அருமையான உணர்வு, எத்தனை உன்னதமான எண்ணங்கள், கன்னட மொழியில் இந்தக் கவிதை இதோ –

பெண்ணிந்த பெர்மேகோGண்டனு ஹிமவந்தனு

பெண்ணிந்த ப்ரூகு பேர்ச்சிதdhaனு

பெண்ணிந்த ஜனகராயனு ஜஸுவடேdhaனு

அதாவது இதன் பொருள் என்னவென்றால், இமாலயம் என்ற மலைகளின் அரசன் தனது மகளான பார்வதி காரணமாகவும், ப்ருகு மஹரிஷியானவர் தனது மகள் இலக்ஷ்மி காரணமாகவும், ஜனக மஹாராஜா தனது மகள் சீதை காரணமாகவும் பிரபலமானார்கள்.  நமது பெண்கள் தாம் நமது பெருமை, இந்தப் பெண்களின் மகத்துவம் காரணமாகவே நமது சமூகத்தில் ஒரு வலுவான அடையாளம் ஏற்பட்டிருக்கிறது, இதற்கு ஒரு பிரகாசமான எதிர்காலமும் காத்திருக்கிறது.

என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதியன்று, உலகெங்கிலும் ஸ்ரீ குருநானக்தேவ் அவர்களின் 550ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படும்.  குருநானக்தேவ் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் பரவிக் காணப்படுகிறது.  உலகின் பல நாடுகளில் நம்முடைய சீக்கிய சகோதர சகோதரிகள் வசித்து வருகிறார்கள், அவர்கள் குருநானக்தேவ் அவர்களின் உயரிய நோக்கங்களுக்கு முழுமையாகத் தங்களை அர்ப்பணித்தவர்களாக இருக்கிறார்கள்.  நான் வேன்கூவர் மற்றும் தெஹ்ரானில் உள்ள குருத்வாராக்களுக்குச் சென்றதை என்றுமே மறக்க முடியாது.   ஸ்ரீ குருநானக்தேவ் அவர்களைப் பற்றிப் பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ள இருக்கின்றன, ஆனால் இவற்றுக்கு மனதின் குரலின் பல பகுதிகள் முழுமையாகத் தேவைப்படும்.  நானக்தேவ் அவர்கள் சேவை புரிவதையே அனைத்திற்கும் மேலாகக் கருதினார்.  குருநானக்தேவ் அவர்கள், தன்னலமற்றுப் புரியும் சேவை விலைமதிப்பில்லாதது என்று கருதினார்.  தீண்டாமை போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிராக பலமாகக் குரல் கொடுத்தார், செயல்பட்டார்.  ஸ்ரீ குருநானக்தேவ் அவர்களின் செய்தி, உலகின் மூலை முடுக்கெங்கும் பரவியது.  அவரது காலத்தில் அதிக அளவு பயணம் செய்தவர்களில் அவரும் ஒருவர்.  பல இடங்களுக்குச் சென்றார், எங்கே சென்றாலும் தனது எளிமை, பணிவு ஆகியவை வாயிலாக அனைவரின் மனங்களையும் வெற்றி கொண்டு விடுவார்.  குருநானக்தேவ் அவர்கள் பல மகத்துவம் வாய்ந்த சமயப் பயணங்களை மேற்கொண்டார், இவை உதாஸீ என்று அழைக்கப்படுகின்றன.  நல்லிணக்கம், சமத்துவம் என்ற செய்திகளை அவர் வடக்கு முதல் தெற்கு வரையிலும், கிழக்கு முதல் மேற்கு வரையிலும், அனைத்துத் திசைகளிலும், அனைத்து இடங்களைச் சேர்ந்த மக்களிடத்திலும், இறைநெறியாளர்கள், புனிதர்கள் ஆகியோரிடத்திலும் கொண்டு சென்றார்.  அஸாமைச் சேர்ந்த புகழ்மிக்க புனிதரான ஷங்கர்தேவ் அவர்கள் கூட, இவரால் உத்வேகம் அடையப் பெற்றார் என்று கருதப்படுவது உண்டு.  இவர் ஹரித்வாரின் புண்ணிய பூமிக்குப் புனித யாத்திரை மேற்கொண்டார்.  காசியின் ஒரு புண்ணிய இடமான குருபாக் குருத்வாராவில் ஸ்ரீ குருநானக்தேவ் அவர்கள் தங்கியிருந்தார் என்றும் கூறப்படுகிறது.  இவர் பௌத்த சமயத்தோடு தொடர்புடைய ராஜ்கீர் மற்றும் கயா போன்ற புனிதத் தலங்களுக்கும் சென்றிருக்கிறார்.  தெற்கில் குருநானக்தேவ் அவர்கள் இலங்கை வரை பயணித்திருக்கிறார்.  கர்நாடகத்தின் பீதருக்கு பயணம் மேற்கொண்ட வேளையில், அங்கே நிலவிய தண்ணீர்த்தட்டுப்பாட்டுக்கு குருநானக்தேவ் அவர்களே தீர்வு கண்டார்.  குருநானக் ஜீரா சாஹப் என்ற பெயர் கொண்ட ஒரு பிரபலமான இடம் பீதரில் இருக்கிறது, இது அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்பதை இது நமக்கெல்லாம் நினைவு படுத்துகிறது.   ஒரு காலகட்டத்தில் குருநானக் அவர்கள் வடக்கில், கஷ்மீரம் மற்றும் அதனருகில் இருக்கும் பகுதிகளுக்கு யாத்திரை மேற்கொண்டார்.  இதன் காரணமாக சீக்கிய சமயத்தவர்களுக்கும் கஷ்மீரத்துக்கும் இடையே, மிகவும் வலுவான ஒரு இணைப்பு ஏற்பட்டது.  குருநானக்தேவ் அவர்கள் திபெத்திற்கும் சென்றார், அங்கே இருந்த மக்கள் அவரை குருவாக ஏற்றுக் கொண்டார்கள்.  தலயாத்திரை மேற்கொண்ட உஸ்பெக்கிஸ்தான் நாட்டிலும் இவர் வணங்கப்படுகிறார்.  இவரது புனிதப்பயணத்தின் ஒரு பகுதியாக, இவர் மிகப்பெரிய அளவில் இஸ்லாமிய நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்; இதில் சௌதி அரேபியா, ஈராக், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் அடங்கும்.  பல இலட்சக் கணக்கான மக்களின் மனங்களிலும் இவர் இடம் பிடித்தார், அவர்கள் முழுமையான ஈடுபாட்டுடன் இவரது உபதேசங்களைப் பின்பற்றினார்கள், இன்றும் பின்பற்றி வருகிறார்கள்.  இப்போது சில நாட்கள் முன்பாக, சுமார் 85 நாடுகளைச் சேர்ந்த அரசுத் தூதுவர்கள், தில்லியிலிருந்து அம்ருதசரசுக்குச் சென்றார்கள்.  அங்கே அவர்கள் பொற்கோயிலை தரிசனம் செய்தார்கள், இவையனைத்தும் குருநானக்தேவ் அவர்களின் 550ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது.  அங்கே அனைத்து அரசுத் தூதுவர்களும் பொற்கோயிலை தரிசனம் செய்ததோடு மட்டுமல்லாமல், சீக்கிய பாரம்பரியம், கலாச்சாரம் இவை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.  இதன் பிறகு பல அரசுத் தூதுவர்களும் சமூக ஊடகங்களில் அந்த இடத்தின் படங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.  மிகவும் பெருமையான, நல்ல அனுபவங்களை அவர்கள் எழுதினார்கள்.  என்னுடைய ஆசை என்னவென்றால், குருநானக்தேவ் அவர்களின் 550ஆவது பிறந்தநாள் என்பது அவரது கருத்துக்கள், அவரது இலட்சியங்கள் ஆகியவற்றை நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்க பெரியதொரு உத்வேகத்தை அளிக்க வேண்டும் என்பது தான்.  மீண்டும் ஒருமுறை தலைவணங்கி குருநானக்தேவ் அவர்களுக்கு நான் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்குப் பிரியமான சகோதர சகோதரிகளே, அக்டோபர் 31ஆம் தேதியை நீங்கள் கண்டிப்பாக நினைவில் கொள்வீர்கள் என்பதை நான் அறிவேன்.   இந்த நாளன்று தான் பாரத நாட்டின் இரும்பு மனிதரான சர்தார் வல்லப்பாய் படேல் அவர்கள் பிறந்தார், இவர் தான் நாட்டை ஓரிழையில் இணைத்த சூத்திரதாரி.  சர்தார் படேல் அவர்களிடத்தில் மக்களை ஒருங்கிணைக்கும் அற்புதமான திறமை இருந்தது, அதே வேளையில், கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தவர்களிடத்தில் இணக்கத்தை ஏற்ப்படுத்தக்கூடிய வல்லமையும் இருந்தது.  சர்தார் படேல் அவர்கள் மிக நுணுக்கமான விஷயங்களையும் கூட மிகவும் ஆழமாக உரைத்துப் பார்த்தார்.  அவர் தான் உண்மையில் Man of Detail, நுணுகிப் பார்ப்பதில் சமர்த்தர்.  இவை தவிர அமைப்புரீதியான செயல்பாடுகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.  திட்டங்களை ஏற்படுத்துவது, உத்திகளை வடிவமைப்பது ஆகியவை அவருக்குக் கைவந்த கலை.  சர்தார் அவர்களின் செயல்பாடு பற்றி படிக்கும் போது, அவரது திட்டமிடல் என்பது எத்தனை பலமானதாக இருந்தது என்பதை நம்மால் அறிய முடிகிறது.  1921ஆம் ஆண்டு, அஹ்மதாபாதில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள நாடுமுழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் வரவிருந்தார்கள்.  மாநாட்டின் அனைத்து ஏற்பாடுகளும் சர்தார் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.  நகரின் குடிநீர் வலைப்பின்னலை சீர்செய்ய, இந்த சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார்.  யாருக்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு என்பது ஏற்பட்டு விடக் கூடாது என்பதை அவர் உறுதி செய்து கொண்டார்.  அது மட்டுமல்ல, மாநாட்டில் கலந்து கொள்ளும் எந்தவொரு பிரதிநிதியின் உடைமைகளோ, காலணியோ களவு போகாமல் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்திய சர்தார் அவர்கள் செய்ததைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், மிகுந்த ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.  அவர் விவசாயிகளோடு தொடர்பு கொண்டார், அவர்களிடம் கதர்ப் பைகளைச் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.  விவசாயிகள் பைகளைத் தயாரித்து, பிரதிநிதிகளிடம் விற்பனை செய்தார்கள்.  இந்தப் பைகளில் காலணிகளைப் போட்டுக் கொண்டு, தங்களுடனேயே வைத்துக் கொள்ளும் பிரதிநிதிகளின் மனங்களில், காலணி களவு போய் விடுமோ என்ற அழுத்தம் நீங்கியது.  அதே வேளையில் கதர் விற்பனையில் கணிசமான அளவு அதிகரிப்பும் உறுதி செய்யப்பட்டது.  அரசியலமைப்புச் சபையில் மெச்சத்தகுந்த பங்களிப்பு அளித்தமைக்கு, எக்காலத்தும் சர்தார் படேல் அவர்களுக்கு நமது நாடு நன்றிக்கடன் பட்டிருக்கும்.  அவர் அடிப்படை உரிமைகளைத் தீர்மானிக்கும் மகத்துவம் நிறைந்த பணியாற்றினார்; இதன் காரணமாக சாதி, சமயம் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படக்கூடிய எந்தவிதமான ஏற்றத்தாழ்வுக்கும் இடம் இருக்கவில்லை.

நண்பர்களே, நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் என்ற வகையில் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்கள், சமஸ்தானங்களை ஒன்றிணைப்பதில், ஒரு மிகப்பெரிய, வரலாற்றின் ஏடுகளில் பொன் எழுத்துக்களில் பொறிக்கத்தக்க, பகீரத முயற்சியில் வெற்றி பெற்றார்.  சர்தார் வல்லப்பாய் அவர்களின் சிறப்புத்தன்மை என்னவென்றால், அவரது பார்வையிலிருந்து எந்த ஒன்றும் தப்பாது என்பது தான்.  ஒரு தரப்பில் அவரது பார்வை ஹைதராபாத், ஜூனாகட் மற்றும் பிற பகுதிகள் மீது பதிந்திருந்தது என்று சொன்னால், மறுபுறத்தில் அவரது கவனம் தொலைவாக உள்ள தெற்கில் இருக்கும் லட்சத்தீவுகளின் மீதும் பதிந்திருந்தது.  உண்மையில் நாம் சர்தார் படேல் அவர்களின் முயற்சிகள் பற்றிப் பேசும் வேளையில், நாட்டை ஒருங்கிணைப்பதில் சில குறிப்பிட்ட பகுதிகள் தொடர்பாக அவர் அளித்த பங்களிப்பைப் பற்றி மட்டும் பேசுகிறோம்.  லட்சத்தீவுகள் போன்ற சிறிய இடம் விஷயத்தில் கூட, அவர் மகத்தான பங்குபணி ஆற்றியிருக்கிறார்.  இந்த விஷயம் அரிதாகவே நினைவில் கொள்ளப்படுகிறது.  லட்சத்தீவுகள் என்பவை சிலதீவுகளின் கூட்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.  இவை இந்தியாவின் மிக அழகான பகுதிகளில் ஒன்று.  1947ஆம் ஆண்டு நாடு துண்டாடப்பட்ட வேளையில், நமது அண்டை நாட்டின் பார்வை லட்சத்தீவுகள் மீது பாய்ந்தது; உடனே தனது கொடிதாங்கிய கப்பலை அங்கே அது அனுப்பி வைத்தது.  சர்தார் படேல் அவர்களுக்கு இந்தச் செய்தி எட்டியவுடனேயே, அவர் ஒரு நொடிகூட தாமதிக்காமல், உடனடியாக தீவிரமான நடவடிக்கையில் இறங்கினார்.  அவர் முதலியார் சகோதரர்களான ஆர்காட் இராமசாமி முதலியார், ஆர்காட் லக்ஷ்மணசாமி முதலியார் ஆகியோரிடம், உடனடியாக திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த சிலரோடு சென்று, அங்கே மூவண்ணக் கொடியை ஏற்றுங்கள் என்றார்.  லட்சத்தீவுகளில் முதலில் மூவண்ணக்கொடி தான் பறக்க வேண்டும் என்றார் அவர்.  அவரது ஆணைக்கு உட்பட்டு, உடனடியாக மூவண்ணக்கொடி பறக்க விடப்பட்டது, பார்த்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே, இலட்சத்தீவுகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற எதிரியின் தீய ஆசையில் மண்ணள்ளிப் போடப்பட்டது.  இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, லட்சத்தீவுகளின் வளர்ச்சியின் பொருட்டு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலியார் சகோதரர்களிடம் சர்தார் படேல் அவர்கள் கேட்டுக் கொண்டார்.   இன்று லட்சத்தீவுகள், இந்தியாவின் முன்னேற்றத்தில், தங்களது மகத்துவமான பங்களிப்பை அளித்து வருகின்றன.  இது ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா இடம்.  நீங்கள் அனைவரும் இதன் அழகான தீவுகளையும், சமுத்திரக் கரைகளையும் சென்று பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எனதருமை நாட்டுமக்களே, 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று சர்தார் ஐயாவின் நினைவைப் போற்றும் வகையில், ஒற்றுமைச் சிலை நாட்டிற்கும் உலகிற்கும் அர்ப்பணிக்கப்பட்டது.  இது உலகின் மிகப்பெரிய உருவச்சிலை.  அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர தேவியின் சிலையை விட உயரத்தில் இரண்டு பங்கு கொண்ட சிலை இது.  உலகின் மிக உயரமான சிலை எனும் போது, ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமிதம் ஏற்படுகிறது.  ஒவ்வொரு இந்தியனின் தலையும் பெருமையோடு நிமிர்கிறது.  ஒரே ஆண்டில், 26 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், ஒற்றுமைச் சிலையைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது.  அப்படியென்றால், ஒவ்வொரு நாளும் 8500 பேர்கள் ஒற்றுமைச் சிலையின் பெருமையை தரிசனம் செய்திருக்கிறார்கள்.  சர்தார் வல்லப்பாய் படேல் அவர்கள் மீது இந்த மக்களின் இதயங்களில் நம்பிக்கை, அர்ப்பணிப்பு ஆகியவை இருக்கின்றன, இவற்றை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது புலனாகிறது.  இப்போது அங்கே சப்பாத்திக்கள்ளித் தோட்டம், பட்டாம்பூச்சிகள் தோட்டம், வனச்சுற்றுலா, குழந்தைகள் ஊட்டச்சத்துப் பூங்கா, ஒற்றுமை நர்சரி போன்ற பல கவர்ச்சிமிகு மையங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன; இதனால் அந்தப் பகுதியின் பொருளாதாரம் மேம்பாடு கண்டிருக்கிறது, மக்களுக்கு வேலைவாய்ப்பிற்கான புதியபுதிய சந்தர்ப்பங்கள் கிடைத்து வருகின்றன.  வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மனதின் கொண்டு, பல கிராமவாசிகள், தங்கள் வீடுகளில், home stay வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.  இல்லத்தில் தங்குவசதிகளை அமைத்துக் கொடுப்பவர்களுக்கு, தொழில்ரீதியான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.  அங்கிருக்கும் மக்கள் இப்போது Dragon fruit என்ற பழத்தை பயிர் செய்யவும் தொடங்கியிருக்கிறார்கள், விரைவிலேயே இது அங்கிருப்போரின் வாழ்வாதாரத்துக்கான முக்கியமான ஆதாரமாக ஆகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நண்பர்களே, நாட்டிற்காக அனைத்து மாநிலங்களுக்காக, சுற்றுலாத் துறைக்காக, இந்த ஒற்றுமைச் சிலை என்பது ஒரு ஆய்வுப் பொருளாக ஆக முடியும்.  எப்படி ஒரே ஆண்டிற்குள்ளாக, ஒரு இடம், உலகப் பிரசித்திபெற்ற சுற்றுலா இடமாக மாற முடியும் என்பதற்கு நாமனைவரும் சாட்சிகளாக இருக்கின்றோம்.  அங்கே நம் நாட்டைச் சேர்ந்தவர்களும், அயல்நாடுகளிலிருந்து வருபவர்களும் இருக்கிறார்கள்.  போக்குவரத்து, தங்குவசதிகள், வழிகாட்டிகள், சூழலுக்கு நேசமான அமைப்புகள், ஒன்றன்பின் ஒன்றாக இப்படி பல அமைப்புகள் மேம்பாடு அடைந்து வருகின்றன.  மிகப்பெரிய அளவில் பொருளாதார அமைப்பு மேம்பாடு அடைந்து வருகிறது.  பயணிகளின் தேவைக்கேற்ப அங்கே வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.  அரசுமே கூட தனது பங்குபணியை நிறைவேற்றி வருகிறது.  நண்பர்களே, உலகின் மகத்துவம் வாய்ந்த 100 சுற்றுலாத் தலங்களில் ஒற்றுமைச் சிலைக்கு முக்கியமான இடத்தை டைம் பத்திரிக்கை சில நாட்கள் முன்னர் அளித்ததை அறியும் போது, எந்த இந்தியருக்குத் தான் பெருமை ஏற்படாது!!  நீங்களும் கூட, உங்கள் விலைமதிப்பில்லாத நேரத்தை கொஞ்சம் ஒதுக்கி, ஒற்றுமைச் சிலையைப் பார்க்கச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்; ஆனால் அதே வேளையில், பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு இந்தியரும், தங்களது குடும்பத்தாரோடு இந்தியாவின் குறைந்தபட்சம் 15 இடங்களுக்காவது சென்று பாருங்கள், அங்கே இரவிலே தங்குங்கள், இந்த என்னுடைய வேண்டுகோளை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

நண்பர்களே, 2014ஆம் ஆண்டு தொடங்கி, அக்டோபர் மாதம் 31ஆம் தேதியை நாம் தேச ஒற்றுமை தினமாக கடைப்பிடித்து வருகிறோம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  இந்த நாள், நமது தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றை என்ன விலை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்ற செய்தியை நமக்களிக்கிறது.  அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று, ஒவ்வொரு ஆண்டினைப் போலவும் ஒற்றுமைக்கான ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.  இதில் சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும், ஒவ்வொரு நிலையைச் சேர்ந்தவர்களும் இடம் பெறுவார்கள்.  ஒற்றுமைக்கான ஓட்டம் என்பது, ஒன்றுபட்ட தேசம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.  இது ஒரே திசையை நோக்கிப் பயணித்து ஒரே இலக்கை எட்ட விரும்புகிறது.  அந்த ஒரே இலட்சியம் – ஒரே பாரதம், உன்னத பாரதம்.

கடந்த ஐந்தாண்டுகளாகவே, தில்லியில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல நகரங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும், தலைநகரங்களிலும், மாவட்ட தலைமையகங்களிலும், சின்னச்சின்ன இரண்டாம் நிலை நகரங்கள் வரை, மிகப்பெரிய அளவில் ஆண்கள், பெண்கள், நகரவாசிகள், கிராமவாசிகள், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் மிகப்பெரிய அளவில் இதில் பங்கெடுத்து வருகிறார்கள்.  உள்ளபடியே, இன்றைய காலத்தில், மக்களுக்கு நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயத்தின் மீது ஒரு பேரார்வம் இருப்பதை நம்மால் காண முடிகிறது.  ஒற்றுமைக்கான ஓட்டம் என்பதே கூட இதற்கான ஒரு சிறப்பான வாய்ப்பு தான்.  ஓடுவது என்பது உடல்ரீதியாக, மனரீதியாக, மூளைச் செயல்பாட்டு ரீதியாக என அனைத்துக்குமே நலன் பயக்கும் ஒரு விஷயம்.  ஆனால் இங்கே ஓடுதல் இருக்கிறது, ஃபிட் இண்டியா எனும் வகையில் இதை இயல்பாகவே ஆக்குகிறோம்.  கூடவே ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நோக்கமும் இதில் கலந்திருக்கிறது.  அந்த வகையில் இந்த ஓட்டம் உடல் மட்டுமல்லாமல், உள்ளம், நற்பண்புகள் ஆகியவற்றுக்காகவும், இந்தியாவின் ஒற்றுமைக்காகவும், இந்தியா புதிய சிகரங்களைத் தொடுவதற்காகவும் செயல்படுத்தப்படுகிறது.  நீங்கள் எந்த நகரத்தில் வசித்தாலும் சரி, அங்கே உங்களைச் சுற்றி எங்கேனும் ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெறுகிறதா என்பதைப் பற்றி விசாரிக்கலாம்.  இதன் பொருட்டு runforunity.gov.in என்ற ஒரு இணைய முகப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.  நாடுமுழுவதிலும் ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெறும் இடங்கள் பற்றி இந்த இணைய முகப்பிலே தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.  நீங்கள் அனைவரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று கண்டிப்பாக ஓட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வீர்கள் என்ற முழுநம்பிக்கை எனக்கு இருக்கிறது – இது பாரதத்தின் ஒற்றுமைக்காக மட்டுமல்ல, உங்கள் உடலுறுதிக்காகவும் தான்.

என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, சர்தார் படேல் அவர்கள் நாட்டை ஒற்றுமை என்ற இழை கொண்டு இணைத்தார்.  ஒற்றுமையின் இந்த மந்திரம் நமது வாழ்க்கையில் ஒரு நற்பண்பைப் போன்றது.  பாரதம் போன்ற பன்முகத்தன்மை நிறைந்த நாட்டிலே நாம் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு படிநிலையிலும் ஒற்றுமைக்கான இந்த மந்திரத்திற்கு பலம் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  எனதருமை நாட்டுமக்களே, நாட்டின் ஒற்றுமை, பரஸ்பர நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு வலுசேர்க்க நம்முடைய சமூகம் எப்பொழுதும் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், விழிப்போடும் செயல்பட்டிருக்கிறது.  நாம் நம்மைச் சுற்றிப் பார்த்தோமேயானால், பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்க்க நீடித்த செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள் பற்றிய பல எடுத்துக்காட்டுக்கள் கண்ணுக்குப் புலப்படும்.  ஆனால் பலவேளைகளில், சமூகத்தின் முயற்சி, அதன் பங்களிப்பு, நினைவுப் பலகையிலிருந்து மிக விரைவாகவே கரைந்து காணாமல் போய் விடுகிறது.

நண்பர்களே, 2010ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.  இராமஜன்மபூமி விவகாரத்தில் இலாஹாபாத் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.  அந்த நாட்களை சற்று நினைவில் இருத்திப் பாருங்கள், எப்படிப்பட்ட சூழல் நிலவியது!!  எத்தனை வகைவகையான பேர்கள் களத்தில் குதித்தார்கள்!!  எத்தனை வகைவகையான ஆர்வக்குழுக்கள் அந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள, என்ன மாதிரியான மொழியை எல்லாம் பயன்படுத்தினார்கள்!!  சில கருத்துப் பித்தர்களும், ஊதிப் பெரிதாக்குபவர்களும், தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள மட்டுமே என்ன மாதிரியான பொறுப்பற்ற சொற்களைப் பேசினார்கள், என்பதெல்லாம் நமக்கு நினைவிருக்கிறது.  ஆனால் இவை அனைத்தும் ஐந்து நாட்கள், ஏழு நாட்கள், பத்து நாட்கள் வரை தொடர்ந்தது, ஆனால் முடிவு வந்த போது, ஒரு ஆனந்தம் அளிக்க கூடிய ஆச்சரியமான மாற்றம் நாடுமுழுக்க உணரப்பட்டது.  ஒரு புறம் இரண்டு வாரங்கள் வரை அனல் பறக்க வேண்டும் என்பதற்காக அனைத்தும் செய்யப்பட்டன.  ஆனால் இராமஜன்மபூமி பற்றிய தீர்ப்பு வெளியானவுடன், அப்போதைய அரசு, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சமுதாயம், அனைத்து சமயங்களின் பிரதிநிதிகள், சாதுக்கள்-புனிதர்கள் ஆகியோர் மிகவும் நிதானமான, நடுநிலையான கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.  சூழலில் இருந்த அழுத்தத்தைக் குறைக்கும் முயல்வு இது.  ஆனால் அந்த நாட்கள் எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன.  எப்போதெல்லாம் அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேனோ, அப்போதெல்லாம் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.  நீதிமன்றத்தின் மாட்சிமைக்கு மிகவும் கௌரவம்மிக்க வகையிலே மதிப்பளிக்கப்பட்டது; எந்த நிலையிலும் கருத்து மோதல்களின் அனலும், அழுத்தமும் சூழலை பாதிக்க விடப்படவில்லை.  இந்த விஷயங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  இது நமக்கு மிகுந்த ஆற்றலை அளிக்கிறது.  அந்த நாட்கள், அந்தக் கணங்கள், நம்மனைவருக்கும் நமது கடமையை நினைவுபடுத்துபவை.  ஒற்றுமை நாதமானது தேசத்திற்கு எத்தனை பெரிய பலமளிக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

எனதருமை நாட்டுமக்களே, அக்டோபர் மாதம் 31ஆம் தேதி, நமது தேசத்தின் முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமாகும்.  நாட்டை ஒரு பேரதிர்ச்சி தாக்கியது.  நான் இன்று அவருக்கும் என் ச்ரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

என் இனிய நாட்டுமக்களே, இன்று வீடுதோறும் நடக்கும் ஒரு விஷயம், தொலைவுகளிலும் கேட்கப்படுகிறது, ஒவ்வொரு கிராமம் பற்றியும் ஒரு விஷயம் காதில் விழுகிறது, வடக்கு தொடங்கி தெற்கு வரை, கிழக்கு தொடங்கி மேற்கு வரை, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் இந்த ஒரு விஷயம் பற்றி பேசப்படுகிறது கேட்கப்படுகிறது என்றால், அது தூய்மை பற்றிய கதை தான்.  ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு கிராமமும், தூய்மை தொடர்பான தங்களது சுகமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள்; ஏனென்றால், தூய்மையின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த முயல்வு, 125 கோடி இந்தியர்களின் முயல்வு.  பலனை அனுபவிக்கும் கடவுளர்களுமே கூட, 125 கோடி இந்தியர்கள் தாம்.  ஆனால் ஒரு சுகமான அனுபவம், சுவாரசியமான அனுபவமாகவும் இருக்கிறது.  நான் கேள்விப்பட்டேன், ஏன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று தோன்றியது, பகிர்கிறேன்.  சற்றே கற்பனை செய்து பாருங்கள்… உலகின் மிக உயரமான போர்க்களம், அங்கே வெப்பநிலை பூஜ்யத்திற்குக் கீழே 50-60 டிகிரி என்ற நிலை.  காற்றில் பிராணவாயு என்பது ஏதோ பெயரளவில் மட்டுமே இருக்கிறது.  இத்தனை விபரீதமான சூழ்நிலையில், இத்தனை சவால்களுக்கு இடையிலே வாழ்வது என்பது எந்தவொரு பராக்கிரமச் செயலைக் காட்டிலும் சற்றும் குறைவானது அல்ல.  இத்தகைய கடுமையான சூழ்நிலையில், நமது வீரம்நிறைந்த படையினர், நெஞ்சை நிமிர்த்தி மட்டும் எல்லைகளைப் பாதுகாக்கவில்லை, அங்கே தூய்மையான சியாச்சின் இயக்கத்தையும் நடத்தி வருகிறார்கள்.  இந்திய இராணுவத்தின் இந்த அற்புதமான கடமையுணர்வுக்காக நான் நாட்டுமக்கள் தரப்பிலிருந்து, அவர்களுக்கு என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.  அங்கே இருக்கும் கடுமையான குளிரில் எந்தப் பொருளும் மக்குவது என்பது கடினமானது.  இந்த நிலையில், குப்பைக் கூளங்களை பகுப்பது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது என்பதெல்லாம் மிகவும் மகத்துவம் வாய்ந்த பணிகள்.  அதே நேரத்தில், பனிப்பாறை மற்றும் அதனருகில் இருக்கும் பகுதிகளில், 130 டன்களுக்கும் மேற்பட்ட குப்பைகளை அகற்றுவது என்பது, அதுவும் அங்கே நிலவும் மிகவும் நுட்பமான சூழல் அமைப்பில்!!  எத்தனை மகத்தான சேவை இது!!  இங்கே எப்படிப்பட்ட சூழல் அமைப்பு இருக்கிறது என்றால், இது பனிச்சிறுத்தை போன்ற அரியவகை விலங்குகளின் வாழ்விடம்.  இங்கே ஐபெக்ஸ், ப்ரவுன் கரடிகள் போன்ற அரியவகை விலங்குகளும் வாழ்கின்றன.  சியாச்சென் என்பது எப்படிப்பட்ட பனிப்பாறை என்றால், இது நதிகள் மற்றும் சுத்தமான நீரின் ஊற்று; ஆகையால் இங்கே தூய்மை இயக்கத்தை செயல்படுத்துவது என்பதன் பொருள் என்னவென்றால், மலையடிவாரத்தில் வாழும் மக்களுக்கு தூய்மையான நீருக்கான உத்திரவாதம் அளிப்பது என்பது தான்.  மேலும் Nubra மற்றும் Shyok போன்ற நதிகளின் நீரையும் பயன்படுத்துகிறார்கள்.

என் மனம்நிறை நாட்டுமக்களே, கொண்டாட்டங்கள் என்பவை, நம் அனைவரின் வாழ்விலும் ஒரு புதிய விழிப்புநிலையை ஏற்படுத்தவல்ல காலங்கள்.  மேலும் தீபாவளியன்று குறிப்பாக, ஏதாவது ஒன்றைப் புதியதாக வாங்குவது, சந்தையிலிருந்து எதையாவது கொண்டு வருவது என்பவை ஒவ்வொரு குடும்பத்திலும் கூடக்குறைய நடந்து வருகின்றது.  நாம் உள்ளூர் பொருட்களையே வாங்க முயல வேண்டும் என்று கூட நான் ஒருமுறை கூறியிருந்தேன்.  நமக்குத் தேவையான பொருள் நமது கிராமத்திலேயே கிடைக்கிறது என்றால், வட்டார அளவில் செல்ல வேண்டிய தேவை என்ன இருக்கிறது?  வட்டார அளவிலேயே ஒரு பொருள் கிடைக்கிறது என்றால், மாவட்ட அளவுக்குச் செல்ல என்ன தேவை இருக்கிறது?  எத்தனை அதிகமாக நாம் உள்ளூர் அளவில் கிடைக்கும் பொருட்களை வாங்க முயல்கிறோமோ, காந்தி 150 தானாகவே ஒரு மகத்தான வாய்ப்பாக மலர்ந்து விடும்.  நமது நெசவாளிகளின் கைகள் நெசவு செய்த துணிகள், நமது கதர் நெசவு செய்பவர்கள் தயாரித்தவை ஆகியவற்றில் ஏதாவது கொஞ்சமாவது நாம் வாங்க வேண்டும் என்ற என் வேண்டுகோளை மீண்டும் முன்வைக்கிறேன்.  இந்த தீபாவளியை ஒட்டியும், தீபாவளிக்கு முன்பாகவும், நீங்கள் அதிக அளவில் வாங்கியிருப்பீர்கள் ஆனால், தீபாவளிக்குப் பிறகு சென்றால், சற்றே விலை மலிவாக கிடைக்கும் என்று பலர் எண்ணமிடுகிறார்கள்.  இன்னும் வாங்காதவர்கள் பலர் இருப்பார்கள்.  தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு கூடவே, நாம் உள்ளூர் பொருட்களை அதிகம் வாங்க விரும்புபவர்களாக மாறுவோம் என்று அறைகூவல் விடுக்கிறேன்.  இதன் வாயிலாக காந்தியடிகள் கண்ட கனவை நனவாக்க நாம் எத்தனை முக்கியமான பங்களிப்பை அளிக்க முடியும் என்பதை நாம் சாதித்துக் காட்ட வேண்டும்.  நான் மீண்டும் ஒருமுறை இந்த தீபாவளித் திருநாளுக்கான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  தீபாவளியன்று நாம் பலவகையான பட்டாசுகளைக் கொளுத்துகிறோம்.  ஆனால், சில வேளைகளில் நமது கவனக்குறைவு காரணமாகத் தீப்பற்றிக் கொள்கிறது.  காயம் ஏற்பட்டு விடுகிறது.  ஆகையால் நீங்கள் உங்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் அதே வேளையில், பண்டிகைகளைக் கொண்டாடியும் மகிழுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.  என் பலப்பல தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி.

*****

Pin It