மனித உரிமைக் கவுன்சிலுக்குப் பாகிஸ்தான் மீண்டும் தேர்வு பெற்றதும் அதன் தாக்கங்களும்

.(தி ஹிந்து பத்திரிக்கையின் சிறப்பு நிருபர் கல்லோல் பட்டச்சார்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி.குருமூர்த்தி.)

சர்வதேச அளவில் மனித உரிமைக் களம் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, உலகளாவிய மனித உரிமைகளின் நிலைக்கு நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மனிதவள ஆணையத்தில் நான்கு இடங்களுக்குப் போட்டியிடும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஐந்து வேட்பாளர்களில் ஒன்றான பாகிஸ்தான், ஐ.நா பொதுச் சபையின் 193 ஐ.நா உறுப்பினர்களில், 169 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றது.
உஸ்பெகிஸ்தான் 164, நேபாளம் 150, சீனா 139 வாக்குகளைப் பெற்று பாகிஸ்தானுடன் தேர்ந்தெடுக்கப்பட்டன. சவூதி அரேபியா, மிகக் குறைந்த அளவில், 90 வாக்குகளைப் பெற்றது. மனிதவள ஆணையத்தின் விதிகளின்படி, புவிசார் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக, உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் கவுன்சிலின் சமீபத்திய சுற்றுத் தேர்தலுக்கு, போட்டியின்மை காரணமாக,15 இடங்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பெரும்பாலும் மனித உரிமை குறித்து கண்டனத்தைப் பெற்றுள்ள பாகிஸ்தானின் தேர்வு, அதன் உள்நாட்டு மனித உரிமைச்சூழலில் வைத்துப் பார்க்கப்பட வேண்டும். சிறுபான்மை உரிமைகள் பிரச்சினை, பாகிஸ்தானின் பலவீனமான புள்ளியாக இருந்து வருகிறது. பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மையினர், நீண்ட காலமாக, கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பாகிஸ்தானில், 1947 ஆம் ஆண்டு வகுப்புவாதக் கலவரங்களுக்குப் பின்னர் குறைந்த சிறுபான்மை எதிர்ப்பு வன்முறைகள், அதிபர் ஜியா உல் ஹக்கின் ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தான் தீவிர இஸ்லாமிய அமைப்பிற்குள் நுழைந்ததால், மீண்டும் தலை தூக்கின. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையின் பிரதிபலிப்பாக, 2011 இல், கிறிஸ்தவரான பாகிஸ்தானின் சிறுபான்மை உரிமைகளுக்கான அமைச்சர் ஷாபாஸ் பட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் அரசில் மதபோதகர்களின் ஆளுமை அதிகரித்த நிலையில், முக்கிய நகரங்களான கராச்சி போன்ற இடங்களில் வகுப்புவாதம் தீவிரமடைந்தது. அதன் பிரதிபலிப்பாக,ஷியா எதிர்ப்பு வன்முறை வலுப்பெற்றது. முக்கிய ஷியா நபர்கள் சமீபத்தில் கடத்தப்பட்டதும், கொலையுண்டதும், பாகிஸ்தானின் மனித உரிமைகள் வரலாற்றின் சிக்கலான பகுதிகளை மீண்டும் எடுத்துக்காட்டுகின்றன.
பலூச் விடுதலை இயக்கத்தை பாகிஸ்தான் கையாண்டதும், ஆசாத் காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள ஆர்வலர்களும் பாகிஸ்தானுக்குப் பரவலான கண்டனத்தை ஈர்த்துள்ளன. பலூச் ஆர்வலர்கள், பாகிஸ்தான் இராணுவத்தால் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை அடிக்கடி விவரித்திருக்கிறார்கள். பலூச் பிரதிநிதிகள் அண்மையில் ஜெனீவாவுக்குச் சென்று, தங்கள் மாகாணத்தில் மனித உரிமை நிலைமை குறித்து விவரித்தனர். பலூச் பிராந்தியம், சுதந்திரம் மற்றும் சுயாட்சிக்கான பொது இயக்கத்தைக் கண்டு வருகிறது.
பாகிஸ்தானில் நடக்கும் மனித உரிமை மீறல்களால் ஏற்பட்ட அழுத்தம் மற்றும் சர்வதேச ஒடுக்குமுறைக்கான வாய்ப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நோக்குகையில், அந்த நாடு ஐ.நா.மனித உரிமைக் கவுன்ஸிலில் உறுப்பினராக இருப்பதற்கான அவசியம் தெளிவாகிறது. ஆகவே, பரவலான மனித உரிமைப் பிரச்சினைகளைக் கொண்டுள்ள பாகிஸ்தானும், சீனாவும் மனிதவள ஆணையத்தில் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வதற்கு, ராஜீய யுக்திகளைப் பெருமளவில் கையாள்வது புரிந்து கொள்ளத்தக்கது. இந்நிலையில், மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை, மனித உரிமைகளே அந்நாட்டின் பலவீனமான புள்ளியாகத் திகழும் சூழலில் வைத்துப் பார்க்க வேண்டும். ஆனால் பாகிஸ்தானோ மனித உரிமைகள் விஷயத்தில் பிறநாடுகளைக் குறிவைக்கிறது. அண்மைக் காலமாக, காஷ்மீர் பிரச்சினை குறித்த பாகிஸ்தானின் விமர்சனத்தை, அந்நாட்டில் இந்துக்களும், சீக்கியர்களும் துன்புறுத்தப்படுவதை வன்மையாகச் சாடி, இந்தியா தவிடுபொடியாக்கியுள்ளது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைக் குறிவைப்பது மட்டுமல்லாமல், தனது உள்நாட்டு உரிமைகள் குறித்த எந்தவொரு விமர்சனத்தையும் தொடர்ந்து தவிர்ப்பதை உறுதி செய்வதற்கும் பாகிஸ்தான் முயற்சி செய்யும். எனவே, உலக மனித உரிமை அமைப்புகளில் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வதற்காக இராஜதந்திர மற்றும் அரசியல் முயற்சிகளில் முதலீடு செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், பாகிஸ்தான் போன்ற பெரிய உரிமை மீறல் நாடுகள் மனிதவள ஆணையத்தைத் தொடர்ந்து ஆக்கிரமித்தால், அதன் எதிர்காலம் பெரும் கேள்விக் குறியாகும். உள்நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை சரிசெய்வதில் சில நாடுகள் தீவிரமாக இல்லை என்பதையும், உலகளாவிய அதிகார அரசியலின் ஒரு அங்கமாக, அவை இந்தப் பிரச்சினையைப் பார்க்கின்றன என்பதையும் மையமாகக் கொண்டு கவனிக்க வேண்டும். இத்தகைய நாடுகளின் அணுகுமுறையால், ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில், தேவைப்படும்போது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க இயலாமல் போகும். அது, சர்வதேச அளவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

******************************

Pin It