மிகவும் முக்கியமான ஐ.நா.பாதுகாப்புச் சபை சீர்திருத்தத்தில் தேக்க நிலை – இந்தியா.

1945 ஆம் ஆண்டிலிருந்த உலகநிலையை விட்டுவிட்டு, தற்போதைய உலக நிலையைப் பிரதிபலித்து, ஆப்பிரிக்க நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, ஐ.நா.பாதுகாப்புச் சபை சீர்திருத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவின் ஐ.நா.பிரிவு தலைமை இயக்குநர் சஞ்சய் ராணா அவர்கள், புதனன்று, சர்வதேச பல்நிலை மற்றும் அமைதிக்கான ராஜீய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஐ.நா. உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். மிகவும் முக்கியமான ஐ.நா.பாதுகாப்புச் சபை சீர்திருத்தத்தில் தேக்க நிலை நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். உலகில் பல்நிலை அமைப்பு மிகவும் தேவைப்படும் இவ்வேளையில், அது இக்கட்டான சூழலில் இருப்பதாக அவர் தெரிவித்தார். 1945 ஆம் ஆண்டு ஐ.நா. நிறுவப்பட்டதன் 75 ஆவது ஆண்டு நிறைவு வரவிருக்கும் சமயத்தில், அனைத்து உறுப்பு நாடுகளும், ஐ.நா.பாதுகாப்புச் சபையின் சீர்திருத்தத்திற்கு மீண்டும் உறுதியேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Pin It