மீண்டும் கண்துடைப்பில் இறங்கும் பாகிஸ்தான்.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –பி.குருமூர்த்தி.)

பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், ஹஃபீஸ் சயீதுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதியளித்த இரண்டு குற்றச்சாட்டுக்கள் அவர் மேல் சுமத்தப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவரும், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்களான ஜமாத் உத் தாவா மற்றும் லஷ்கர் ஏ தொய்பா ஆகியவற்றின் தலைவருமான ஹஃபீஸ் சயீத் மீது, பஞ்சாப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்துக்கு நிதியுதவியளித்த குற்றச்சாட்டின் பேரில் 23 குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

ஹஃபீஸ் சயீத் மற்றும் உதவியாளர் ஸஃபர் இக்பால் ஆகியோர் மீது, பயங்கரவாதத்துக்கு நிதியளித்த இரண்டு வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று, பாகிஸ்தானின் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அப்துல் ரௌஃப் வாட்டோ கூறியுள்ளார். இரண்டு வழக்குகளிலும் மொத்தம் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள ஹஃபீஸ் சயீத், இருதண்டனைகளும் ஒன்றாக நிறைவேற்றப்படுவதால், ஐந்தரை ஆண்டுகள் மட்டுமே சிறையிடப்படுவார் என்றும், தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவரது வழக்கறிஞர் இம்ரான் கில் கூறியுள்ளார்.

சர்வதேச அமைப்புக்களின் கீழ் வரையறுக்கப்பட்டு, நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் பாகிஸ்தானின் கடமையின் ஓர் அங்கமாகவே இத்தண்டனை பார்க்கப்படுகிறது என்று இந்தியா கூறியுள்ளது. ஐ.நா.வினால் சர்வதேச பயங்கரவாதியாக ஹஃபீஸ் சயீத் அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

“எஃப்ஏடிஎஃப் எனப்படும் பயங்கரவாத நிதித் தடுப்பு நடவடிக்கைக் குழுவின் முக்கியக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, எந்த அளவு இத்தண்டனை உண்மையாக நிறைவேற்றப்படும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பாகிஸ்தான், தன் நாட்டிலிருந்து செயல்படும் பிற பயங்கரவாதக் குழுக்களுக்கும், நபர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமா என்பதையும், மும்பை, பதான்கோட் தாக்குதல்கள் போன்ற, எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈட்டுபட்டவர்கள் நீதிமன்றத்தின் முன் விரைவில் நிறுத்தப்படுவார்களா  என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

ஹஃபீஸ் சயீதின் அடையாளக் கைது நடவடிக்கை, பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகத் தாம் தீவிரமாக செயல்படுவதை சுட்டி காட்டும் என்று பாகிஸ்தான் நம்புகிறது. பாரீஸை மையமாகக் கொண்ட பயங்கரவாத நிதித்தடுப்புக் குழுவின் முக்கியக் கூட்டம் அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைத் தடுக்கத் தவறியதால் பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் இணைப்பது குறித்து இக்குழு விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியளிக்கப்படுவதைத் தடுக்கத் தீவிரமான நடவடிக்கைகள் எடுப்பதற்கு, இக்குழுவினால் ஏற்கனவே பழுப்புப் பட்டியலில் இடப்பட்ட பாகிஸ்தான் மீது, அதிகளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. கறுப்புப் பட்டியலில் இடப்பட்டால், நிதி மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு, பாகிஸ்தான் மீது கடுமையான தடைகள் விதிக்கப்படும். இதனால், ஏற்கனவே நெருக்கடியிலுள்ள பாகிஸ்தானின் பொருளாதாரத்துக்கு மேலும் அடி விழும். ஹஃபீஸ் சயீத் கைது நடவடிக்கை, பாகிஸ்தானை பழுப்புப் பட்டியலிலிருந்து விடுவித்து, பிறநாடுகளுடன் வெள்ளைப் பட்டியலில் சேர்க்கும் அளவிற்குப் போதுமானதா என்பதை எஃப்ஏடிஎஃப் குழு ஆராய வேண்டும்.

சீனா, மலேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் ஆதரவினாலேயே, பாகிஸ்தான் இதுவரை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனினும், பழுப்புப் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் விடுபடுவதற்கு, இக்குழுவின் 39 உறுப்பு நாடுகளில், குறைந்தபட்சம் 12 நாடுகளின் ஆதரவு தேவை.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ள நிலையில், ஹஃபீஸ் சயீதின் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதத்துக்கு எதிராகப் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என, பாகிஸ்தானை டிரம்ப் அவர்கள் கடுமையாக விமரிசித்துள்ளார். எனினும், ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் உடன்படிக்கை எட்ட முற்பட்டுள்ள அமெரிக்காவுக்கு, பாகிஸ்தானின் ஆதரவு முக்கியக் கட்டத்தில் தேவைப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்துக்கும், தாலிபான்களுக்கும் இடையே நெருங்கிய உறவு நிலவுவதை அனைவரும் அறிவர்.

கடைசியாக பீஜிங்கில் நடைபெற்ற எஃப்ஏடிஎஃப் குழுக் கூட்டத்தில், பயங்கரவாதத்துக்கு எதிராகத் தான் எடுத்துள்ளதாகக் கூறும் நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் பட்டியலிட்டது. அதற்கு சீனா, மலேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஆதரவளித்தன. பாகிஸ்தானின் அறிக்கை குறித்து, அமெரிக்காவும் கேள்வி எழுப்பவில்லை. கடந்த அக்டோபரில் பாரீஸில் நடைபெற்ற எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில், இக்குழு வரையறுத்த 27 விதிகளில் 22 விதிகளைப் பின்பற்ற பாகிஸ்தான் தவறியது குறிப்பிடப்பட்டது. இதற்கு பாகிஸ்தானைக் கடுமையாகச் சாடிய எஃப்ஏடிஎஃப், பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி செல்வதைப் பாகிஸ்தான் தடுக்கத் தவறினால், இவ்வாண்டு பிப்ரவரியில் பாகிஸ்தான் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படும் என்று எச்சரித்தது.

சர்வதேச சமுதாயத்திடமிருந்து உண்மைகளை மறைத்து, பாகிஸ்தான் நீண்ட காலமாகக் குழப்பி வந்துள்ளது. பழுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்ட பின்னரும் பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை நிறுத்திக் கொள்ளவில்லை. கடந்த ஆண்டு, ஜம்மு காஷ்மீரிலுள்ள புல்வாமாவில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை மறக்க முடியாது.

பயங்கரவாதத்தைத் தனது கொள்கைகளில் ஒன்றாகக் கையிலெடுத்துள்ள பாகிஸ்தானின் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சமுதாயம் முன்வர வேண்டும். எனவே, அடுத்த எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பங்களிப்பு முக்கியமானதாக விளங்குகிறது.

 

****************************************************

 

 

Pin It