முதலாவது இந்தியா – ஜப்பான் டூ பிளஸ் டூ அமைச்சர்கள் மட்ட சந்திப்பு.

(பத்திரிக்கையாளர் சுமன் ஷர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

இந்திய மற்றும் ஜப்பானிய வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் முதல் இந்தியா-ஜப்பான் ‘டூ ப்ளஸ் டூ’ சந்திப்பு புது தில்லியில் நடைபெற்றது. ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. டொஷிமிட்சு மொடேகி மற்றும் ஜப்பானிய பாதுகாப்புத்துறை  அமைச்சர் திரு. டாரோ கோனோ ஆகியோர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்ஷங்கர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் வலுவாகிக் கொண்டிருக்கும் பாதுகாப்பு மற்றும் செயலுத்தி இணைப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவற்றைப் பறைசாற்றும் விதமாக இந்த சந்திப்பு அமைந்துள்ளது. 2000-ஆம் ஆண்டிலிருந்து, இந்தியா-ஜப்பான் செயலுத்திக் கூட்டாளித்துவம், கூட்டுப் பணிக் குழுக்களுக்கு இடையில், அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்று வந்தது. 2010 ஆம் ஆண்டு முதல், இவை செயலர் மட்ட சந்திப்புகளாக மாறின. தற்போது, அது அமைச்சர்கள் மட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இது போன்ற இருதரப்பு சந்திப்புகள் முதலில், 2000-2001 ஆம் ஆண்டுகளில், அப்போது இந்தியப் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் முன்னாள் ஜப்பான் பிரதமர் யோஷிரோ மோரியின் ஆட்சிக்காலத்தில் முன்மொழியப்பட்டன. அதன் பிறகு அது படிப்படியாக உத்வேகம் அடைந்தது.

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகள், இந்தப் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என இந்தியாவும், ஜப்பானும் ஒரு கூட்டறிக்கையில், தெரிவித்துள்ளன. ஐ.நா பாதுகாப்பு கௌன்சில் தீர்மானங்களின்படி, பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் அனைத்து ரக ஏவுகணைகளையும் அகற்றுமாறு வட கொரியாவை இந்தக் கூட்டறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த மாத இறுதியில், இண்டோ-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அவர்கள் இந்தியா வருகிறார். அதற்கான ஒத்திகையாக, அமைச்சர்களுக்கு இடையிலான இந்த ‘டூ பிளஸ் டூ’ சந்திப்புகள் நடந்துள்ளன. 2014 முதல் வருடாந்திர உச்சிமாநாடு சீராக முன்னேற்றம் கண்டுள்ளது. முதன் முறையாக, 2006 ஆம் ஆண்டு, இண்டோ-ஜப்பான் இருதரப்பு உறவுகளுக்கு ஒரு உந்துதல் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு, கூட்டு ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் மலபார் பயிற்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 2015 ஆம் ஆண்டு முதல், ஜப்பான் இந்த மலபார் பயிற்சிகளில் பங்குகொண்டு வருகிறது.

கடந்த ஆண்டு, இந்திய ராணுவமும் ஜப்பானின் நிலப்படையும் முதன் முறையாக, பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஒரு கூட்டுப் பயிற்சியை நடத்தின. கூட்டு விமானப் படை பயிற்சிகளுக்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன, டூ ப்ளஸ் டூ சந்திப்பின்போதும் இது பற்றி பேசப்பட்டது. இருநாட்டுப் போர் விமானங்களுக்கிடையிலான கூட்டுப் பயிற்சிகள் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறு நாடுகளுடன், இரு துறை அமைச்சர்களுக்கிடையிலான டூ ப்ளஸ் டூ சந்திப்புகளில் ஜப்பான் ஈடுபட்டிருக்கிறது. இந்தியா, இந்த வகை சந்திப்புகளை அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் மட்டுமே தற்போது நடத்தி வருகிறது. எனினும், இவ்வாண்டு செப்டெம்பர் மாதம், ஐ.நா பொதுச் சபை சந்திப்பின் போது, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்கள், நியூயார்க்கில், முதன் முறையாக நாற்கரப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். இரு வாரங்களுக்கு முன்னர், இந்த நான்கு நாடுகளும், பயங்கரவாத எதிர்ப்பிற்கான முதல் பயிற்சிகளை மேற்கொண்டன. இதன் மூலம் இந்த அமைப்பிற்குப் புதிய உந்துதல் கிடைத்துள்ளது.

இண்டோ-பசிஃபிக் பகுதிகளில் அமைதியை நிலை நாட்டுவது குறித்த பேச்சுக்களே, இந்த சந்திப்பில் முதன்மையாக இருந்ததாக நிபுணர்கள் கருதுகிறார்கள். பாங்காக்கில் இவ்வாண்டு நடந்த கிழக்காசிய உச்சிமாநாட்டில், பிரதமர் மோதி அவர்கள் ஆற்றிய உரையுடன் இது, ஒத்திசைந்து இருக்கிறது. அப்போது அவர், தடையற்ற போக்குவரத்து, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு, இண்டோ-பசிஃபிக் பெருங்கடல் முன்னெடுப்பு என்ற அமைப்பு ஒன்று தேவை என்று கூறி இருந்தார்.

தற்போது செயல்பாட்டில் இருக்கும் அதிவேக ரயில்கள் உட்பட, பல பணித்திட்டங்கள் மூலம், இந்தியா-ஜப்பான் இடையிலான உறவுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. பல பாதுகாப்புப் பணித்திட்டங்களுடன் இந்த உறவு இன்னும் ஆழமாகிக் கொண்டிருக்கிறது. இரு துறை அமைச்சர்களுக்கான சந்திப்பின் போது, ஏ.சி.எஸ்.ஏ எனப்படும், கையகப்படுத்தல் மற்றும் மாற்று சேவை ஒப்பந்தம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என இரு தரப்பினரும் விருப்பம் தெரிவித்தனர். இதன் மூலம் இரு தரப்பிற்கும் இடையிலான பாதுகாப்புக் கூட்டுறவு மேலும் மேம்பட வாய்ப்புக் கிடைக்கும். குருகிராமில் உள்ள ஐ.எஃப்.சி-ஐ.ஓ.ஆர் எனப்படும் இதியப் பெருங்கடல் பகுதிகளின் தகவல் இணைவு மையத்தில், ஒரு ஜப்பானிய தொடர்பு அதிகாரி நியமிக்கப்படுவார். இந்த மையம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு துவங்கிய பாதுகாப்புத் தொழில்நுட்பக் கூட்டுறவு, டூ பிளஸ் டூ’ அமைச்சர்கள் சந்திப்பின் மூலம், நான்கு அமைச்சர்கள் பங்கேற்கும் நிலையை எட்டியுள்ளது. இது, ரோபோடிக்ஸ், ஆளில்லா நில வாகனங்கள் ஆகியவற்றிற்கான தொழில்நுட்பப் பகிர்வில் வெகுவாக உதவியுள்ளது. பல விஷயங்களில் இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ, ஜப்பானின் பாதுகாப்பு ஆய்வு நிறுவனங்களுடன் கூட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த டூ ப்ளஸ் டூ சந்திப்பின்போது, தென் சீனக் கடல் பற்றியும் பேசப்பட்டது. அப்பிராந்தியத்தில், தடையற்ற கடல் போக்குவரத்து, கடல் மேல் விமானப் போகுவரத்து, தடையற்ற சட்டத்திற்குட்பட்ட வர்த்தகம், ஐ.நா-வின் கடல் சட்டம் தொடர்பான விதிகளின் அடிப்படையில் சர்ச்சைகளுக்கு சுமுகமான தீர்வு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

 

Pin It