மும்பையில் சத்ரபதி சிவாஜி  ரயில் நிலையம் அருகே நேற்றிரவு நடை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில், ஆறு பேர் உயிரிழப்பு.

மும்பையில் சத்ரபதி சிவாஜி  ரயில் நிலையம் அருகே நேற்றிரவு நடை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில், ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் 31 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்கை பெற்று வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாகச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அம்மாநில முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத்  தாம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

1980 ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த நடை மேம்பாலம், கடந்த ஆண்டு பழுது பார்க்கப்பட்டது என்றும், எனவே இடிந்ததற்கான காரணம் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட  வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கு யார் காணரமாக இருந்தாலும், தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கும் உரிய சிகிச்சைகள் அளிப்பதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோதி, தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாகக் குணமடைய  வேண்டும் என்று தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Pin It