மேம்பட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் இந்தியா-பூட்டான் உறவுகள்.

 

(ஐடிஎஸ்ஏ ஆய்வாளர் டாக்டர் நிஹார் நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)

பூட்டான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் லியோன்போ தண்டி டோர்ஜி அவர்கள், ஒரு வார அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார். அவரது இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய ஊக்கத்தை அளித்துள்ளது. இப்பயணத்தில், டாக்டர் டோர்ஜி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்ஷங்கர் அவர்களைச் சந்தித்து, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இந்திய-பூட்டான் உறவுகளின் அனைத்து அம்சங்கள் பற்றியும் மறு ஆய்வு செய்யப்பட்டது. பொருளாதாரக் கூட்டுறவு, வளர்ச்சிக் கூட்டாளித்துவம், நீர்மின் துறையில் கூட்டுறவு உட்பட இரு தரப்பு உறவுகளின் பல அம்சங்கள் பற்றி இரு தரப்பினரும் கலந்துரையாடினர். டாக்டர். ஜெய்ஷங்கரை சந்திப்பதற்கு முன்னர், பூட்டான் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர். டோர்ஜி, இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோக்லே அவர்களைச் சந்தித்தார். தில்லிப் பயணத்திற்குப் பிறகு, அவர், பீஹாரில் உள்ள புத்தகயா மற்றும் ராஜ்கிருக்குச் செல்வார். அங்கிருந்து, கொல்கத்தாவிற்குச் செல்லும் அவர், மேற்குவங்க முதலமைச்சர் மற்றும் ஆளுநரை சந்திப்பார் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இந்தியா பூட்டான் இடையில், உயர்மட்ட அளவில், தொடர்ந்து இருதரப்புப் பயணங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் ஏற்பட்டு வருவதன் அடையாளமாக, லியோன்போ தாண்டி டோர்ஜியின் இந்தப் பயணமும் அமைந்துள்ளது. இவ்வாண்டு நவம்பர் ஏழாம் தேதி, பிரதமர் லோடாய் ஷெரிங் தலைமையிலான ட்ருக் ந்யார்ம்ருப் ஷோக்பா கட்சி தனது பதவிக்காலத்தின் ஓர் ஆண்டை நிறைவு செய்திருக்கும் வேளையில் இந்தப் பயணமும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஷெரிங்க் அரசாங்கம், வளர்ச்சிப் பணித்திட்டங்களை, குறிப்பாக சுகாதாரத் துறையில், செயல்படுத்துவதற்கான நிதியை திரட்டுவதில் பல சவால்களை எதிர்கொண்டது. நாட்டின் பன்னிரெண்டாவது திட்டத்தின் படி, வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு சுமார் 1300 கோடி பூட்டான் நிகுல்ட்ரம் தேவைப்பட்ட நிலையில், அதற்கு 350 கோடி  பூட்டான் நிகுல்ட்ரம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. முக்கியமாக, பூட்டான் அரசாங்கம் பல பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த போதும், வெளிக்கடன், வணிகப் பற்றாக்குறை, அந்நிய நேரடி முதலீடு மற்றும் பணம் அனுப்புதலில் மந்த நிலை போன்றவற்றை சமாளிப்பதில் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. எதிர்மறையான மேக்ரோ-பொருளாதார நிலைக்கு இந்திய பொருளாதார மந்த நிலையே காரணம் என்ற பொதுவான கருத்து பூட்டானில் நிலவுகிறது.

இந்தியா பூட்டான் இடையிலான உயர் மட்டப் பரிமாற்றங்களில் ஏற்பட்டுள்ள புதிய உத்வேகத்தின் பிரதிபலிப்பாகவும் இந்தப் பயணம் பார்க்கப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையில் காலத்தால் அழியாத, தனித்துவமான இருதரப்பு உறவுகள் உள்ளன. பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணம், புரிதல் ஆகியவை இந்த உறவின் முக்கியக் கூறுகளாக உள்ளன. பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் திம்புவிற்குப் பயணம் மேற்கொண்டு நான்கு மாதங்களான பிறகு, பூட்டான் வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்தப் பயணம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக, அண்டை நாடுகளுக்கு முதலிடம் என்ற கொள்கையின் கீழ், தான் பொறுப்பேற்றவுடனேயே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர், முதல் வெளிநாட்டுப் பயணமாக பூட்டான் சென்று வந்தார். முன்னதாக, 2018 டிசம்பரில், பூட்டான் பிரதமர் லோதேய் ஷெரிங் அவர்கள், தன் முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1968 ஆம் ஆண்டு, இந்தியா பூட்டான் இடையில் ராஜீய உறவுகள் துவங்கியதிலிருந்து, தெற்காசியாவில், மிகச் சிறந்த அண்டை நாடுகளுக்கிடையிலான உறவின் எடுத்துக்காட்டாக, இந்தியா – பூட்டான் உறவு இருந்துள்ளது. பரஸ்பர நம்பிக்கை, புரிதல் மற்றும் முதிர்ச்சி ஆகியவை இந்த உறவுகளின் அடித்தளமாக அமைந்துள்ளன. 1949 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு, 2007 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்டு, திருத்தியமைக்கப்பட்ட இந்தியா-பூட்டான் இடையிலான நட்பு மற்றும் கூட்டுறவிற்கான ஒப்பந்தம், இந்த உறவின் ஒரு தூணாக இருந்துள்ளது. திறந்த நிலை எல்லைகள், பாதுகாப்புக் கூட்டுறவு, மக்களுக்கு இடையிலான உறவுகளில் மேம்பாடு போன்ற சிறப்பு ஏற்பாடுகளுக்கு இது வழி வகுத்துள்ளது. பொருத்தமற்ற பல விஷயங்கள் உள்ள போதிலும், இரு நாடுகளும் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதோடு, வளர்ச்சி, ஜனநாயக ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய அமைதி ஆகியவற்றில் சமமான கூட்டாளிக்கான அங்கீகாரத்தை பரஸ்பரம் அளிக்கின்றன. தற்போது, நீர்வளங்கள், வணிகம் மற்றும் போகுவரத்து, பொருளாதாரக் கூட்டுறவு, பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாடு போன்ற பல துறைகளில், இரு நாடுகளுக்கும் இடையில், பல இருதரப்பு நிறுவன ஏற்பாடுகள் உள்ளன.

இதற்கிடையில், பூட்டானுக்குப் பயணிக்கும் இந்திய சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்க பூட்டான் முடிவெடுத்துள்ளது. இதுவரை இந்தியப் பயணிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த இமாலய நாட்டிற்கு, சுற்றுலாப் பயணிகளின் வருகை, குறிப்பாக இந்தியப் பயணிகளின் வருகை, கணிசமாக அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் மட்டும், தெற்காசியப் பகுதியிலிருந்து வந்த மொத்த பயணிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியப் பயணிகள் ஆவர். பூட்டான் சுற்றுலா அதிகாரிகள், ‘அனுமதி செயலாக்க கட்டணத்தோடு’, ‘நிலையான வளர்ச்சிக் கட்டணத்தையும்’ வசூலிப்பார்கள். எனினும், இது குறித்து இன்னும் முடிவாகவில்லை. பூட்டானில், சுற்றுலாத் துறையை, நிலையான முறையில் வளரச் செய்வது இதன் முக்கிய நோக்கமாகும்.

டாக்டர் டோர்ஜியின் பயணம், மத மற்றும் அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. விரிவான பொருளாதாரக் கூட்டுறவும் இந்தப் பயணத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாகும். இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் அரசியல் உறவுகளை விரிவுபடுத்தி, பிற இணைப்புகளை ஒருங்கிணைப்பதும் இந்தப் பயணத்தின் இலக்காகத் தெரிகிறது. பல விஷயங்களைப் பற்றியும், உறவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்லத் தேவையான புதிய செயல்முறைகள் பற்றியும் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் பரிமாறிக் கொண்டனர். மேலும், பருவநிலை மாற்றம், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் செயலுத்தி விவகாரங்கள், பூட்டானின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கான இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார உதவி ஆகியவற்றையும் இரு அமைச்சர்களும் மறு ஆய்வு செய்தார்கள். மாறிவரும் பிராந்திய மற்றும் உலகச் சூழலுக்கு ஏற்ப, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

 

******************************************************************

 

 

 

.

 

 

Pin It