மேற்கு வளைகுடா நாடுகளில் பயணம் முடித்து நாடு திரும்பினார் பிரதமர்.

பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோதி நாடு திரும்பினார்.  கடந்த முப்பது வருடங்களில் இந்தியப் பிரதமர் ஒருவர் ஓமன் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்குச்  சென்றிருந்தது இதுவே முதல் முறையாகும்.  இந்தப் பயணத்தின் மூலம் இந்த நாடுகளுடனான உறவு வலுப்படும் என்று எமது செய்தியாளர்  தெரிவிக்கிறார்.

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று பிரதமர் தரிசனம் செய்தார். 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்தக் கோவிலுக்கு அருகே உள்ள சுல்தான் அரண்மனையையும் அவர் பார்வையிட்டார். பின்னர், சுல்தான் கபூஸ் கிராண்ட் மசூதிக்குச் சென்ற அவர், அந்த மசூதியின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். இந்த மசூதி இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட 300 ஆயிரம் டன் பளிங்குக் கற்களால் 200 தொழில்நுட்பக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஓமன் நாட்டின் துணைப் பிரதமர் திரு சயீத் ஃபாத் பின் மகமத் அல் சயீதைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று காலை ஓமனில் 70 –க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு அரசு வழிமுறைகளை எளிமையாக்கியுள்ளதால், தொழில் தொடங்க முன்வருமாறு ஓமன் தொழிலதிபர்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்தியா – ஓமன் நாடுகளின் 50 ஆண்டுகால நட்புணர்வைக் கொண்டாடும் வகையில் இந்தப் பயணம் அமைந்திருந்ததாகவும் அந்நாட்டு மக்களுக்குத் தமது நன்றியையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் தமது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார். ஓமன் நாட்டு மன்னர் சுல்தான் கபூஸின் நட்பு பாராட்டத்தக்கது என்று அவர் தெரிவித்தார்.

Pin It