மொரிஷியஸில் ஹிந்தி மொழிக்கான செயலகக் கட்டடம் திறப்பு – குடியரசுத் தலைவர் உரை

இந்தியாவும் மொரிஷியஸும் அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றுடன் கூடிய தொன்மை வாய்ந்த பன்முக கலாச்சார வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளதாகக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். அந்நாட்டுத் தலைநகர் போர்ட்லூயிசில் உலக ஹிந்தி மொழிக்கான புதிய செயலகக் கட்டடத்தை அவர் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இவ்விரு நாடுகளிலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கலாச்சார அடையாளம் உள்ளதாகக் குறிப்பிட்ட  அவர், இதனைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தினார். அந்நாட்டுப் பிரதமர் திரு ப்ரவிந்த் ஜக்நாத் தலைமையில் இந்தியாவுடன் இணைந்து வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். மொரிஷியஸ் நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியா உதவி வருவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்று அவர் கூறினார். இவ்விரு நாடுகளிடையே கலாச்சாரம் மற்றும் சமூகப் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு ஹிந்தி மொழி மிக முக்கியப் பங்காற்றுவதாக திரு கோவிந்த் கூறினார். இக்கட்டடத்தைக் கட்டுவதற்கான முழுச் செலவையும் கட்டமைப்பு வசதிகளுக்கான 33 கோடி ரூபாயும் இந்தியா நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Pin It