மோதி – அபே இணைந்து புல்லட் ரயிலுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா.

இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோதியும் ஜப்பானியப் பிரதமர் திரு ஷின்ஸோ அபேயும் இணைந்து, அஹமதாபாத் – மும்பை இடையிலான அதி வேக புல்லட் ரயில் திட்டத்துக்கு இன்று, சபர்மதி நிலைய மைதானத்தில் பூமி பூஜையில் பங்கேற்றனர். தவிர, வடதோராவில் ரூ.600 கோடியில் நிறுவப்படும் அதிவேக ரயில் நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டினர். இந்நிறுவனத்தில், 4000 இந்தியப் பொறியாளர்களுக்கு ஜப்பான் வல்லுநர்கள் அதிவேக ரயில் செயல்பாடுகள் குறித்துப் பயிற்சியளிக்கவுள்ளனர். இத்திட்டத்தின் கீழ், சபர்மதி ரயில்நிலையம் புனரமைக்கப்படும்.

ஜப்பான் இந்தியாவுக்கு அளித்துள்ள மிகப்பெரிய நன்கொடை புல்லட் ரயில் திட்டமாகும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோதி குறிப்பிட்டார். இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று கூறிய, பிரதமர், புதிய இந்தியா உருவாக்கத்திற்கு அதிவிரைவு ரயில்தடம் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று குறிப்பிட்டார். இந்தியாவின் பொருளாதார மறுமலர்ச்சி மட்டுமின்றி, சமூக மறுமலர்ச்சிக்கும் புல்லட் ரயில் திட்டம் வித்திடும் என்று அவர் கூறினார். இத்திட்டத்துக்குத் தேவையான மனிதவளம், பெரும்பாலும் இந்தியாவிலிருந்தே பூர்த்தி செய்யப்படும் என்று கூறிய பிரதமர், அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்கும் இது உத்வேகம் தரும் என்று குறிப்பிட்டார்.

புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதியுதவி, தொழில்நுட்பம் மற்றும் திறன் பரிவர்த்தனை ஆகியவற்றை அளித்து ஒத்துழைக்கும் ஜப்பானுக்குத் தனது அளவு கடந்த நன்றியைப் பிரதமர் தெரிவித்துக் கொண்டார். புல்லட் ரயில் திட்டம், இந்தியாவின் ரயில்வேத் துறை மட்டுமின்றி, மனித வள மேம்பாட்டிற்கும் மிகுந்த பலனளிக்கும் என்று அவர் கூறினார்.

சக்தி வாய்ந்த இந்தியாவும், சக்தி வாய்ந்த ஜப்பானும் இருநாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கவல்லவை என்று ஜப்பான் அதிபர் கூறினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், இந்தியப் பெருங்கடலும் பசிஃபிக் கடலும் இணைந்து உலகில் ஒரு புதிய கடல் சார்ந்த அமைப்பை உருவாக்க முனைப்புடன் செயல்படுவோம் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்கு இந்தியாவுக்கு ஜப்பான் உறுதுணையாக இருக்குமென்றும், இந்திய மனித வளமும், ஜப்பானியத் தொழில்நுட்பமும் இணையும்போது, உலகின் முக்கிய உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் அதிவேக ரயில் சேவையான ஷின்கான்சென் புல்லட் ரயில் திட்டம், ஜப்பானின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். உலகிலேயே மிகவும் பாதுகாப்பானதாகவும் ஷின்கான்சென் புல்லட் ரயில் திட்டம் விளங்குகிறது என்ற ஜப்பான் பிரதமர், இந்தியாவின் அனைத்து ரயில் தடங்களிலும் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த தொழில்நுட்ப உதவியளிக்க ஜப்பான் தயாராக இருக்கிறது என்று கூறினார்.

இரண்டு மணி நேரத்தில் 500 கி. மீ தொலைவைக் கடக்கும் திறன் கொண்ட இந்த ரயில் திட்டம் 2022 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரு மோதி அவர்களின் கனவுத் திட்டமான இதற்கு, ஜப்பான் தனது தொழில்நுட்பத்தைப் பங்களிப்பாகத் தந்துள்ளது

 

Pin It