யோகி ஆதித்யநாத் நேற்று உத்தரப் பிரதேசத்தின் 21வது முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். 

யோகி ஆதித்யநாத் நேற்று உத்தரப்பிரதேசத்தின் 21 ஆவது முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.  பிஜேபி மாநிலத் தலைவர் கேசவ் பிரசாத் மௌர்யாவும், கட்சியின் தேசிய துணைத் தலைவர் தினேஷ் ஷர்மாவும், துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.  லக்னோவில் நேற்று பிற்பகல், நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுனர் ராம் நாயக், முதலமைச்சர், துணை முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், இரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.  முதலமைச்சர் மற்றும் இரண்டு துணை முதலமைச்சர்களுடன், 29 காபினட் அமைச்சர்கள், தனிப் பொறுப்புடன் கூடிய 9 இணையமைச்சர்கள், மற்றும் 13 இணையமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.  ரீட்டா பஹுகுணா, ஸ்வாமி பிரசாத் மௌர்யா, சித்தார்த் நாத் சிங், ஸ்ரீகாந்த ஷர்மா, கிரிக்கெட் வீரர்களாக இருந்து அரசியல்வாதிகளாக மாறிய, சேத்தன் சௌஹான், மோசின் ராஸா ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களில்  முக்கியமானவர்கள். பிரதமர் நரேந்திர மோதி, பிஜேபி தேசியத் தலைவர் அமித் ஷா, கட்சியின் மூத்த தலைவர்கள் எல். கே. அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, உள்ளிட்ட தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். யோகி ஆதித்யநாத், கேசவ்பிரசாத் மௌர்யா, தினேஷ் ஷர்மா உள்பட பதவியேற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தை  முழுமையாக வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றுவதில்  புதிய பிஜேபி அரசு தொடர்பணி ஆற்றும் என்று பிரதமர் கூறினார்.

Pin It