ரயில்வே, மின்விநியோகத் திட்டங்கள் – பங்களாதேஷுக்கு இந்தியா அர்ப்பணிப்பு.

(ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கையின் சிறப்பு நிருபர் திபாங்கர் சக்ரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ வெங்கடேசன்.)

இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோதி, பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் திரிபுரா முதலமைச்சர் பிப்ளாப் குமார் தேப் ஆகியோர் இணைந்து, பங்களாதேஷுக்கான மூன்று வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைத்தது, ஒரு முக்கியத்துவமிக்க நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

இந்தியாவிலிருந்து பங்களாதேஷிற்குக் கூடுதலாக 500 மெகா வாட் மின்சாரம் வழங்குதல், அகௌரா – அகர்தாலா இடையேயான ரயில் இணைப்பு, பங்களாதேஷ் ரயில்வேயைச் சேர்ந்த குலௌரா – ஷாபாஸ்பூர் இடையிலான ரயில் பாதை மறு சீரமைப்பு ஆகியவை, பங்களாதேஷுக்கான மூன்று வளர்ச்சித் திட்டங்களாகும். தெற்கு ஆசியாவின் இந்த இரண்டு அண்டை நாடுகளுக்கிடையே ரயில்வே, வர்த்தகம் மற்றும் வணிகத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் இத்திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

காணொளிக் காட்சி மூலம் துவக்கப்பட்ட இந்த மூன்று திட்டங்கள் மூலம், இருநாடுகளுக்குமிடையிலான சுமுகமான உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் தனது ட்விட்டர் செய்தியில், “பிரகாசமான வாழ்க்கை, இந்தியா, பங்களாதேஷ் இடையே மேலும் இணைப்பு மற்றும் நட்பின் வளர்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்த மூன்று திட்டங்களின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.

பங்களாதேஷிலுள்ள பேராமாரா மற்றும் இந்தியாவிலுள்ள பெஹ்ராம்பூர் இடையேயான மின்விநியோக வழித்தடத்தின் வாயிலாக, பங்களாதேஷுக்கு மேலும் 500 மெகா வாட் மின்சாரம் வழங்குவது என்ற இந்தியாவின் முடிவு, 2021 ஆம் ஆண்டுக்குள் பங்களாதேஷ் நடுத்தர வருமான நாடாக மாறுவதற்கும், 2041 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கும் அந்நாட்டிற்கு இந்தியா அளிக்கும் ஒத்துழைப்பைப் பறைசாற்றுகிறது. இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், தமது துவக்க விழா உரையில் கோடிட்டுக் காட்டினார்.

அடுத்த 20 ஆண்டுகளில், பங்களாதேஷை நடுத்தர வருமான நாடு என்பதில் இருந்து, வளர்ந்த நாடு என்று மாற்றுவது என,  பிரதமர் ஹசீனா அவர்கள் மேற்கொண்ட வளர்ச்சி இலக்கினை பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் பாராட்டினார் . இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களும், பங்களாதேஷ் வெளியுறவு  அமைச்சரும் இந்தக் காணொளிக் காட்சி  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த மின் பரிமாற்ற இணைப்புத் திட்டம் நிறைவேறியபின், இந்தியாவிலிருந்து  பங்களாதேஷிற்கு வழங்கப்படும் மொத்த மின்சாரம் 1.16 கிகாவாட் என்ற அளவாக இருக்கும் என்று பிரதமர் கூறினார். இரு நாடுகளுக்குமிடையேயான மின்விநியோகம், மெகாவாட்டிலிருந்து கிகாவாட்டிற்கு முன்னேறியுள்ளது, இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் ஒரு பொற்காலம் உருவாகியதற்கான சான்றாக உள்ளது என்று  பிரதமர் மோதி அவர்கள் கூறினார்.

அகௌரா – அகர்தாலா இடையேயான ரயில் இணைப்பு பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் மோதி அவர்கள், இருநாடுகளுக்குமிடையேயான மேலும் ஒரு எல்லை தாண்டிய தொடர்பு ஏற்படவுள்ளதாகத் தெரிவித்தார். இருநாடுகளுக்குமிடையே வளரும் நெருக்கமான உறவுகளும், மக்களுக்கிடையிலான தொடர்புகளும், செழுமையான முன்னேற்றப் பாதையில் இருநாடுகளையும் இட்டுச் செல்லும் என்று அவர் கூறினார். இருநாடுகளுக்குமிடையே, இந்த இலக்கை நோக்கிய நிலையான முன்னேற்றம் கணிசமாக ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த மூன்று திட்டங்களைத் துவக்கியதன் மூலம், இரு நாடுகளுக்கிடையே மின்சாரம் மற்றும் ரயில் தொடர்புகள் அதிகரித்துள்ளன என்று பிரதமர் மேலும் கூறினார்.

பங்களாதேஷிற்கு அதிகப்படியான மின்சாரம் வழங்குதல், திரிபுரா மாநிலத்திலுள்ள அகர்தலாவிற்கும், பங்களாதேஷில் உள்ள அகௌராவிற்கும் இடையே ரயில் இணைப்பு வழங்குதல், பங்களாதேஷ் ரயில்வேயைச் சேர்ந்த குலௌரா – ஷாபாஸ்பூர் பிரிவை மறுசீரமைத்தல் ஆகிய இந்த மூன்று திட்டங்களும் இரு நாடுகளுக்கும் அதிகப் பயனளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன.

பங்களாதேஷ் மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடன், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை இணைப்பது என்ற நோக்குடன் இந்த ரயில் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டில்  கவனிப்பாரற்றுக் கிடந்த இந்தப் பிராந்தியத்தில் அதிகப்படியான வர்த்தகம் மற்றும் முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியும்.

இந்தியத் துணைக் கண்டம் பிளவுபடுவற்கு முன்பாக, நல்ல நிலையில் இருந்த பங்களாதேஷ் ரயில்வேயைச் சேர்ந்த குலௌரா – ஷாபாஸ்பூர் ரயில் பிரிவு, மீண்டும் மறுசீரமைக்கப்பட்ட பின்னர், தெற்கு ஆசியாவில் இருந்து தென்கிழக்காசிய நாடுகளுக்கு ரயில் இணைப்பு ஏற்படும். ஆசியா முழுவதற்குமான ரயில்வே திட்டத்திற்கு இது ஒரு முக்கியப் பங்கு வகிக்கும்.

15.5 கிலோமீட்டர் தூரமுள்ள அகௌரா – அகர்தாலா இடையேயான ரயில் இணைப்பு, உலகிலேயே மிகவும் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிட்டகாங் துறைமுகம் மூலமாக, இந்தியா மற்றும் பங்களாதேஷிற்கு இடையேயான அதிகப்படியான வர்த்தகத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு, ஷேக் ஹசீனா அவர்கள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டபோது, இந்த ரயில் இணைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் திரிபுரா, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு இடையே ஏற்படும் பயண நேரம் வெகுவாகக் குறையும். இந்த வழித்தடம் மூலமாக, பங்களாதேஷின் அகௌரா ரயில் நிலையம் வழியாக கொல்கத்தாவைச் சென்றடையலாம். அனைத்தும் திட்டத்தின் படி நடந்தால், இன்னும் இரண்டே வருடங்களில் இந்தத் திட்டம் செயல்படத் துவங்கும்.

அண்டை நாட்டுத் தலைவர்களின் உறவுகள், நெறிமுறைகளுக்குள் கட்டுண்டு இருக்காமல், பக்கத்து வீட்டினருக்கு இடையே உள்ள உறவுகள்போல் நிலவ வேண்டும் என்றும், அடிக்கடி பேச்சு, பயணம் ஆகியவை அண்டை நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோதி அவர்கள் கூறினார். இதனையே, இந்தியாவுக்கும், பங்களாதேஷுக்குமிடையிலான இருதரப்பு, வர்த்தக உறவுகளின் முன்மாதிரியாக பிரதமர் மோதி அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

Pin It