ரோஹிங்கியா பிரச்சனையில் உதவ கூடுதலாக 30 லட்சம் யூரோ – ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு.

பங்களாதேஷ் மற்றும் மியான்மர் நாடுகளில் நிலவி வரும் ரோஹிங்கியா பிரச்சனையில் உதவ, கூடுதலாக 30 லட்சம் யூரோ வழங்க ஐரோப்பிய யூனியன் முன்வந்துள்ளது. மனிதாபிமான உதவிகள் ஆணையத்தின் ஐரோப்பிய யூனியன் தலைவர் கிறிஸ்டோஸ் ஸ்டைலியனைட்ஸ் அவர்கள், மே மாதம், தான், ரகைன் பகுதிக்கு நேரில் வந்த போது அறிவித்த 1.2 கோடி யூரோ உதவியுடன், கூடுதலாக இந்தத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். மியான்மரிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வரும் ரோஹிங்கியா அகதிகளின் வருகையை ஒட்டி, அவர்களுக்கான உறைவிடம், உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகளுக்கு  இந்தக் கூடுதல் நிதி பயன்படும். அனைத்து ஐரோப்பிய யூனியன் உதவிகளைப் போல, இதுவும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள், ஐ நா சபை அல்லது செஞ்சிலுவைச் சங்கம் மூலமாகவே வழங்கப்படும். மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்குவதோடு மட்டுமல்லாமல், இச்சிக்கலுக்கான மூல காரணத்தையும் கண்டறியவும் கோஃபி அன்னான் ஆணையத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ஐரோப்பிய யூனியன் துணை அதிபர் ஃபெடெரிகா மொகெரினி தனது தனி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Pin It