வட்டி விகிதங்களில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி முடிவு

(டாக்டர் லேகா எஸ் சக்ரபோர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி.குருமூர்த்தி)

ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழு தனது ஐந்தாவது இரு மாதக் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவிற்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு ஊர்ஜித் பட்டேல் அவர்கள் தலைமை ஏற்றார். இந்தக் கூட்டத்தில் வட்டி விகிதங்களை மாற்றாமல் விடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை  அதாவது ரெப்போ விகிதத்தைஆறு சதவிகிதம் எனவும் மற்ற  வங்கிகளிலிருந்து ரிசர்வ் வங்கி  பெறும் வட்டி விகிதம் அதாவது ரிவர்ஸ் ரெப்போ விகிதம், 5.75% எனவும் இந்தக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், எஞ்சியிருக்கும் நிதியாண்டில் பண வீக்கம் 4.3% – 4.7%  அதிகரிக்கும் என இந்தக் கூட்டத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி சட்டம் 1934 –ன் சட்ட திருத்தத்தின் மூலம் பணக் கொள்கைக் குழு இந்தியாவில் அமைக்கப்பட்டது. இதன் மூலம், ரிசர்வ் வங்கி ஆளுநர் மட்டுமல்லாமல், பணக் கொள்கைக் குழு உறுப்பினர்களும் கொள்கை விகிதங்களைத் தீர்மானிக்க சட்டப்பூர்வ வழி வகை செய்யப்பட்டது. நிறுவன அளவிலான இந்தப் பெரிய சீர்திருத்தம் படி, ரிசர்வ் வங்கியின் முக்கிய நோக்கம், விலைகளின் ஸ்திரத்தன்மையை நிர்வகிப்பதாகும். அதிலிருந்து ரிசர்வ் வங்கி, பண வீக்க விகிதத்துடன் அந்நிய செலாவணி விகிதம், வேலை வாய்ப்பு, வளர்ச்சி ஆகியவற்றை நிர்வகிக்க, பல குறியீடுகளைக் கணக்கில்கொள்ளும் போக்கை விடுத்து, பணவீக்க விகிதத்தில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கியது.

பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருந்ததாலும் பொருளாதார வளர்ச்சி மீட்சி பெற்றதாலும் இந்த 6% ரெப்போ விகிதத்தைத் தொடர இக்குழு முடிவு செய்தது. சரக்கு மற்றும் சேவைகள் வரி, வங்கி மறு மூலதனமாக்கல் தொகுப்பு, வர்த்தகம் செய்ய உகந்த சூழல் தரவரிசையில் முன்னேற்றம் போன்ற மாற்றங்களால் இக்குழு, பொருளாதார வளர்ச்சிக் கணிப்பையும் அதே அளவில் தொடர முடிவு செய்தது.  அதன் படி, 2017 – 2018 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.7% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான ஐந்தாவது இரு மாதக் கொள்கை அறிக்கையில், உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வைக் கருத்தில் கொள்ளாமல், இதே 6.7% என்ற அளவைத் தொடர்வதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் சமன் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும் இவ்வறிக்கையில், அண்மையில் 178 பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 28% -லிருந்து 18% -க்கு குறைக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள மறைமுக வரி வருவாய் இழப்பு, பெட்ரோலியப் பொருட்கள் மீதான சுங்கத் தீர்வை மற்றும்  மதிப்பு கூட்டல் வரிகள் பகுதியாகத் திரும்ப்பபெறப்பட்டது, சில மாநிலங்கள் அறிவித்த கடன் தள்ளுபடிகள் போன்றவற்றால் நிதி நிலையில் சரிவு ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சரிவினால், பண வீக்கம் உயரும் வாய்ப்பு உண்டு என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

அமெரிக்கா மற்றும் உலக நிதிச் சந்தைகளில்  ஏற்பட்டு வரும் மாற்றங்களை, குறிப்பாக, பத்திரங்களின் மீதான வட்டி விகிதங்களை கவனத்தில் கொண்டு இக்குழு, வளர்ந்த நாடுகளுக்கு மூலதனங்கள்  செல்வதைத் தவிர்க்கும் விதத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை. இருப்பினும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தத் தேவையான தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கவும் உள்நாட்டுத் தேவையை அதிகரிக்கவும் வட்டி விகிதங்களைக் குறைக்கும் முடிவை ரிசர்வ் வங்கி எடுக்காதது ஏமாற்றம் தருகிறது.

ரெப்போ வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டிருந்தாலும்,  டெபாசிட் மற்றும் வங்கிகள் தரும் கடன் வட்டி விகிதங்களில் மாற்றங்களைச் செய்வதில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்தியப் பொருளாதாரத்தில் உள்ள வட்டி விகித சேனல்கள் செயல்படும் வழிமுறைகளின்  திறனைப் பொறுத்தே இந்தக் கொள்கை அறிவிப்பின் பயன்கள் அமையும். ரெப்போ வட்டி விகிதங்களைக் குறைப்பதால் பொருளாதார வளர்ச்சி வேகம் பெறும் என்று நம்புவதும் சரியாகாது. எனவே, வட்டி விகிதத்தை மாற்றாமல் வைக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநரின் முடிவு மிகவும் எச்சரிக்கயானது. உணவு மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்றங்கள், அதனால், பண வீக்க எதிர்ப்பார்ப்புகளின் மீதான தாக்கங்கள் மற்றும் வாழ்க்கை செலவுகள் இவையனைத்தையும் கவனத்தில் கொண்டு இந்த ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை.

வர்த்தக நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவே இக்குழுவின் கொள்கை முடிவும் அமைந்துள்ளது. இந்த அறிக்கையை அவை வரவேற்றுள்ளன.  அமெரிக்காவின் மத்திய வங்கி உள்ளிட்ட உலக நிதிச் சந்தையினுடைய போக்கின் காரணமாகவே ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. நவம்பர் மாத இறுதியில், அமெரிக்க மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் எதிர்காலத்தில் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் அதிகரிக்கக்கூடும் என அதன் தலைவர் ஜேனட் எல்லன் தெரிவித்திருந்தார். இந்த முடிவு வளரும் நாடுகளுக்கு வரும் மூலதன வரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.  ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு பொதுத் துறை வங்கிகளின் மறு மூலதனமாக்கம் திட்டத்திற்கு வலு சேர்க்கிறது. ஒட்டு மொத்தக் கடன் வளர்ச்சி மற்றும் தனியார் முதலீட்டை இந்த முடிவு ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pin It