வலுவடைந்து வரும் இந்திய, அமெரிக்க உறவுகள்.

(சிந்தாமணி மஹாபாத்ரா அவர்களின்  ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

அமெரிக்காவுடனான இந்தியாவின் ஈடுபாடுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றன. இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலர் திரு விஜய் கோக்கலே வாஷிங்டன் சென்றுள்ளார். ’2 பிளஸ் 2’ என்ற இரு அமைச்சர்கள் நிலை பேச்சுவார்த்தைக்குத் தேவையான ஏற்பாடுகளின் ஓர் அங்கமாக அவரது பயணம் அமைந்துள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களிடையே இந்த 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் மாதம் புதுதில்லியில் நடைபெறவுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்  போம்பியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அமெரிக்க  பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேத்திஸ் மற்றும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் ஆகியோர், இரு நாடுகளுக்குமிடையே உள்ள இருதரப்பு செயலுத்திக்  கூட்டாளித்துவத்தை சிறந்த அளவிலும், தர பரிமாணங்களிலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல நேரடிப்  பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளனர்.

எப்பொழுதெல்லாம் இருநாடுகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்றதோ,  அப்பொழுதெல்லாம், செயலுத்திப் பேச்சுவார்த்தை கட்டமைப்பில் பெயரளவில் மாற்றங்கள் ஏற்படுவது சகஜம்.  ஆனால், கருப்பொருளில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. தேசிய பாதுகாப்புப் பிரச்சனைகள் மிகவும்  சிக்கலாகியுள்ள நிலையில், இந்தியாவுக்கும், அமெரிக்காவிற்குமிடையே இராஜீய மற்றும்  பாதுகாப்புப் பேச்சு வார்த்தைகள் ஒரே சமயத்தில் மேற்கொள்ளப்படுவது அர்த்தமுள்ளதாக விளங்குகிறது.

இந்த 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தை அவ்வளவு எளிதாக இருக்க சாத்தியமில்லை. ஏனெனில், பரந்த கண்ணோட்டத்தில் இந்திய, அமெரிக்க செயலுத்தி நலன்களில் ஒருமைப்பாடு இருந்தாலும், குறிப்பிட்ட துறைகளில் முக்கியமான வேறுபாடுகள் நிலவுகின்றன. ஆக்கப்பூர்வமான மற்றும்  விரிவான பேச்சுவார்த்தை மூலமே இந்த வேறுபாடுகளைக் களைய முடியும்.  ஒப்புடைமை உள்ள அம்சங்களை மேலும் வலுவடையச் செய்யவும், வேறுபாடுகள் தலைதூக்காமல் பார்த்துக் கொள்ளவும் இந்தப் பேச்சுவார்த்தைகள் அவசியமாகின்றன.

போதிய அளவில் ராஜீய ஈடுபாடுகள் முன்பு இல்லாத காரணத்தால், இருநாடுகளுக்குமிடையே மோதல் நிலை உருவாயிற்று. வளர்ந்து வரும் பாதுகாப்புக் கூட்டுறவில் இது தடைகளை உருவாக்கும் அச்சுறுத்தல் இருந்தது. இப்போது நடைபெறவுள்ள 2  பிளஸ் 2 பேச்சுவார்த்தை அதற்கு மாற்று  மருந்தாக அமைந்து, இத்தகு பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்காமல் இருக்க வழி வகுக்கும்.

இருநாடுகளுக்குமிடையே சில முக்கியத் துறைகளில் நிலவிவரும் தீவிரமான வேறுபாடுகளை, இத்தகைய பேச்சுவார்த்தை மூலமே சரிசெய்ய முடியும். டிரம்ப் நிர்வாகத்தின் ஈரான்  கொள்கையே முதலாவது முக்கியப் பிரச்சனையாக உள்ளது. ஈரானுடனான அணு ஒப்பந்தத்திலிருந்து விலகியதோடு மட்டுமல்லாமல், ஈரான் மீது மேலும் புதிய தடைகளையும் அமெரிக்க விதித்துள்ளது. இந்தியா எரியாற்றல் இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக ஈரான் விளங்குகிறது.
ஆப்கானிஸ்தான்  மற்றும் மத்திய ஆசிய சந்தையை இந்தியா அணுக வழிவகுக்கும், வடக்கு தெற்கு வழித்தடத்தை ஏற்படுத்துவதில்
இந்தியா அளிக்கும் பங்களிப்புக்கு, ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகள் சேதத்தை  ஏற்படுத்தும்.  இந்தியாவின் முதலீட்டில் நடைபெற்றுவரும் ஈரான் சாபாஹார் துறைமுகப் பணிகள்  தாமதமாகும்.

ரஷ்யாவிற்கு எதிரான டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கை, இரண்டாவது பிரச்சனையாக உள்ளது.  பாதுகாப்பு சாதன சந்தையை இந்தியாவில் விரிவுபடுத்த அமெரிக்க முயற்சி செய்கிறது. கடந்த பத்து வருடங்களில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து 15 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள பாதுகாப்புத் தடவாடங்களைக் கொள்முதல் செய்துள்ளது. லாபகரமான இந்த பாதுகாப்புத் தளவாட சந்தையில் ரஷ்யா கால் ஊன்றுவதைத் தவிர்க்கும் பொருட்டு, தன்னிச்சையாக, சட்டத்திற்குப் புறம்பான வகையில் அமெரிக்கா, ரஷ்யா மீது தடைகள் விதிப்பது, உதவிகரமாக இல்லாததோடு, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உள்ள செயலுத்திக் கூட்டாளித்துவத்திற்கு பங்கம் விளவிக்கும் வகையிலும், நம்பகத்தன்மையைக் குலைக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது, மோதல்களைத் தடுப்பது மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவது போன்றவற்றில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, செயல் நுணுக்க அளவில் வேறுபாடுகள் நிலவுவது மூன்றாவது பிரச்சனையாக உள்ளது.  இந்தோ-பசிபிக் என்ற சித்தாந்தத்தை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், இதனை  செயலுத்தியாக இந்தியா கருதவில்லை. திறந்த, தடையற்ற, உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியம் என்ற

யோசனைக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. ஆசிய, ஆப்பிரிக்க வளர்ச்சித் தடத்தின் மேல் அதிக நம்பிக்கை கொண்டுள்ள இந்தியா, அதனை அடைய ஜப்பானுடன் இணைந்து செயல்படுகிறது. கட்டுப்பாடுகளும், விலக்கல்களும் நிறைந்த பழங்கால பனிப்போர் முறைகளில் இந்தியாவுக்கு உடன்பாடு இல்லை.

தென்சீனக் கடல் பகுதியில் தனது ராணுவ சக்தியை வெளிப்படுத்தும் சீனா, இந்திய எல்லையிலும் தனது வலையை விரிக்கப் பார்க்கிறது. சீனாவின் ஒரு பெல்ட் ஒரு ரோடு திட்டம், பொருளாதார ரீதியாக, கபளீகரம் செய்யும் யுக்தியாக விளங்குகிறது, இதனை எதிர்கொள்ள, டிரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளுவது போன்ற மோதல் போக்கு, இந்தியாவுக்கு சரிப்பட்டு வராது.

2 பிளஸ் 2 பேச்சுவார்த்தைகள், சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவும்,பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கவும், செயலுத்திக் கூட்டாளித்துவத்தை ஊக்குவிக்கவும், உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவுக்கும் அமெரிக்காவும் கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு என்றால் அது மிகையல்ல. இருநாடுகளுக்குமே நன்மை பயப்பதாக இப்பேச்சுவார்த்தைகள் அமையும்.

 

.

Pin It