வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதன் மூலமே வன்முறைச் சம்பவங்களை ஒழிக்க முடியும் – பிரதமர் திரு நரேந்திர மோதி.

வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதன் மூலமே வன்முறைச் சம்பவங்களை ஒழிக்க முடியும் என பிரதமர் திரு நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், தமது தலைமையிலான மத்திய அரசு, மக்களிடம் நம்பிக்கைச் சூழலை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றார்.    சத்தீஸ்கர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசும், மாநில பாஜக அரசும், செயல்படுத்திய பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்ட பிரதமர், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதன் மூலம், மக்களிடம் ஏற்படும் நம்பிக்கை, தீவிரவாதம் எத்தகைய வடிவில் வந்தாலும் அதனை முறியடிக்கும் திறன் பெற்றதாக இருக்கும் என்று தெரிவித்தார். பழங்குடியின மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வருமானத்தை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

முன்னதாக, பிலாயில் மேம்படுத்தப்பட்ட உருக்காலையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், பிலாய் ஐஐடி நிறுவனத்தின் புதிய கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். மேலும், மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் ஜக்தால்பூர் – ராய்ப்பூர் நகரங்களுக்கு இடையிலான விமான சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சாமானிய மக்களும் விமானத்தில் பயணம்  செய்வதைப் பார்க்க வேண்டும் என்பது தமது கனவாக உள்ளது என்றார்.

Pin It