வளைகுடா நாடுகளிடையே மூக்குடைபட்ட பாகிஸ்தான்.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

வளைகுடா நாடுகளிடமிருந்து தான் எதிர்பார்த்த ஆதரவை பாகிஸ்தான் பெற இயலவில்லை. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அரசியலமைப்பு 370 ஆவது பிரிவை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியை யூனியன் பிரதேசங்களாக அறிவித்த இந்தியாவின் நடவடிக்கைக்கு, பெரும்பாலும் வளைகுடா நாடுகள் எந்த தாக்கத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஸ்திரமான, முதிர்ச்சி பெற்ற நாடாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டதால், வளைகுடா நாடுகளிடையே இது சாத்தியமாயிற்று. தவிர, கிட்டத்தட்ட அனைத்து வளைகுடா நாடுகளுடனும் இந்தியா வலுவான செயலுத்திக் கூட்டுறவை வளர்த்துக் கொண்டுள்ளது. வளைகுடா நாடுகளின் முக்கியப் பொருளாதாரக் கூட்டாளி நாடாக விளங்கும் இந்தியா, அந்நாடுகளுடன் ஆண்டொன்றுக்கு 10,000 கோடி டாலர் அளவிலான வணிகம் மேற்கொண்டு வருகிறது.

உலகிலேயே சக்தி வாய்ந்த இஸ்லாமிய நாடான சவூதி அரேபியா, இந்தியாவின் நடவடிக்கை குறித்து, கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்ற கருத்தை மட்டுமே தெரிவித்தது. இதர முக்கிய வளைகுடா நாடுகளான குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள், இந்தியாவின் நடவடிக்கை குறித்து எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. ஐக்கிய அரபு அமீரகம், இந்தியாவின் முடிவு, முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று தெரிவித்துள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாகிஸ்தானுக்கு எளிய கடனாக 300 கோடி டாலர் மற்றும் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்த பெட்ரோலியப் பொருட்களுக்கான பணம் செலுத்துதலை ஒத்தி வைத்தல் போன்ற சலுகைகளை ஐக்கிய அரபு அமீரகம் அளித்திருந்தாலும், இந்தியாவின் நடவடிக்கையைக் கண்டுகொள்ளாமல் விட்டதன் மூலம், அந்நாடு, இந்தியாவுடனான செயலுத்தி உறவுகளுக்கு அதிக மதிப்பளிக்கிறது என்ற செய்தியைப் பாகிஸ்தானுக்கு தெளிவுபட எடுத்துரைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளி நாடுகளுள் ஒன்றாகும். அமீரகத்தைப் பொறுத்தவரை, 5000 கோடி டாலர் வர்த்தகம் கொண்டுள்ள இந்தியா, இரண்டாவது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி நாடாக விளங்குகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக, மூன்றாவது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி நாடாக ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா 5,500 கோடி டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளது. துபாயின் ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவில் அந்நிய முதலீடு செய்துள்ள நாடாக இந்தியா விளங்குகிறது. துபாயில் முன்னிலை வகிக்கும் உலகளவிலான துறைமுக இயக்க நிறுவனம், காஷ்மீரில் வழிமுறைகள் முறைப்படுத்தப்பட்ட பின்னர், சரக்குப் போக்குவரத்து மையத்தை நிறுவத் திட்டமிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்தியாவுக்கான தூதரான அகமது அல் பன்னா அவர்கள், காஷ்மீரில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அப்பகுதியில் சமூக நீதி மற்றும் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, ஸ்திரத் தன்மையையும் அமைதியையும் நிலைநாட்ட உதவும் என்று குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவுடனும், பாகிஸ்தானுடனும் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள சவூதி அரேபியா, காஷ்மீர் விவகாரத்தில் அடக்கி வாசித்துள்ளது. மாற்றங்களைக் கண்டுவரும் புவிசார் அரசியல் காரணமாக, துருக்கியுடன் மாறுபட்ட கொள்கை கொண்டுள்ள சவூதி அரேபியா, இஸ்லாமிய உலகின் ஆதிக்க சக்தியாக விளங்க ஈரான் எடுக்கும் முயற்சிகளை எதிர்க்கிறது. எனவே, காஷ்மீர் விவகாரத்தில், நிலைமையைக் கவனித்து வருவதாகவும், அமைதியான முறையில் தீர்வு காண அழைப்பு விடுத்தும் சவூதி அரேபியா அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொண்டுள்ளது.

சவூதி அரேபியாவில் 27 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். ஈராக்குக்கு அடுத்தபடியாக, அதிகளவில் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடு சவூதி அரேபியாவாகும். கடந்த ஆண்டில், சவூதி அரேபியாவின் இந்தியவுடான இருதரப்பு வர்த்தகம், 2,750 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரத்தில், இந்தியாவில் சவூதி அரேபியாவின் மிகப்பெரும், அதாவது, 1,500 கோடி டாலர் அளவிலான முதலீட்டை இந்தியா அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் அரசு நிறுவனமான அராம்கோ, இந்தியாவின் ரிலையன்ஸ் எண்ணெய் மற்றும் ரசாயன வர்த்தக நிறுவனத்தை இந்தத் தொகைக்கு வாங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் 10,000 கோடி டாலர் அளவில் முதலீடு செய்யவுள்ளதாக, சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் அவர்கள் உறுதி பூண்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்குமாறு கோரிக்கை வைத்து, சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைன் நாட்டுத் தலைவர்களை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்கள் அணுகினார். அவரின் இந்த முயற்சி எடுபடவில்லை. மேலும், பஹ்ரைனில் வசிக்கும் சில தெற்காசியர்கள் காஷ்மீர் விவகாரத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்தபோது கைது செய்யப்பட்டனர். ஈரான் அதிபர் ஹாஸ்ஸன் ருஹானி அவர்களும், அந்நாட்டு வெளியுறவுத் துறையும், இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதிப் பேச்சு வார்த்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்து, நிதானமான அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், தீவிரமாகக் கவலை கொண்ட பாகிஸ்தான், ஐ.நா.பாதுகாப்புச் சபையில் தங்களுக்கு செவிமடுக்க எந்த நாடு தயாராக உள்ளது என்ற கேள்விக் குறியை எதிர்கொண்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்க வளைகுடா நாடுகள் தயங்குகின்றன. காஷ்மீர் விவகாரத்தை முன்னிறுத்தி, தங்களிடமிருந்து பணம் பிடுங்கும் செயலில் பாகிஸ்தான் ஈடுபடுவதாக வளைகுடா நாடுகள் நம்புகின்றன. அவர்கள் பணம் தவறான கைகளில் சென்றடைவதை வளைகுடா நாடுகள் உணர்ந்துள்ளன. வேலையின்மை, அதிகரித்து வரும் பணவீக்கம் போன்ற உள்நாட்டுப் பிரச்சனைகளை வளைகுடா நாடுகள் சந்தித்து வருகின்றன. செயலுத்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில், அரேபிய எழுச்சி, தீவிரமான உள்நாட்டு மாறுதல்களைக் கொண்டுவந்துள்ளன.

சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தங்கள் நாட்டுப் பொருளாதாரம், வேலையின்மை மற்றும் எகிரும் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்கொள்ள பாகிஸ்தான் கவனம் செலுத்துவது நல்லது. காஷ்மீர் விவகாரத்தில் பிறநாடுகளிடமிருந்து பச்சாதாபத்தையும், கோடிக்கணக்கில் நிதி உதவியையும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது பாகிஸ்தானுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்கப் போவதில்லை.

 

 

 

 

Pin It