விண்வெளியில் மாபெரும் சதமடித்தது இந்தியா

 

மூத்த அறிவியல் வர்ணனையாளர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  ஸ்ரீபிரியா சம்பத்குமார்

 

இந்தியா, தனது விண்வெளிப் பயணத்தில், நேற்று ஒரு மாபெரும் சதத்தை அடித்தது. இந்தியாவின் நூறாவது செயற்கைக்கோளான கார்டோசாட்-2 எஃப், பி.எஸ்.எல்.வி – சி 40 ராக்கெட்டின் உதவியால், அதனுடைய சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமான நிலை நிறுத்தப்பட்டது. புவிக் கண்காணிப்புச் செயற்கைக்கோளான கார்டோசாட்-2எஃப்-ன் வெற்றிகரமான செலுத்தலும், சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தியதும், இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் மன உறுதியை வெகுவாக அதிகரித்துள்ளது. துருவ செயற்கைக்கோள் செலுத்து விமானமான பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் நம்பகத்தன்மை மீது அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை இது மீண்டும் வலுப்படுத்தியுள்ளது. பி.எஸ்.எல்.வி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் நம்பகமான விண்வெளி ஊர்தியாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் பி.எஸ்.எல்.வி-யின் நம்பகத்தன்மை மற்றும் திடத்திற்கு, இந்தச் செலுத்தல் ஒரு தகுந்த தேர்வாக அமைந்தது எனலாம். தொடர்ச்சியாக 39 வெற்றிகரமான செலுத்தல்களை பி.எஸ்.எல்.வி, மேற்கொண்டிருந்தாலும், இஸ்ரோ, நான்கு மாத இடைவெளியை எடுத்துக்கொண்டு, சில முக்கியப் பகுதிகளைத் திரும்ப ஆராய்ந்து, வெற்றிகரமான முறையில் இந்தச் செலுத்தலை நிகழ்த்தியுள்ளது.

பி.எஸ்.எல்.வி-சி 39- தில், வெப்பக் கவசம் வெளிவராததால், வெப்பக் கவசம் மற்றும் செயற்கைக்கோள் உட்பட, பி.எஸ்.எல்.வி-சி39-ன் நான்காவது கட்டம் முழுவதும், விண்வெளிக் குப்பைகளாகிப் போயின. இதுவே பி.எஸ்.எல்.வி-சி39 வெற்றிகரமாகச் செலுத்தப்படாததற்கு முதன்மையான காரணம் என   அடுத்தடுத்த பகுப்பாய்வுகள் வெளிப்படுத்தின. எனினும், முதல் கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் மற்றும் வெளிப்பாட்டு நிகழ்வுகள் உட்பட செலுத்தல் ஊர்தியின் மற்ற அனைத்துக் கட்டங்களும் இயல்பாக நடந்தன.

நேற்று நடந்த செலுத்தல், மற்ற சில காரணங்களுக்காகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், இஸ்ரோவின் முந்தைய பி.எஸ்.எல்.வி செலுத்தல் தோல்வியைக் கண்டதையடுத்து, நான்கு மாதங்களில் இஸ்ரோ மீண்டு வந்து வெற்றிகரமான ஒரு செலுத்தலை நிகழ்த்தியுள்ளது. மேலும், 710 கிலோகிராம் எடையுடன், கார்டோசாட்-2எஃப், பி.எஸ்.எல்.வி-யால் செலுத்தப்பட்டுள்ள மிக அதிக எடையுள்ள செயற்கைக்கோளாகும்.

சூரியனோடு ஒத்தியங்கும் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் புவிக் கண்காணிப்புச் செயற்கைக்கோள்களின் கார்டோசாட் தொடரில், கார்டோசாட்-2எஃப் ஏழாவதாகும். உயர் தெளிவுடன் கூடிய பெரிய அளவிலான வரைபடங்களைச் சேகரிப்பது இதன் முக்கிய நோக்கமாகும். இந்தச் செயற்கைக்கோளால் அனுப்பப்படும் படங்கள், வரைபடப் பயன்பாடுகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பயன்பாடுகள், கடலோர நிலப் பயன்பாடு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு உதவியாக இருக்கும். சாலைப் பிணைப்புக் கண்காணிப்பு, நீர் விநியோகம், நில உபயோக வரைபடங்களின் உருவாக்கம் போன்ற பயன்பாட்டு மேலாண்மைக்கும் இது பயன்படுகிறது. மேலும் புவியியல் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட அம்சங்கள், எல்.ஐ.எஸ் எனப்படும் மற்ற நிலத் தகவல் அமைப்புகள், ஜி.ஐ.எஸ் எனப்படும் புவியியல் தகவல் அமைப்புகள் ஆகியவற்றைக் கண்டிறிவதற்கும் இவை உதவியாக இருக்கும். ஆனால், மிக முக்கியமாக, ஒரு மீட்டரை விட குறைவான, மிக அதிக உயர் தெளிவுடன், இது, நம் எல்லைப்பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

கார்டோசாட்-2எஃப்-புடன், 30 சிறிய செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட்டன. இந்தியாவின் ஒரு நுண் செயற்கைக்கோள் மற்றும் ஒரு நேனோ செயற்கைக்கோள், கனடா, ஃபின்லாந்து, ஃப்ரான்சு, கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மூன்று நுண் செயற்கைக்கோள்கள் மற்றும் 25 நேனோ செயற்கைக்கோள்கள் ஆகியவை இதில் அடங்கும். செயற்கைக்கோள்கள் இரண்டு வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டன. கார்டோசாட், சூரியனுடன் ஒத்திசைந்துள்ள துருவ சுற்றுவட்டப் பாதையில், சுமார் 510 கிலோமீட்டர் உயரத்தில் வெளியிடப்பட்டது. 30 நுண் மற்றும் நேனோ செயற்கைக்கோள்களும் 349 கிலோமீட்டர் உயரத்தில் வெளியிடப்பட்டன. இரண்டு வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டது, இந்தச் செலுத்தலின் தனிச்சிறப்பு வாய்ந்த விஷயமாகும். இதற்கு, ராக்கெட்டின் நான்காவது கட்ட எஞ்சின் பல முறை மூடப்பட்டு, மீண்டும் எரியூட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்துவதையும் சேர்த்து, செலுத்தலின் மொத்த செயல்முறைக்கு, 2 மணி நேரமும் 21 நிமிடங்களும் ஆனது.

பி.எஸ்.எல்.வி-யின் வெற்றிகரமான செலுத்தல்களினால் ஊக்கம் பெற்று, இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி வாயிலாக, சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு, செலுத்தல் சேவைகளை வழங்கி வருகிறது. இதுவரை, பி.எஸ்.எல்.வி-யால், 15 செலுத்தல்களில், 20 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாகச் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது நடந்துள்ள இந்தச் செலுத்தலின் மூலம், இந்திய செயற்கைக்கோள் செலுத்தும் திறன் குறித்து சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு உள்ள நம்பிக்கை மேலும் வலுப்பட்டுள்ளது. நுண் மற்றும் நேனோ செயற்கைக்கோள்களைச் செலுத்தும் இந்தியாவின் திறன், விண்வெளி முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் பல நாடுகளைக் காட்டிலும், மிக அதிகமாக உள்ளது என்பது தற்போது தெளிவாகியுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகள், தங்கள் நேனோ செயற்கைக்கோள்களைச் செலுத்த தொடர்ந்து இந்தியாவிடம் வந்துகொண்டிருப்பது இதற்கும் மிகச் சிறந்த உதாரணமாகும்.

2018 ஆம் ஆண்டின் முதல் செயல்திட்டம் வெற்றியடைந்திருக்கும் நிலையில், இந்த ஆண்டின் திட்டப் பட்டியலில் உள்ள மற்ற முக்கிய பணித்திட்டங்களை இஸ்ரோ, உற்சாகத்துடன் எதிர்நோக்கலாம். மார்ச் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படும், நிலவிற்கான இரண்டாவது லட்சியகர திட்டமான சந்திரயான்-II இதில் அடங்கும். இதற்கு, இஸ்ரோவின் மிகப்பெரிய செயற்கைக்கோள் செலுத்து வாகனமான, ஜி.எஸ்.எல்.வி-மார்க் III, உபயோகிக்கப்படும். இதற்கு முந்தைய முறையைப் போலல்லாமல், சந்திரயான்-II ஒரு சுற்றுவட்டப் பாதை பணித்திட்டமல்ல. இது, நிலவின் நிலப்பரப்பைப் பற்றிய ஆய்வுகளை நடத்த, நிலவில், ரோவர் எனப்படும் ஒரு விண்வெளி ஆய்வு வாகனத்தை இறக்கும்.

இந்த திட்டமும், இன்னும் நம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் திட்டமிட்டிருக்கும் அனைத்து எதிர்காலப் பணிகளும் முழு வெற்றியடைய நம் வாழ்த்துக்கள்.

________________________

 

 

 

 

Pin It