ஸ்வீடன் அரச தம்பதியரின் இந்தியப் பயணம்.

(ஐரோப்பிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் சங்கமித்ரா சர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – கே.லக்ஷ்மண குமார்.)

ஸ்வீடன் அரச தம்பதியினர், அரசர் கார்ல் 16 ஆம் குஸ்தாப் மற்றும் அரசி சிலிவியா ஐந்து நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தனர். ஸ்வீடன்  வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன் லின்டாய்   மற்றும் வியாபாரத் துறை அமைச்சர் இப்ராஹிம்  பாய்லன்  ஆகியோர் உடன் வந்தனர். 50 ஸ்வீடன் கம்பெனிகள் மற்றும் ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் பிரதிநிதிகளும் உயர்நிலைக் குழுவுடன் வந்தனர். 1993 மற்றும் 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஸ்வீடன் அரசர் இந்தியாவுக்கு வருவது இது  மூன்றாவது முறையாகும். 2015 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் ஸ்வீடன் சென்று வந்த பிறகு, இரு நாடுகளுக்கிடையே உயர் நிலை அளவில் அரசியல் தலைவர்கள் பயணம் மேற்கொள்வது இது நான்காவது முறையாகும். பல வருடங்களாக உயர் நிலை அளவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளால், இந்திய, ஸ்வீடன் உறவுகள் பலப்பட்டு உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அரசர்  குஸ்தாப், பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார். புத்தாக்கக் கொள்கைக்கான இந்தியா-ஸ்வீடன் உயர் நிலை பேச்சுவார்த்தையை அவர்கள் துவக்கிவைத்தனர். பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்கள், நீடித்த வளர்ச்சிக்கான சவால்களை சமாளிப்பதற்கும், பருவ நிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் குறைப்பதற்கும் கட்டுபடியாகக்கூடிய விலையில், ஏற்கக்கூடிய தொழில்நுட்பங்களைக் கண்டறிய, வருங்காலத்தில் ஒத்துழைப்பது குறித்து விவாதித்தனர். ஸ்வீடன் அரசர், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களையும் சந்தித்தார். பிறகு இரு தரப்பினரும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். ஸ்வீடனின் எரிசக்தி முகைமையும், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறையும் ஒத்துழைப்புக்கான நெறிமுறை ஒன்றில் கையெழுத்திட்டன. துருவ அறிவியலில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஸ்வீடனின் கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சகமும், இந்தியாவின் புவி அறிவியல் துறையும் கையெழுத்திட்டன. கடல் சார் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை உறுதி செய்வது குறித்து மூன்றாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்திய ஸ்வீடன் கூட்டு மானிய விருதுகளின் கீழ், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிநுட்பத் துறையும், ஸ்வீடன் ஆராய்ச்சி சபையும் கணினி அறிவியல் மற்றும் பொருள் சார் அறிவியல் துறையில் இணைந்து, 20 திட்டங்களுக்கு நிதியுதவி அளித்திடும். இந்த திட்டங்களுக்கு, ஸ்வீடன் அரசு, இரண்டு ஆண்டுகளுக்கு, ஒரு கோடியே 40 லட்சம் ஸ்வீடன் நாணயமான குரோனா செலவிடும். ஸ்வீடனின் ராயல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியும் (ROYAL INSTITUTE OF TECHNOLOGY) சென்னை ஐ ஐ டியும் இணைந்து, புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோருக்கான ஆற்றல்சார் கூட்டு மையம் ஒன்றை ஏற்படுத்தி, இரு நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கொண்டு குழு அமைக்க இருப்பதாக இரு நாடுகளும் அறிவித்தன. வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெயசங்கர் அவர்களும் அரச தம்பதியினரை சந்தித்து இரு தரப்பு உறவுகளை அதிகரிப்பது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். 2020 ஆம் ஆண்டுக்கான கூட்டுத் திட்டங்களில், ‘ஸ்மார்ட் கிரிட்’ துறையில் இந்திய-ஸ்வீடன் கூட்டுத் தொழில் ஆராய்ச்சி வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் சுகாதாரத் துறையில் இணைந்து செயல்படவுள்ள திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். மறு  சுழற்சி பொருளாதார அணுகுமுறை மூலம், வாயு வெளியேற்றம் மற்றும் காற்று மாசுக்குத் தீர்வு காண்பது பற்றிய இந்திய – ஸ்வீடன் பேச்சுவார்த்தை நிகழ்ச்சியின் போது, ஸ்வீடன் அரசர்  இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் விஜயராகவனை சந்தித்தார். ஸ்வீடன் புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு அரசரும் அரசியும் உத்தராகண்டுக்கும், மும்பைக்கும் சென்றனர்.

ஸ்வீடன் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா 19 ஆவது இடத்தில் உள்ளது. சீனா, ஜப்பானுக்கு அடுத்து, ஸ்வீடன் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கிறது. 2009-10 ல் 200 கோடி டாலராக இருந்த இருதரப்பு வர்த்தகம், 2014-15 ல் 240 கோடி டாலராக அதிகரித்துள்ளது. எனினும், 2018 க்குள் 500 கோடி டாலர் என்ற இலக்கை எட்ட முடியவில்லை. இதில் ஒரு சாதக அம்சம்  என்னவென்றால், ஸ்வீடன் முதலீடுகள் அதிகரித்திருப்பது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே ஸ்வீடன் நிறுவனங்கள் இந்தியாவில் செயலபடத் துவங்கின.. எரிக்சன் (ERICSSON), விம்கோ (WIMCO) மற்றும் எஸ்கேஎஃப் (SKF) நிறுவனங்கள் 1920 களிலிருந்து இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. அட்லாஸ் காப்கோ (ATLAS COPCO), சாண்ட்விக்  9SANDVIK),ஆல்ஃபா லாவல் (ALFA LAVAL), VOLVO வோல்வோ, ஏஸ்ட்ரா ஸெனெகா (ASTRA ZENECA) முதலிய நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் உட்பட, 70 இந்திய நிறுவனங்கள் ஸ்வீடெனில் இயங்கி வருகின்றன.

இந்தியாவும், ஸ்வீடனும் ஒரே ஜனநாயக விழுமியங்களை கொண்டுள்ளன. பரஸ்பர பயனளிக்கும் துறையில் முன்னேறுவது குறித்து இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. பரஸ்பர நலம் மற்றும் பயன் அடிப்படையில் இந்திய – ஸ்வீடன் பலமான உறவுகளுக்கான அளப்பரிய சாத்தியக் கூறுகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா – ஸ்வீடன் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் குறிப்பிடும்படியாக அதிகரித்துள்ளது. இரு தரப்பு வர்த்தகத்தை அதிகரித்து,  விண்வெளி  தொழில் நுட்பம், திறன் வளர்ச்சி போன்ற பல்வேறு புதிய  துறைகளைக் கண்டறிந்து ஒத்துழைப்பை அதிகரிப்பது தற்போதைய தேவையாகும். கூட்டு செயல் திட்டம், புத்தாக்கக் கூட்டளித்துவம் மற்றும் தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ற வரையறைக்குள் இருதரப்பு உறவுகளில் உள்ள குறைகளைக் களைய இது போன்ற உயர் நிலை அளவிலான  பயணங்கள் வழி வகுக்கும்.

 

Pin It