ஹஃபீஸ் சயீத் மீதான குற்றச்சாட்டு – நிஜமானதா, கேலிகூத்தா?

(பாகிஸ்தான் விவகாரங்கள் ஆய்வாளர் டாக்டர் ஸைனப் அக்தர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.)

பயங்கரவாதி என்று ஐ.நாவால் அறிவிக்கப்பட்டவரும், ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவரும், மும்பைத் தாக்குதல்களின் சூத்திரதாரியுமான ஹபீஸ் சயீத் மீது, பயங்கரவாதத்திற்கு  நிதி  அளித்ததாக, லாகூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையின் பயங்கரவாத தடுப்புத் துறையானது, (சி.டி.டி) சயீத் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக, ஜூலை மாதம் 23 குற்றப் பத்திரிக்கைகளைப் பதிவு செய்து, நீதித்துறைக்  காவலில் எடுத்து, லாகூரின் கோட் லக்பத் சிறைக்கு அனுப்பியது. தண்டனை அறிவிக்கப்பட்டபோது சயீத் நீதிமன்றத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், டிசம்பர் 11 ஐ சயீதுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிர்ணயிக்கும் தேதியாகக் குறித்தது. இப்போது ஏன்? இப்போது அவர் மீதான வழக்கை நீதிமன்றம் தீவிரமாகத் தொடருமா? என்பது போன்ற கேள்விகள் பாகிஸ்தான் அமைப்புகள் செயல்படும் முறையை அறிந்த அனைவராலும் எழுப்பப்படுகின்றன.

உலக அளவில் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் ஏற்படுத்தப்பட்ட   நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF)வின் தீவிரமான கண்காணிப்பினால், பயங்கரவாத நிதியுதவியைத் தடுக்க, பாகிஸ்தான் கடுமையான சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் (யு.என்.எஸ்.சி) அழுத்தத்தைத் தொடர்ந்து, சயீத்தின் வங்கிக் கணக்குகள் உட்பட, நிதிச் சொத்துக்களை   முடக்க பாகிஸ்தான் கட்டாயப்படுத்தப்பட்டது. தடைகள் இருந்தபோதிலும்,  குடும்ப செலவுகளுக்காக அவரது கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க அனுமதிக்குமாறு, பாகிஸ்தான் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கு வேண்டுகோள் விடுத்தது.  நிதி நடவடிக்கை பணிக்குழுவின் அழுத்தம் தவிர, இந்தியாவைக் குறிவைத்து, பயங்கரவாதத்துக்கான நிதி திரட்டுவதற்காக ஹபீஸ் சயீத் ஒரு மத முன்னணியை நடத்தி வருகிறார் என்பதை இந்தியா சுட்டிக்காட்டுயுள்ளது. சயீதுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைக்கிறது.  ஹஃபீஸ் சயீதைப் பிடிப்பதற்காக,  அமெரிக்கா  ஒரு கோடி டாலர் பரிசுத் தொகையை அறிவித்தது நினைவிருக்கலாம்.

அக்டோபரில் வெளியான FATF இன் கடைசி மதிப்பாய்வில், பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடி ஆகியவற்றை முற்றிலுமாக அகற்ற பாகிஸ்தான் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்காக,  பிப்ரவரி 2020 வரை பாகிஸ்தானுக்கு FATF கால அவகாசம் அளித்துள்ளது. அது வரை பாகிஸ்தான் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருக்கும். பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக, லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால் ஹபீஸ் சயீத் குற்றம் சட்டப்பட்டுள்ளது,  அடுத்த FATF மறுஆய்வுக் கூட்டத்தில் கறுப் புப் பட்டியலில் இடம் பெறுவதைத் தவிர்ப்பதற்கான பாகிஸ்தானின் ஒரு உத்தியே   எனக் கருதப்படுகிறது..

 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அமெரிக்காவிற்குச் சென்று அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க இன்னும்  ஒரு வாரமே இருக்கும் நிலையில், சயீத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சுவராஸ்யத்தைக் கூட்டுகிறது. பாகிஸ்தான் மண்ணிலிருந்து வெளிவரும் பயங்கரவாதத்தைத் தடுக்க, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்த கூடுதல் அழுத்தமும், கடந்த ஓரிரு ஆண்டுகளாக  பயங்கரவாதத்தைப் பற்றிய அமெரிக்காவின் கடுமையான அறிக்கைகளும் சயீத்தின் மீதான நடவடிக்கைகளுக்கு முக்கியக் காரணங்களாக  இருந்திருக்கலாம்.

இதில் மற்றுமொரு சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒருபுறம், ஹபீஸ் சயீத் குற்றம் சாட்டப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கையில், அவரது மகன் தல்ஹா சயீத் கடந்த வாரம் நடந்த ஒரு குண்டுவெடிப்பில் இருந்து  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பதே. லாகூரின் புறநகரில் உள்ள கடை ஒன்றில் கூடியிருந்தவர்களிடையே  உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, அவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். லஷ்கர் ஆதரவாளர்கள் ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். ஹஃபீஸ் சயீதின் மகன் தல்ஹா சயீத் எதிர்காலத்தில் லஷ்கர் தலைவராக நியமிக்கப்படும் வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். லஷ்கரிடமுள்ள நிதி  சொத்துக்களை சயீதின் மகன் தல்ஹா சயீத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது, பயங்கரவாத அமைப்பின் சில மூத்த தலைவர்களுக்குக் கோபத்தை  ஏற்படுத்தியிருப்பதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. எனவே, லஷ்கருக்குள் உள்ள அதிகாரப் போராட்டத்தின் விளைவாகவும் தல்ஹா சயீத் மீதான தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் எனக் கருத இடமிருக்கிறது.

 ஹஃபீஸ் சயீத் குற்றம் சாட்டப்பட்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ள போதிலும், இதை இந்தியா உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இம்ரான் கான் அரசாங்கம், முந்தைய பாகிஸ்தான் அரசாங்கங்களிலிருந்து வேறுபட்டதா என்பதைப் பார்க்க வேண்டும். ஹபீஸ் சயீத் இதற்கு முன்னர் பலமுறை கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தாலும்,  இறுதியில் பாகிஸ்தான் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஹஃபீஸ் சயீத் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் சயீத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதுபோன்ற டஜன் கணக்கான வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டுள்ளன. அவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது,  பஞ்சாப் காவல்துறையின் பயங்கரவாத தடுப்புத் துறையால் கைது செய்யப்பட்ட விதம், அவரைக் கைதுசெய்ய, பாகிஸ்தான் பெரிய அளவிலான ஆர்வம் காட்டவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.  சயீதுக்கு எதிரான பயங்கரவாத வழக்கை நடத்த, எந்த அளவுக்குப்  பாகிஸ்தான் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது என்பதைப் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். FATF இன் 27 அம்சத் திட்டத்திற்கு இணங்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறதா என்பது கேள்விக்குறியே.  பாகிஸ்தானின் முந்தைய நிலைப்பாடுகளுக்கு ஏற்ப, தற்போதும் சயீத் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இன்றி விடுவிக்கப்பட்டால்,   பயங்கரவாத நிதியுதவிகளைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக FATF பாகிஸ்தானை அதன் கறுப்புப்பட்டியலில்’ சேர்க்குமா என்பதைப் பெறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 

 

Pin It