17வது மக்களவையின் முதலாம் கூட்டத்தொடர்

 

பத்திரிக்கையாளர் வி. மோகன் ராவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்    

 

நரேந்திர மோதியின் தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணியானது “அனைவருடன் –  அனைவரின் நம்பிக்கையோடு, அனைவருக்கும் மேம்பாடு” எனும் முழக்கத்தோடு  கடந்த மாதம் நடந்து முடிந்த பொது தேர்தலைச் சந்தித்து மாபெரும் வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளதைத் தொடர்ந்து, இந்த மாதம் 17 ஆம் தேதியன்று இந்திய  நாடாளுமன்றத்தின் 17 வது மக்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடர்  துவங்க உள்ளது.  கடுமையான கோடைக்காலத்தில் நாடு முழுதும் சுற்றிச் சுழன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் திரு நரேந்திர மோதி பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வர இருப்பதாக மக்களுக்கு உறுதி அளித்தார்.

புதிய மக்களவையானது ஜூன் 19 ஆம் தேதி சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க உள்ளது.  புதிய சபா நாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்காலிக சபா நாயகர் அவை செயல்பாடுகளை வழி நடத்துவார்.  மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பு சடங்கு முடிந்த பின்னர் ஜூன் 20 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள் இரு அவைகளின் கூட்டு அமர்வில் உரை நிகழ்த்துவார்.

ஜூலை 5ஆம் தேதியன்று 2019-20 ஆம் ஆண்டிற்கான யூனியன் பட்ஜட் மக்களவையில் சமர்ப்பிக்கப்படும்.   இரு அவைகளிலும் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்திற்குப் பின்னர் பட்ஜட் குறித்து அவையில்  விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.  ஐந்து வாரங்களுக்கும் மேல் நடைபெற உள்ள பட்ஜட் கூட்டத்தொடரானது ஜூலை 26ஆம் தேதி நிறைவு பெறுகிறது.  திரு மோதி அவர்களின் வெற்றிக்கு ஏழை மக்களுக்கு அவர் மேலிருக்கும் நம்பிக்கை ஒரு முக்கிய காரணமாகும்.    ஏழைகளுக்கு மருத்துவக் காப்பீடு,  வங்கிக் கணக்குகள் திறக்கவைத்தது,  விவசாயிகளுக்கு வருமான உதவி மற்றும் சமையல் எரிவாயு, மின்சார இணைப்புகள் வழங்கியது போன்ற ஏராளமான நலத்திட்டங்கள், அனைத்துப் பிரிவினரிடையேயும் அவருக்கு மிகப்பெரும் செல்வாக்கைப் பெற்றுத் தந்தது.   புல்வாமா, பாலாக்கோட் சம்பவங்களுக்குப் பின்னர், பாரதீய ஜனதா கட்சியானது திரு மோதியை வலுவான தேசியப் பாதுகாப்புக்காக தீர்க்கமாக முடிவெடுக்கக் கூடிய தலைவர் என்று முன்னிலைப்படுத்தியது.  நாடாளுமன்றத்தில் இம்முறை பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது.  கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் புதியதொரு வாக்காளர் பிரிவு உருவாகி உள்ளதை பிஜேபியின் வெற்றி கோடிட்டுக் காட்டுகிறது.

தேசிய அளவில் மிகத் தெளிவான முடிவுகள் கூறுவது என்னவென்றால் மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்பவில்லை என்பதே ஆகும்.  ஸ்திரத்தன்மையற்ற அரசு ஆட்சியையும், பொருளாதார்தத்தையும் பாதிக்கும் என்று நினைக்கும் வாக்காளார்கள்  தெளிவான குழப்பமற்ற நிலைப்பாடுடன் கூடிய ஒரு கட்சியையும், ஒரு தலைவரையுமே விரும்புகின்றனர் என்பதையும் இந்த முடிவுகள் காட்டுகின்றன.  மாநிலத் தேர்தல்களில் பிராந்தியக் கட்சிகளுக்குச் செல்வாக்கு இருக்கின்றது; ஆனால் தேசிய அளவில் அவற்றின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் இல்லை.  542 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சி 303 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 52 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.  தமிழ் நாட்டில் முக்கிய கட்சியாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகம் 23 இடங்களிலும், த்ரிணமூல் காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலா 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.  பிஜேபி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சிவசேனா,  ஒருங்கிணைந்த ஜனதா தளம், லோக் ஜன் சக்தி கட்சிகள் போன்றவை இணைந்து தேசிய ஜன நாயக கூட்டணி அரசின் ஆட்சியை அமைத்துள்ளன.

17வது மக்களவையில் 267 புதிய உறுப்பினர்கள் உள்ளனர்.  புதிய மக்களவையில் எப்போதும் இல்லாச் சாதனையாக 78 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்; அவர்களுள் 46 பேர் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக உள் நுழைந்துள்ளனர்.    சமீபத்தில் இலங்கைக்குச் சென்றிருந்த பிரதமர் திரு நரேந்திர மோதி அங்கு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில்,  2019 ஆம் ஆண்டு இந்திய மக்களவைக்கான தேர்தலில்,  மிகப் பெரும் அளவில் பெண் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.  மக்களவையில் இம்முறை 14.6 சதவிகிதம் பெண்மணிகள் உள்ளனர்.  இது வரை இல்லாத அளவில், மக்களவையில்  இம்முறை மிக அதிகமான மகளிர் பிரதிநிதிகள் நிறைந்துள்ளனர்.

பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த 25 வயதேயான சந்த்ராணி முர்மு புது அவையின் மிக இளம் உறுப்பினர் ஆவார்.  பழங்குடியினருக்கான கியோஞ்ச்ஹார் தொகுதியிலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு அடுத்து பிஜேபியின் மிக இளம் வயது மக்களவை உறுப்பினர் தெற்கு பெங்களூர் தொகுதியை சேர்ந்த 28 வயதான தேஜஸ்வி சூர்யா அடுத்த இடத்தைப் பிடிக்கிறார். ஜனவரி 2015 முதல் ஜனவரி 2018 வரை வெளியுறவுத் துறைச் செயலராகப் பணியாற்றிய திரு எஸ். ஜெய்ஷங்கரை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமித்து,  பிரதமர் அரசியல் உலகை ஸ்தம்பிக்க வைத்தார். திரு ஜெய்ஷங்கரின் அமைச்சர் பதவி நியமனமானது,  தொழில் நுட்ப வல்லுனர்கள்,  அரசின் உயர்பதவியில் இருப்போர்கள் போன்றோரும் ஆட்சியில் பக்கவாட்டிலிருந்து நுழையமுடியும் என்று காட்டியுள்ளது.  மோதி அணியானது அரசில் புதிய அணுகுமுறைகளுக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

மேலவைக்கான சமீபத்திய தேர்தலில் இரு உறுப்பினர்கள் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் இருவரும் ஜூன் 20 ஆம் தேதியன்று,   நாடாளுமன்றத்தின் கூட்டமர்விற்குப் பின் பதவி பிரமாணமேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

Pin It