நாளேடுகள் நவில்வன

இன்றைய நாளேடுகள், புலிகள் கணக்கெடுப்பில் செயலி வழி ஒருங்கிணைந்த கணிப்பு புதியதாக முயற்சிக்கப்படுவதை வரவேற்றும், அயல்நாட்டுத் தமிழ்ப் பத்திரிக்கைகள், பிரதமரின் அபுதாபி இந்துக் கோவில் அடிக்கல் நாட்டு விழாவைப் பற்றியும், நடப்பாண்டுக்கான இந்திய பட்ஜெட் குறித்துப் பாராட்டியும் தலையங்கம் தீட்டியுள்ளன.

தி பயோனியர் நாளிதழ், வனவிலங்கு நிறுவனத்தின் புதிய செயலிமுறை வழியிலான புலிகள் கணக்கெடுப்பு முயற்சி வரவேற்கத்தக்கது என தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலுள்ள புலிகளின் எண்ணிக்கையை வழக்கமான மனித முயற்சி, வீடியோ கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் கணிப்பது தவறானது என்றும் அதற்குப் பதிலாக இந்த செயலிவழி ஒருங்கிணைப்புச் செயல்பாட்டு முறையில் வனவிலங்கு நிறுவனம் கவனம் செலுத்துகிறது என்றும் அப்பத்திரிக்கை கூறியுள்ளது.

இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழ், பாரதப் பிரதமர் அபுதாபியில் இந்துக் கோயிலுக்கான அடிக்கல் நாட்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், “ ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகரான அபுதாபியில் முதல் முறையாக இந்து கோவில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி  நேற்று அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய பிரதமர் மோடி, ஜோர்டான், பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து ஐக்கிய அமீரகத்திற்கு நேற்று விஜயம் செய்துள்ளார்.  அங்கு பட்டத்து இளவரசர் முகம்மது பின் சயீத் அல் நய்ஹானைச் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதையடுத்து ரயில்வே எரிசக்தி, நிதி உள்ளிட்ட துறைகளில் இளவரசருடன் 5 ஒப்பந்தங்களைச் செய்துகொண்டார்.  அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்துக்கோவிலான ஸ்ரீ அக்‌ஷார் புருசோத்தம் ஸ்வாமிநாராயன் சன்ஸ்தா ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.” என்று எழுதியுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு நாளிதழ் அண்மையில், தனது தலையங்கத்தில், நடப்பாண்டுக்கான இந்திய பட்ஜெட் குறித்துப் பாராட்டி எழுதியுள்ளது. இந்திய பட்ஜெட் – கட்சிக்கும் தேவை, நாட்டுக்கும் அவசியம் என்ற தலைப்பிலான தலையங்கத்தில், “இந்தியாவில் பொதுத்தேர்தல் மூலம் பொது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு ஆட்சி அமைக்கும் எந்த ஓர் அரசாங்கமும் தனது உடனடி அரசியல் முன்னுரிமைகளுக்கும் ஒட்டுமொத்தப் பொருளியல் வளர்ச்சியைச் சாதிக்க,  தான் எடுக்கும் முயற்சிகளுக்கும் இடையில் செம்மையான ஒரு சமநிலையைக் காணவேண்டும் என்ற நோக்கத்தோடு தான் ஆண்டு தோறும் புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து வருகின்றன.

அந்த நாட்டில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடத்தும் இப்போதைய பாஜக அரசாங்கம், தன்னுடைய முழுமையான கடைசி நிதி நிலை அறிக்கையை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்தது. இது, பிரதமர் நரேந்திர மோதி அரசின் ஐந்தாவது வரவு செலவுத் திட்ட அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில், இந்த ஆண்டில் எட்டு மாநிலங்களுக்கும் அடுத்த ஆண்டு முற்பகுதியில் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தார். புதிய திட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இந்தியாவை மட்டுமின்றி உலகையே பிரமிக்க வைத்திருக்கிறது.

முந்தைய பிரதமர் வாஜ்பாய் தலைமை வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தமிழ்நாட்டின் சத்துணவுத் திட்டத்தைத் தேசிய அளவில் நடைமுறைப்படுத்த முயன்றதைப் போல, தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடப்பில் இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் இப்போது தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள அந்தத் திட்டம், 100 மில்லியனுக்கும் அதிக குடும்பங்களுக்கு ஆண்டுக்குத் தலா சுமார் $11,000 (ரூ.5 லட்சம் வரை) மருத்துவக் காப்பீட்டு வசதியை வழங்குகிறது. மாதச் சம்பளக்காரர்களுக்கு ரூ. 40,000 வருவாய் வரி விலக்கு, முதியோருக்கு வருமான வரிச் சலுகை, மருத்துவ உதவிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சுமார் 60 விழுக்காட்டினர் சிறிய, நடுத்தர நிறுவனங்களில் வேலை பார்த்துப் பிழைப்பு நடத்துகிறார்கள். இத்தகைய நிறுவனங்கள், பாஜக அரசாங்கம் நடப்புக்குக் கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றை மனதில் வைத்து இத்தகைய நிறுவனங்களுக்கு உரிய வரியை 5% அரசு குறைத்து இருக்கிறது.

அதே வேளையில், இந்த வருவாய் இழப்பை ஈடுசெய்ய பங்கு வர்த்தகத்தில் பெறப்படும் நீண்டகால மூலதன வருவாய்க்கு, இது வரை இல்லாதபடி 10% வரி அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயக் கடன்களுக்கு ரூ.11 லட்சம் கோடி, பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்காக ரூ.75,000 கோடி, மருத்துவம், கல்வி, சமூகப் பாதுகாப்புக்காக ரூ.1,38,000 கோடி, அடிப்படை வசதிகள் மேம்பட ரூ.5,97,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மின்னிலக்கத் துறை மேம்பாடு, கிராமங்களில் இலவச சமையல் எரிவாயு, மின்சாரம், கழிவறைகள் மேம்பாடு, மாநில அரசுகளோடு இணைந்து தரமான கல்வியை வழங்குவதற்கான திட்டம் எல்லாம் வரவுசெலவுத் திட்டத்தில் இருக்கின்றன.” என்று குறிப்பிட்டுள்ளது.

 

Pin It