செய்தித் துளி 2.30 pm

1) பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்காக விரிவான உதவித் தொகுப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார். பிரதான் மந்திரி கரீப் கல்யான் என்றழைக்கப்படும் இந்த உதவித் தொகுப்பின் மதிப்பு 1.7 லட்சம் கோடி ரூபாய்.

2) கொரோனா நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடி வருபவர்களுக்கு, அடுத்த மூன்று மாதங்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு.

3) பங்குச் சந்தைக்காக ஸ்திரமாக்கல் நிதி.

4) ஏழைகளுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு, இலவசமாக, கூடுதலாக 5 கிலோ அரிசி / கோதுமை; 1 கிலோ பருப்பு.

இது மாதாமாதம் வழங்கப்படும் ரேஷன் தவிர, கூடுதலாக அளிக்கப்படும். கூடுதலாக அளிக்கப்படும் தானியம், 2 தவணைகளில் வழங்கப்படும். இதனால்  வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 80 கோடி பேர் பயனுறுவர்.

5) வருடாந்திரத் தொகையான ரூ.6,000 த்தில், 2000 ரூ. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ஏப்ரல் முதல் வாரத்தில் செலுத்தப்படும்.

6) எம்என்ரேகா திட்டத்தின் கீழ் தினக்கூலி ரூ.202 ஆக உயர்த்தப்படும். இதனால் பயனாளிகளின் கையில் மேலும் ரூ.2,000/- கிடைக்கும். இதில் 5 கோடி பேர் பயனடைவர்.

7) வயதான, துணையிழந்த, மாற்றுத் திறனாளிகளுக்கு, அருட்கொடையாக, மாதம் ரூ. 1000 இரண்டு தவணைகளில் வழங்கப்படும். இதில் 3 கோடி பேர் பயனடைவர்.

8) அடுத்த மூன்று மாதங்களுக்கு, மாதம் ரூ.500 வீதம், ஜன் தன் யோஜனா பெண் பயனாளிகளுக்கு வழங்கப்படும். இதில் 20 கோடி பேர் பயனடைவர்.

9) உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயனுறும் 8 கோடி பேருக்கு, அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.

10) சுயசார்புக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு, தீன் தயாள் தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூ வரையிலான தொழில் கடனுக்கு, துணை அடமானத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 7 கோடி குடும்பங்கள் பயன் பெறும்.

11) நிறுவனம் சார்பிலும் தொழிலாளி சார்பிலும் அளிக்க வேண்டிய இரு பிராவிடண்ட் ஃபண்டு பங்கையும் சேர்த்து, அதாவது 24 சதம் (12% + 12%), அடுத்த மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு வழங்கும். இது, 100 பேருக்கும் கீழே தொழிலாளிகளைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு, அதிலும் 90 சதவிகிதம் 15,000 ரூ. மாத சம்பளமளிக்கும் நிறுவனங்களுக்குப் பொருந்தும். இதனால், 80 லட்சம் தொழிலாளர்களும், 4 லட்சம் நிறுவனங்களும் பயன் பெறுவர்.

12) தொற்றுநோய் காரணமாக, பிராவிடண்ட் ஃபண்டு விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்படும். அதன்படி, திருப்பியளிக்கத் தேவையில்லாத 3 மாத சம்பளத் தொகை அல்லது இருப்புத் தொகையில் 75 சதவிகிதம் ஆகியவற்றில் எது குறைவோ அத்தொகை தொழிலாளிகளுக்கு / பணியாளர்களுக்கு வழங்கப்படும். இதனால் 4.8 கோடி தொழிலாளிகள் பயனுறுவர்.

13) மத்திய அரசு, ரூ.31,000 கோடி அளவில் கட்டுமானத் தொழிலாளர் நல நிதியை ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளது. இதில், 3.5 கோடி கட்டுமானப் பணியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த நிதியைப் பயன்படுத்தி, இந்த நெருக்கடியான சமயத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உதவுமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

14) மாவட்ட அதிகாரிகளிடம் உள்ள மாவட்டக் கனிம நிதியைப் பயன்படுத்தி, கனிமத்துறையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை மற்றும் இதர உடல்நலம் குறித்த நடவடிக்கைகளுக்குச் செலவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Pin It