73வது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு மேதகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தி.

      14.8.19, CA, 8 PM, TAMIL TRANSLATION OF PRESIDENT'S ADDRESS

73வது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு மேதகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியின் தமிழாக்கம்.

அன்பான சககுடிமக்களே,

நமது 73ஆவது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு நான் உங்களுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நாட்டிலும், அயல்நாடுகளிலும் வாழும் அன்னை இந்தியாவின் அனைத்துக் குழந்தைகளுக்கும் இது ஒரு சந்தோஷமான, உணர்ச்சிபூர்வமான நன்னாள்.  காலனியாதிக்கத்தின் பிடியிலிருந்து நமக்கு சுதந்திரம் பெற்றுத் தர சாகஸமான தியாகங்கள் புரிந்த எண்ணற்ற சுதந்திரப் போராளிகள், புரட்சியாளர்கள் அனைவரையும் நன்றியோடு நாம் நினைத்துப் பார்க்கிறோம்.

ஒரு சுதந்திர நாடாக 72 ஆண்டுகளை ஒரு விசேஷமான காலகட்டத்தில் நாம் நிறைவு செய்கிறோம்.  இன்னும் சில வாரங்களில், அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று நாம் தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறோம்; அண்ணல் தாம், நமது நாட்டுக்கு விடுதலையைப் பெற்றுத்தந்த வெற்றிகரமான முயற்சிகளுக்கும், நமது சமூகத்தில் இருக்கும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் சீர்திருத்தும் நமது தொடர் முயற்சிகளுக்கும், வழிகாட்டு விளக்காகத் திகழ்கிறார்.

சமகால இந்தியா, காந்தியடிகள் வாழ்ந்து பணியாற்றிய இந்தியாவை விடப் பெருமளவு மாறுபட்டது.  இருந்தாலும் கூட, காந்தியடிகள் மிகவும் பொருத்தமானவராகவே இன்றும் இருக்கிறார்.  நீடித்ததன்மை, சூழல் முக்கியத்துவம், இயற்கையோடு இசைவாக வாழ்தல் போன்றவற்றை போதிக்கும் அவரது கோட்பாடுகளில், அவர் நமது காலகட்டங்களின் தீவிரமான சவால்களை முன்கூட்டியே அறிந்திருந்தார்.  நாம் நமது பின்தங்கிய சக குடிமக்கள் மற்றும் குடும்பங்களுக்கான நலவாழ்வுத் திட்டங்களை வடிவமைத்து அளிக்கும் வேளையிலும், புதுப்பிக்கவல்ல ஆற்றலாக சூரியனின் சக்தியை நாம் திரட்ட முயலும் போதும், நாம் காந்தியடிகளின் தத்துவத்தை செயல்படுத்துகிறோம்.

அனைத்துக் காலங்களிலும் மிக செல்வாக்குடைய இந்தியர்களில் அதிக மகத்துவமும், ஞானமும் உடையவர்களில் ஒருவரான குரு நானக் தேவ் அவர்களின் 550ஆவது பிறந்த ஆண்டுக் கொண்டாட்டங்களையும் இந்த ஆண்டு குறிக்கிறது.  இவர் தான் சீக்கிய தர்மத்தின் நிறுவனர். ஆனால் அவர் பொருட்டு அனைவர் மனங்களில் இருக்கும் மரியாதையும், பக்தியும், நமது சீக்கிய சகோதர சகோதரிகளைத் தாண்டி இந்தியாவிலும், உலகிலும் அனைவரிடத்திலும் இருக்கிறது.  இந்தப் புனிதமான வேளையில், நான் அவர்களனைவருக்கும் என் சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சக குடிமக்களே

அரசியல் சக்தியின் மாற்றம் என்பது மட்டுமே, நம்மை சுதந்திரத்தை நோக்கி இட்டுச் சென்ற மகோன்னதமான தலைமுறையின் நோக்கமாக இருக்கவில்லை.  தேசத்தை ஒன்றிணைப்பது, தேசத்தை உருவாக்குவது என்ற நீண்ட பெரிய செயல்பாட்டின் ஒரு படிக்கல்லாகவே அவர்கள் அதைப் பார்த்தார்கள்.  ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கை, ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கை தவிர, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மேம்படுத்துவது தான் அவர்கள் குறிக்கோளாக இருந்தது.

இந்தப் பின்புலத்தில் பார்க்கையில், ஜம்மு கஷ்மீரம் லடாக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அண்மைக்கால மாற்றங்கள், அந்தப் பகுதிகளுக்குப் பெரும் ஆதாயங்களை ஏற்படுத்தும் என நான் உறுதிபட நம்புகிறேன்.  நாட்டின் பிற பாகங்களில் இருக்கும் அவர்களின் சக குடிமக்களைப் போலவே, அதே உரிமைகள், அதே சலுகைகள், அதே வசதிகளைப் பெறவும், அனுபவிக்கவும், இது அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.  கல்வியுரிமை, தகவல் அறியும் உரிமை வாயிலாக பொதுத் தகவல்கள் பெறுதல், பாரம்பரியமாக மறுக்கப்பட்ட சமூகத்தினருக்குப் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பிறவசதிகளிலும் ஒதுக்கீட்டை உறுதிசெய்தல், உடனடி முத்தலாக்கு போன்ற சமத்துவமற்ற பழக்கங்களைத் தடை செய்து, நமது பெண்களுக்கு நீதி வழங்கல், போன்ற முற்போக்கான, சமத்துவச் சட்டங்களும் ஷரத்துக்களும் இதில் அடங்கும்.

முன்னதாக, இந்தக் கோடையில், இந்தியர்கள் 17ஆவது பொதுத் தேர்தலில் பங்கெடுத்தார்கள். இது மனித வரலாற்றிலேயே மிகப் பெரிய ஜனநாயகச் செயல்பாடாகப் பதிவு செய்யப்பட்டது.  இதன் பொருட்டு, நான் நமது வாக்காளர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவர்கள் பெரிய எண்ணிக்கையில் அதிக உற்சாகத்தோடு வாக்குச் சாவடிகளுக்கு வந்து, தங்கள் வாக்குரிமையையும் வாக்களிக்கும் பொறுப்பையும் நிலைநாட்டினார்கள்.

ஒவ்வொரு தேர்தலும் ஒரு புதிய தொடக்கத்தைப் பதிவு செய்கிறது.  இந்தத் தேர்தல்களின் வாயிலாக இந்தியாவின் ஒட்டுமொத்த நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்களைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள். இந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும், 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியோடு நாம் ஒப்பிடலாம் என்றே நான் கருதுகிறேன்.  நமது நேசத்துக்குரிய தேசத்தைப் புதிய சிகரங்களை நோக்கி இட்டுச் செல்ல, இந்தியாவில் இருக்கும் நாமனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்த வகையில், அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும், நீண்ட, ஆக்கப்பூர்வமான அமர்வுகள் நடந்தேறின என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.  ஆக்கப்பூர்வமான விவாதங்கள், கட்சிகளைக் கடந்த ஒத்துழைப்பு உணர்வு ஆகியவை வாயிலாக பல முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.  வரவிருக்கும் 5 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதற்கான ஒரு குறிகாட்டியே இது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  இதே கலாச்சாரம் நமது அனைத்து சட்டப்பேரவைகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் மேலும் வலியுறுத்துகிறேன்.

இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?  தேர்தெடுக்கப்பட்டவர்கள், வாக்காளர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்பதால் மட்டும் இது முக்கியமானது அல்ல.  தேசத்தைக் கட்டமைப்பது என்ற ஒரு தொடர் செயல்பாட்டில், சுதந்திரம் என்பது ஒரு முக்கியமான மைல்கல்; இதில் ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு பங்குதாரரும் ஒருங்கிணைந்து செயல்படத் தேவை, ஒத்திசைவோடு பணியாற்றுவது தேவை, ஒற்றுமையாகப் பணிபுரிவது தேவை என்பதாலும் இது முக்கியமானது.  நாட்டை உருவாக்குவது என்பது, வாக்காளர்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும், குடிமக்களுக்கும் அவர்களின் அரசாங்கத்துக்கும், சிவில் சமூகத்திற்கும் நாட்டிற்கும் இடையேயான உகந்த உறவை ஏற்படுத்துவது தொடர்பானது.

நாடும் அரசும் இதிலே ஊக்குவிப்புகளாக, உதவிபுரிபவைகளாக செயல்படும் முக்கியமான பங்காற்றுகின்றன.  நமது குடிமக்கள் தெரிவிக்கும் செய்திகளுக்கும், நமது மக்களின் எண்ணங்கள் விருப்பங்களுக்கும், நமது முக்கியமான அமைப்புக்களும், கொள்கை வடிவமைப்பாளர்களும் செவிசாய்க்க வேண்டும், அவற்றை ஆய்வு செய்து புரிதலோடு அணுக வேண்டும், இது முக்கியம்.  நாட்டின் குடியரசுத் தலைவர் என்ற முறையிலே, நமது நாடெங்கிலும் இருக்கும் பல்வேறு மாநிலங்கள் பகுதிகளுக்கும் பயணித்து, அனைத்துத் தரப்பு மக்களையும் சந்திப்பது என்பதை, நான் என் பேறாகவே கருதுகிறேன்.  இந்தியர்களின் விருப்பங்களும் பழக்கங்களும் வேறானவையாக இருக்கலாம், ஆனால் இந்தியர்கள் தங்கள் நெஞ்சங்களில் தாங்கும் கனவுகள் ஒன்றே.  1947ஆம் ஆண்டுக்கு முன்பாக, ஒரு சுதந்திர இந்தியா பற்றிய கனவுகளே நிறைந்திருந்தன.  இன்று, விரைவுகூட்டப்பட்ட முன்னேற்றம், திறமையான, ஒளிவுமறைவற்ற ஆளுகை, மேலும் நமது தினசரி வாழ்க்கையில் அரசாங்கத்தின் குறைவான கால்தடம் ஆகியவையே அவர்கள் காணும் கனவுகள்.

இந்தக் கனவுகளை நிறைவேற்றுவது மிக முக்கியமானது.  மக்கள் தேர்தல்கள் வாயிலாக அளித்திருக்கும் தீர்ப்பு அவர்களின் எதிர்பார்ப்புக்களை தெளிவுபடுத்துகிறது.  அரசாங்கத்தின் பங்குபணி இன்றியமையாததாக இருக்கும் அதே வேளையில், 130 கோடி இந்தியர்களின் திறன், செயல்திறம், புதுமைகள் படைத்தல், படைப்பாற்றல், தொழில்முனைவு ஆகியவற்றில் தான் அதிக வாய்ப்பும் திறமையும் இருக்கிறது என்பதே என் ஆணித்தரமான கருத்து.  இந்த இயல்புகள் ஒன்றும் புதியவை அல்ல. இவை தாம் இந்தியாவை இயக்கியவை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது நாகரீகத்துக்கு ஊட்டமளித்து வந்துள்ளவை.  நமது மக்கள் இடர்ப்பாடுகளையும் சவால்களையும் சந்தித்த காலகட்டங்கள் உண்டு.  அத்தகைய வேளைகளிலும் கூட, நமது சமுதாயம் வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாக விளங்கியது; சாதாரணக் குடும்பங்கள் கூட அசாதாரணமான தைரியத்தை வெளிப்படுத்தினார்கள்; மனவுறுதி படைத்த தனிநபர்கள் உயிர்பிழைக்கவும், தழைக்கவும் தேவையான பலத்தை அடைந்தார்கள்.  இன்று தோதான, இணக்கமான சூழலை அரசு அளித்துவரும் வேளையில், நம் மக்களால் எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

அனைவரையும் உள்ளடக்கிய வங்கிமுறை, இணையவழி நேசமான ஒரு வரியமைப்பு முறை, நேர்மையான தொழில்முனைவோருக்கு முதலீட்டுக்கான எளிய அணுகல் என்ற வழிகளில், நிதிசார் கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கி வருகிறது.  மிகவும் ஏழ்மையில் வாடுவோருக்கு வீடுகள், அனைத்து இல்லங்களுக்கும் எரிசக்தி, கழிப்பறைகள், தண்ணீர் வசதிகள் போன்றவற்றிற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் உருவாக்கி வருகிறது.  நாட்டின் சில பகுதிகளில் வெள்ளங்களும் பேரிடர்களும் என்றால் வேறு சில பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு என்ற இந்த முரண்பாட்டை எதிர்கொள்ள அரசாங்கம் அமைப்புரீதியான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.  பாதுகாப்பான, விரைவான ரயில்கள், மேலும் சிறப்பான, அகலமான நெடுஞ்சாலைகள், நாட்டின் உட்பகுதிகளில் விமான நிலையங்கள், நமது கரையோரங்கள் எங்கும் துறைமுகங்கள் போன்ற இணைப்புக் கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கி வருகிறது.  இவை தவிர டிஜிட்டல் இந்தியாவின் ஆதாயங்கள் எளிய குடிமக்களையும் சென்றடைய அனைவருக்குமான தரவு அணுகல் என்பதும் முக்கியமானது, இதையும் அரசு கொண்டு சேர்ப்பதில் ஈடுபட்டு வருகிறது.

முழுமையான உடல்நலப் பராமரிப்புத் திட்டம், நமது திவ்யாங்க் என்ற மாற்றுத் திறனாளி சக குடிமக்களுக்குத் தேவையான வசதிகள்-ஏற்பாடுகளை பிரதானப்படுத்தும் வகையில் அரசாங்கம் சமூகக் கட்டமைப்பினை உருவாக்கி வருகிறது.  பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் வகையில் சட்டங்கள் இயற்றல், வழக்கொழிந்த சட்டங்களை அகற்றி நமது மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கல் போன்ற வழிகளில் அரசாங்கம் சட்டரீதியான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.

ஆனால், இவற்றால் விளையும் பலன்களைத் தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் பயன்படுத்தி இந்தக் கட்டமைப்பை வளப்படுத்தும் அதே வேளையில், சமூகத்துக்கும் நம்மனைவருக்கும் நலன்பயக்கும் வகையில் சமூகமும் குடிமக்களும் இதைப் பயன்படுத்துவது தான் மிக முக்கியமான விஷயம்.

எடுத்துக்காட்டாக, பெரிய சந்தைகளுக்குத் தங்கள் உற்பத்திப் பொருட்களைக் கொண்டு சென்று அவற்றுக்கு மேம்பட்ட விலைகள் விவசாயிகளுக்குக் கிடைத்தால் தான் ஊரகப்பகுதி சாலைகள், சிறப்பான இணைப்பு ஆகியவற்றிற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது.  நமது தொழில்முனைவோர் – அவர்கள் சிறிய ஸ்டார்ட் அப்புகளாக இருந்தாலும் சரி, பெரிய தொழிலதிபர்களாக இருந்தாலும் சரி, நிதிசார் சீர்திருத்தங்களையும், சுலபமான விதிமுறைகளையும் பயன்படுத்தி நேர்மையான, நூதனமான நிறுவனங்களை ஏற்படுத்தி, நீடித்த வேலைகளை உருவாக்கினால் தான் இவற்றுக்கு ஒரு பலன் இருக்கும்.  இந்தியப் பெண்களுக்கு அதிகாரம் வழங்கி, அவர்களின் கண்ணியத்தை மேம்படுத்தி, அவர்களின் கனவுகளை மெய்ப்பிக்க உதவினால் தான் அனைவருக்குமான கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.  தாய்மார்களாகவோ, இல்லத்தரசிகளாகவோ, தொழில் வல்லுனர்களாகவோ, தனிநபர்களாகவோ தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயம் செய்து கொண்டு, தாங்கள் விரும்பியமைத்துக் கொண்ட இலட்சியங்களை அவர்கள் வாழ வேண்டும்.

இந்தியாவின் மக்களாகிய நம்மனைவருக்கும் சொந்தமான இத்தகைய கட்டமைப்பைப் போற்றிப் பாதுகாப்பது என்பது, பல கடினங்களுக்குப் பிறகு பெறப்பட்ட சுதந்திரத்தைப் பத்திரப்படுத்துவதாகும்.  குடிமை உணர்வுள்ள இந்தியர்கள் இத்தகைய வசதிகள், இத்தகைய கட்டமைப்புகளை மதித்து, அவற்றுக்குப் பொறுப்பேற்கிறார்கள்.  அவர்கள் அப்படிச் செய்யும் போது, நமது இராணுவம், துணை இராணுவப்படைகள், நமது காவல்துறையினராகப் பணியாற்றும் துணிவுநிறை ஆண்களும் பெண்களும் வெளிப்படுத்தும் அதே உணர்வையும், உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறார்கள்.  எல்லைப் புறங்களில் நீங்கள் நமது நாட்டைக் காத்தாலும் சரி, அல்லது கடந்து செல்லும் ரயில் மீதோ, வேறு ஏதாவது ஒரு பொதுச்சொத்தின் மீதோ கல்லெறியும் கையைத் தடுத்தாலும் சரி – ஏதோ ஒரு வகையில் நீங்கள் பகிரப்பட்ட ஒரு செல்வத்தைப் பாதுகாக்கிறீர்கள் என்று பொருள்.  இது சட்டங்களை மதித்து நடத்தல் என்பது மட்டுமல்ல; இது நமக்குள்ளே இருக்கும் மனச்சாட்சியின் குரலுக்கு பதிலளிப்பது.

சக குடிமக்களே,

நாம் நமது தேசத்தின் அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரம் பற்றிப் பேசும் போது, நமது பரஸ்பர நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.  மற்றவர்கள் எப்படி நம்மை மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அதே போலத் தான் நாமும் மற்றவர்களையும் நடத்த வேண்டும்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நமது வரலாற்றில் நமது சமுதாயம் எந்த வகையான தீய எண்ணத்தோடும், கெடுமதியோடும் செயல்பட்டதே கிடையாது.  ஒருவரோடு ஒருவர் இணக்கமாக இருப்பது, சமத்துவத்துக்கு மகத்துவம் அளிப்பது, சகோதரத்துவத்தைப் பேணுவது, தொடர்ந்து தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்வது ஆகியன தான் நமது வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் அடிப்படைக் கூறாக இருந்து வந்திருக்கிறது. நமது வருங்காலத்தைத் தீர்மானம் செய்வதிலும் இவற்றுக்குத் தான் முக்கியமான பங்களிப்பு இருக்கும்.  நாம் மற்றவர்களின் நல்ல கருத்துக்களையும் கூட மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.  எப்போதுமே பரந்த மனப்பான்மையையே நமது அடையாளமாகக் கொண்டிருக்கிறோம்.

இந்தக் கூட்டு உணர்வைத் தான் நாம் நமது ராஜீய முயல்வுகள் வாயிலாக கொண்டு சேர்க்கிறோம். நமது அனுபவங்கள், நமது பலங்களை, ஒவ்வொரு கண்டத்திலும் இருக்கும் நமது கூட்டாளி நாடுகளோடு நாம் பகிர்ந்து கொள்கிறோம். உள்நாட்டிலும் சரி அயல்நாடுகளிலும் சரி, உள்நாட்டு விவாதங்களிலும் சரி, அயலுறவுக் கொள்கையிலும் சரி, இந்தியாவின் மாயாஜாலத்தையும், தனித்தன்மையையும் பற்றிய விழிப்போடு எப்போதும் நாம் இருக்க வேண்டும்.

நாம் ஒரு இளம் நாடு, நமது இளைஞர்களால் அதிக அளவில் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்படும் ஒரு சமூகம்.  விளையாட்டு முதல் அறிவியல் வரை, கல்வி உதவித்தொகை முதல் மென்திறன்கள் வரை, நமது இளைய சமூகத்தின் ஆற்றல்கள் பல்வேறு திசைகளில் நெறிப்படுத்தப்படுகின்றன.  இது நெஞ்சுக்கு நிறைவை அளிக்கும் அதே வேளையில், நமது இளம் மற்றும் வருங்கால தலைமுறைகளுக்கு அளிக்கக்கூடிய மிகப்பெரிய வெகுமதி என்ற ஒன்றைக் கூற வேண்டுமென்றால், குறிப்பாக வகுப்பறைகளில் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடிப்புக் கலாச்சாரத்தை அமைப்புமுறையாக்கி அதற்கு ஊக்களிப்பது தான்.  நாம் நமது குழந்தைகள் கூறுவதற்கு காது கொடுப்போம் – அவர்கள் வாயிலாக எதிர்காலம் நம் காதுகளில் கிசுகிசுக்கும்.

மிக ஈனசுவரத்தில் ஒலிக்கும் குரலைக்கூடக் கேட்கும் திறனைஇந்தியா என்றும் இழக்காது என்பதை, நான் மிகுந்த நம்பிக்கையோடும் உறுதிப்பாட்டோடும் தெரிவிக்கிறேன்;  இது தன் பண்டைய ஆதர்சங்களை விட்டு என்றுமே விலகாது; தனது நீதி உணர்வையும், தனது சாகஸப் போக்கையும் என்றுமே இது மறக்காது.  இந்தியர்களான நாம் நிலவையும், செவ்வாயையும் ஆய்வு செய்யத் துணிந்தோம்.  இயற்கையோடும், அனைத்து உயிரினங்களோடும் இசைவாக வாழ்தல் என்பது, நமது இந்தியத்துவத்தின் இயல்பு என்பதால், நமது நிலவுலகில் இருக்கும் நான்கில் மூன்று வனம்வாழ் புலிகளுக்கென, நேசமான புகலிடத்தை ஏற்படுத்தியவர்கள் நாம்.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக உத்வேகம் நிறைக்கும் கவிஞரான சுப்பிரமணிய பாரதி அவர்கள் நமது சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கும் அதன் விரிவான இலட்சியங்களுக்கும் வரவிருக்கும் வரிகள் வாயிலாகக் குரல் கொடுத்தார்.

மந்திரம் கற்போம் வினைத்தந்திரம் கற்போம்;
      வானையளப்போம் கடல் மீனையளப்போம்; 
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்;
 
சந்தி தெருப்பெருக்கும்  சாத்திரம் கற்போம்.

சககுடிமக்களே,

இந்த இலட்சியங்கள் கற்கவும், கேட்கவும், மேலும் சிறக்கவும் நமக்குத் துணை புரியட்டும்; ஆர்வத்துடிப்பும், சகோதரத்துவமும் நம்மோடு என்றும் உறையட்டும்.  அது என்றும் நமக்கு ஆசிகள் நல்கட்டும், நம் இந்தியத் திருநாட்டை வாழ்த்தட்டும்.

இத்துடன் நான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் சுதந்திரத் திருநாளை முன்னிட்டு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!! ஜெய் ஹிந்த்!!

 

 

 

Pin It